You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
17 வயது ஆணை மணந்த 20 வயது பெண் குழந்தையுடன் மும்பையில் கைது
17 வயது ஆணை மணந்த 20 வயது பெண்ணை மும்பை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த பெண்ணும், தம்பதியரின் 5 மாத குழந்தையும் கடந்த 2 வாரமாக சிறையில் உள்ளனர்.
ஆணின் தாய் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த பெண் கைது செய்யப்பட்டார். இவர் மீது குழந்தை பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் உறவு இருமன சம்மத்தோடு அமைந்தது என்று தெரிவிக்கும் இந்த பெண், தனது கணவன் வயது குறைந்தவர் என்பதையும் மறுக்கிறார்.
இந்தியாவில் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கத் தகுதியுள்ள வயது எல்லா பாலினத்தவருக்கும் 18. எனினும் திருமணம் செய்துகொள்ள சட்டபூர்வ தகுதி பெண்ணுக்கு 18 வயதிலும், ஆணுக்கு 21 வயதிலும் வரும்.
எனவே, குழந்தைகள் திருமண தடை சட்டத்திலும் இந்த பெண் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
வயது குறைந்த ஆணை மணந்ததற்காக பெண்ணை கைது செய்திருப்பது அரிதாக நிகழ்ந்துள்ளது என்று பிபிசியின் செய்தியாளர் கீதா பாண்டே தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கும் கீழுள்ள பெண்களின் பெற்றோர் வழங்கிய புகார்களுக்கு பின்னர், இருமன சம்மதத்தோடு வாழ்ந்து வந்த இளம் ஆண்கள் கைது செய்யப்பட்டிருக்கும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தனது மகனை கடத்தி சென்று, திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளதாக இந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் குற்றஞ்சாட்டி, பதின்ம வயதினரான ஆணின் தாய் கடந்த டிசம்பர் மாதம் காவல்துறையில் புகார் அளித்தார் என்று மும்பை காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் பெண் என்பதால், இது பற்றி முழுமையான விசாரணை நடத்தி, சட்ட ஆலோசனை பெற்ற பின்னர்தான் இந்த பெண்ணை கைது செய்திருப்பதாக அவர் கூறினார்.
தனது மகன் இந்த பெண்ணோடு 2 ஆண்டுகள் தொடர்பில் இருந்ததாகவும், தன்னை சந்திப்பதை அவன் நிறுத்திவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும் இந்த ஆணின் தாய் அளித்திருக்கும் புகாரில் தெரிவித்திருக்கிறார்.
தனது கணவர் 18 வயதுக்கும் அதிகமானவர் என்றும், தங்களின் உறவு இருமன சம்மதத்துடன் அமைந்தது என்றும் தெரிவித்து இந்த பெண் பிணை பெறுவதற்கு மனு செய்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தமது கணவருக்கு 20 மற்றும் 18 வயதான இரண்டு சகோதரிகள் இருப்பதாகவும், எனவே தனது கணவர் 17 வயதும் 8 மாதங்கள் ஆனவராக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த பெண் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்