You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதாக டிரம்ப் முன்னாள் வழக்குரைஞர் ஒப்புதல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற விசாரணையில் தாம் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் மைக்கேல் கோஹன் (52).
மாஸ்கோவில் உள்ள டிரம்பின் ரியல் எஸ்டேட் திட்டம் ஒன்று குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார். அதிபர் டிரம்பின் மீதுள்ள விசுவாசத்தால் இவ்வாறு செய்து விட்டதாகவும் கோஹன் தெரிவித்துள்ளார்.
மான்ஹாட்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் ஒன்றில் வியாழக்கிழமை எதிர்பாராத வகையில் ஆஜரான கோஹன் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதன் மூலம் தாம் குற்றமிழைத்ததாக ஒப்புக்கொண்டார்.
இதைப்போலவே, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்புடன் பாலியல் உறவில் இருந்ததாக கூறப்பட்ட பெண்களை சமாதானப்படுத்துவதற்காக ரகசியமாக பணம் தந்த விவகாரத்தில் தாம் ஈடுபட்டதாகவும் அதன் மூலம் நிதி தொடர்பான சட்டங்களை மீறிவிட்டதாகவும் இந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்புக்கொண்டார் கோஹன்.
அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டு டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் டிரம்போ, அவரது உள்வட்டாரமோ ரஷ்யாவுடன் ரகசியமாக சேர்ந்து செயல்பட்டார்களா என்பது பற்றி அமெரிக்க நீதித்துறையின் சிறப்பு வழக்குரைஞர் நடத்தி வரும் விசாரணையில் வியாழக்கிழமை கோஹன் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.
புய்னஸ் ஏர்ஸில் நடக்கும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்குச் செல்வதற்காக வெள்ளை மாளிகையில் இருந்து கிளம்பிய டிரம்ப் அங்கிருந்த செய்தியாளர்களிடம், கோஹன் வாக்குமூலம் குறித்துப் பேசினார்.
"கோஹன் ஒரு பலவீனமான நபர். அவர் திறமையானவர் அல்ல. தண்டனையை குறைவாகப் பெறுவதற்காக அவர் பொய் சொல்கிறார்" என்று அப்போது தெரிவித்தார் டிரம்ப்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்