ஓடு பாதையில் இருந்து விலகி ஓடிய 'பெரு' நாட்டு விமானம் - 127 பேர் தப்பினர்

பட மூலாதாரம், EPA
கடந்த சில மணி நேரங்களில் வெளியான உலகச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்
ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற விமானம் - தப்பிய பயணிகள்
127 பேரை சுமந்துச் சென்ற பெரு நாட்டு விமானம் பொலிவிய விமான நிலையத்தில் இறங்கும்போது ஓடு பாதையில் இருந்து வழுக்கி விலகிச் சென்றது. அதில் இருந்த 127 பேரும் உயிர் தப்பினர்.
'பெருவியன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 737 விமானம் பொலிவியாவின் தலைநகர் லா பெஸ்-சில் உள்ள எல் ஆல்டா விமான நிலையத்தில் இறங்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. இந்த விமானம் கஸ்கோ நகரில் இருந்து வந்துகொண்டிருந்தது.
122 பயணிகளுக்கும், ஐந்து ஊழியர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி 10 மணிக்கும், கிரீன்விச் நேரப்படி 14 மணிக்கும் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்து காரணமாக விமான நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டது.
லேண்டிங் கியர் உடைந்து, டயரும் வெடித்ததால், விமானத்தை ஓடுபாதையில் இருந்து நகர்த்த கிரேன் கொண்டுவரப்பட்டது.
விமானம் பறக்கும்போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், இறங்கத் தயாராகும்போது விமானி எச்சரிக்கை எதையும் தரவில்லை என்றும் பிறகு பயணிகள் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் 'பெருவியன் ஏர்லைன்ஸ்' தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீன்கள் இறப்பால் சுற்றுலா மைய கட்டுமானத்தை நிறுத்திய சீனா

பட மூலாதாரம், Getty Images
சீனா நிர்மாணித்து வரும் ஒரு சூழலியல் சுற்றுலாப் பூங்கா-வின் கட்டுமானப் பணிகளால் 6,000 அருகிவரும் சீன ஸ்டர்ஜன் மீன்கள் இறந்ததாகத் தெரியவந்ததை அடுத்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஹுபேய் மாகாணத்தில், யாங்ட்ஜீ ஆற்றில், நீண்ட காலம் வாழும் சீன ஸ்டர்ஜன் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் நிலையம் அருகில் இந்த சுற்றுலாத் திட்டத்துக்காக ஒரு பாலம் கட்டப்பட்டுவந்தது. தண்ணீர் மூலாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம், அதிர்ச்சி, சத்தம் ஆகியவற்றோடு இந்த மீன்களின் இறப்புக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சீன செய்தித் தளம் ஒன்று கூறியுள்ளது.
தற்போது வேலைகள் நிறுத்தப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது.

பெரிய நாய்க்கறி கசாப்பு மையத்தை மூடும் தென்கொரியா

பட மூலாதாரம், Getty Images
தங்கள் நாட்டிலேயே மிகப்பெரியதான நாய்க்கறி கசாப்பு மையத்தை இடக்கத் தொடங்கியுள்ளனர் தென் கொரிய அதிகாரிகள். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் நாய்கள் இந்த மையத்தில் வெட்டப்பட்டுவந்தன.
சில ஆண்டுகள் முன்புவரை நாய்க்கறி தென் கொரியாவில் சுவையான உணவாகப் பார்க்கப்பட்டது. இப்போது பார்வை மாறி வருகிறது. இந்த மையத்தை மூடவேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரி வந்தனர்.
தென் கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள தயீப்யியாங்-டாங்க் என்ற இந்த வளாகம் இன்னும் இரண்டு நாள்களில் அப்புறப்படுத்தப்படும். பிறகு இந்த இடத்தில் பொதுப் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

"அமெரிக்க- மெக்சிகோ எல்லை மூடப்படும்" - மீண்டும் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
மத்திய அமெரிக்க கண்டத்தில் இருந்து குடியேறுவோரால் குழப்பம் ஏற்பட்டால் அமெரிக்க - மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடப்போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அத்துடன் மெக்சிகோவுடன் வணிகத் தொடர்பை முடித்துக்கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.
தேவைப்பட்டால் கடுமையான பலப்பிரயோகம் செய்வதற்கான அனுமதியை எல்லையில் உள்ள படைகளுக்கு தாம் தந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












