You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் பேரணி: 'நாங்கள் ஏன் விவசாயிகள் போராட்டத்துக்கு வந்தோம்?' - பெண்கள் சொல்லும் காரணங்கள்
- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
வேளாண் தொழிலில் இருப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கடனில் இருந்து விடுதலை செய்வதை உறுதி செய்யும் சிறப்புச் சட்டம் ஆகிவற்றை நிறைவேற்றவும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை என்று அறியப்படும் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் அறிக்கையை விவாதித்து அதன் பரிந்துரைகளை நிறைவேற்றவும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி நவம்பர் 30, 2018, வெள்ளிக்கிழமை டெல்லியில் பல்லாயிரம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்று பிபிசி தமிழுடன் உரையாடிய சில பெண்களைப் பற்றி இங்கே பதிவு செய்கிறோம்.
கங்கையம்மா, 75, ஆந்திர மாநிலம்.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினபட்டினம் மாவட்டத்தில் உள்ள கஜபதிநகரம் எனும் கிராமத்தில் இருந்து வந்துள்ளார் 75 வயதான கங்கையம்மா.
"எங்கள் ஊரில் இருப்பவர்கள் இந்தப் பேரணிக்காக வருவது தெரிந்ததும் அவராகவே விரும்பி எங்களுடன் பிடிவாதமாக வந்துள்ளார். மூன்று நாட்களாக நல்ல உறக்கம் இல்லை. உணவு இல்லை. பயணம் மிகவும் களைப்பானதாக இருந்தது," என அவருடன் வந்தவர்கள் பிபிசியிடம் கூறினார்கள்.
எதற்காக டெல்லி போராட்டம்? விளக்கும் விவசாயிகள்
"என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. பல ஆண்டுகளாக விவசாயம் பார்த்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் விளைவித்த எல்லாமே தொடர்ந்து இழப்பையே உண்டாக்கியுள்ளன," என்று கூறுகிறார் உடல் சோர்வின் காரணமாக பேரணியில் இருந்து விலகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த கங்கையம்மா.
"என் கிராமத்தில் இருந்து இங்கு வர நான்கு நாட்கள் ஆனது. ரயிலில் வந்தோம். சரியான உணவு, தூக்கம் இல்லை. இங்கு அதிகமான குளிர் இருக்கிறது," என்று கூறும் கங்கையம்மாவிடம் குளிரைப்போக்கும் ஆடை எதுவும் இல்லை. அவர் சார்ந்திருக்கும் விவசாய சங்கத்தின் தொப்பி மற்றும் டீ-ஷர்ட்தான் டெல்லியின் குளிரில் இருந்து அவரைப் பாதுகாக்கின்றன.
மல்லிகா, 47, தமிழ்நாடு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குளக்கடிப்பட்டி கிராமத்தில் இருந்து வந்திருக்கும் மல்லிகா எனும் பெண் விவசாயி பிபிசி தமிழிடம் தன் நிலையை பகிர்ந்துகொண்டார்.
"எனக்குத் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகின்றன. தாலியை அடமானம் வைத்து 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதனை திருப்ப முடியவில்லை." என்கிறார் வேதனையுடன்.
மல்லிகா குடும்பத்திடம் ஐந்து ஏக்கர் நிலம் இருந்தும் மூன்று போகமும் வேளாண்மை செய்ய முடியாத காரணத்தால், நிலத்தில் பயிரிடப்படாத காலங்களில் விவசாயக்கூலிகளாகவும், 'நூறு நாள் வேலை' என்று பரவலாக அறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தின்கீழ் மல்லிகா மற்றும் அவரது கணவர் வேலைப்பார்த்து வருகின்றனர்.
"இதுவரை நான் 10 பவுன் நகையை இழந்திருக்கிறேன். பொதுத்துறை வங்கியில் இன்னும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் உள்ளது. கடன் தள்ளுபடியில் பொதுத்துறை வங்கிகள் வராது. அதனால், எங்களுக்கு தள்ளுபடி கிடைக்காது. கிராம கடன் சங்கங்களிலும் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது." என்று கூறும் போதே தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்கிறார்.
மொழிகள் வேறு முழக்கம் ஒன்று - டெல்லியை அதிரவைத்த விவசாயிகள்
"என் மகள் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். முடித்துவிட்டு பொறியியல் படிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால், எங்களுடைய குடும்ப சூழலால் அவள் விரும்புவதை படிக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை," என்கிறார் கண்ணீர் மல்க.
"கல்விக்கடன் வாங்கலாம். ஆனால், ஏற்கனவே அதிக கடன் இருப்பதால், கல்விக்கடன் கிடைப்பதும் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. எனக்கென்று இல்லை, எல்லா விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது, " என்கிறார் அவர்.
ராணியா, சாவித்ரி மற்றும் டிஜானா, 18, கேரளா.
18 வயதாகும் ராணியா, சாவித்ரி மற்றும் டிஜானா ஆகியோர் கேரளாவில் இருந்து வந்து டெல்லியில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு படிப்பவர்கள். டெல்லியில் விவசாயிகள் பேரணி நடப்பதை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக, அதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களில் இவர்களும் அடக்கம்.
"எங்களுக்கு இந்தி அவ்வளவாகத் தெரியாது. நாங்கள் எந்த மாணவர் அமைப்பிலும் உறுப்பினராகவும் இல்லை.இங்கு கூடியுள்ள விவசாயிகளின் கோஷங்களை எங்களால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், விவசாயிகளின் இன்னல்களை எங்களால் புரிந்துகொள்ள முடியும்," என்கிறார் ராணியா.
நவம்பர் 29 முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த விவசாயிகள், போராட்டத்தின் தொடக்க இடமான ராம் லீலா மைதானத்தில் செல்வதற்கு, அங்கு அவர்கள் இரவைக் கழிக்கவும், உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டதில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கும் முக்கியமானது.
சுமித்ரா தேவி, 70, பாட்னா.
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து வந்திருந்தார் சுமித்ரா தேவி. தமது வயது சுமாராக 70 இருக்கலாம் என்று கணிக்கிறார். சரியான வயது என்னவென்று தெரியவில்லை.
சுமித்ரா தேவி ஒரு விவசாயி அல்ல. அவர் ஒரு நிலமற்ற விவசாயத் தொழிலாளி.
"பெரும்பாலும் கோதுமை மற்றும் காய்கறிகள் பயிரிடும் வயல்களில் கூலி வேலைக்குச் சென்று வந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரும் அதிகமாக வேளாண்மை செய்வதில்லை என்பதால் எனக்கு வாழ்வாதாரம் பாதித்துள்ளது. விவசாயம் இல்லாவிட்டால் எனக்கு வாழ்வாதாரமும் இல்லை. அதனால் இரண்டுநாட்கள் பயணித்து இங்கு வந்துள்ளேன்," என்கிறார் சுமித்ரா.
குளிரில் இருந்து காக்கும் ஆடைகள் எதையும் அவர் கொண்டு வரவில்லை. இரவில் திறந்தவெளியில் தங்கியிருந்தததால் லேசான காய்ச்சல், முதுமையின் காரணமாக நடக்கத் தேவைப்படும் ஊன்றுகோல், முகத்தில் நிரம்பியிருந்த புன்னகை ஆகியவற்றுடன் பேரணியில் நடக்கத் தொடங்கினார் சுமித்ரா.
பிரியங்கா, 21, டெல்லி.
இந்தப் போராட்டத்தில் வேளாண் தொழிலுடன் நேரடியாகத் தொடர்பில்லாதபோதிலும், பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டவர்கள்.
அவர்களில் ஒருவர்தான் 21 வயதாகும் பிரியங்கா. டெல்லியில் உள்ள குடிநீர் சுத்தீகரிப்பு ஆலை ஒன்றில் பணியாற்றும் தனது சக ஊழியர்கள் சுமார் 20 பேருடன் வந்து கலந்துகொண்டார் பிரியங்கா.
பிபிசியிடம் பேசிய அவர், "நாங்கள் ஆலைத் தொழிலாளர்களாக இருந்தாலும், டெல்லியில் விவசாயிகள் பேரணி நடப்பதால் இங்கு வரும் விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவைத் தர நாங்கள் வந்துள்ளோம், " என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்