‘ஜியூஸ் கடவுளும், ஸ்பார்டா ராணியும்’: கிளர்ச்சியூட்டும் பழங்கால ரோம சுவரோவியம்

பட மூலாதாரம், EPA
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
கிளர்ச்சியூட்டும் பழங்கால ஓவியம்
தொல்லியல் வல்லுநர்கள் இத்தாலியில் உள்ள பாம்பேயீல் கிளர்ச்சியூட்டும் ரோம சுவரோவியம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கிரேக்க புராணங்களில் உள்ள லெடா மற்றும் அன்னப் பறவை அந்த சுவரோவியத்தில் உள்ளது. செல்வந்தர் வீட்டின் படுக்கறையின் சுவராக இருந்திருக்கலாமென இது நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், EPA
முதலாம் நூற்றாண்டில் எரிமலை வெடித்த போது பாம்பேயீ நகரம் சாம்பலில் புதையுண்டது. தொல்லியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாயந்த நகரம் இது. ஜியூஸ் கடவுள் அன்னப்பறவையாக மாறி ஸ்பார்டா அரசியுடன் பாலியல் உறவு கொண்டதாக அந்த கிரேக்க புராணம் விவரிக்கும். இதன் அடிப்படையாக வைத்து அந்த ஓவியம் வரையப்பட்டது .

குவாடமாலா எரிமலை

பட மூலாதாரம், EPA
குவாடமாலாவில் உள்ள ஃபாய்கோ எரிமலை பகுதியில் உள்ள 4000 மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் அந்த பகுதியை சாம்பலும், புகையும் சூழ்ந்தது. இதே பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால் 200 பேர் புதையுண்டனர். தீயணைப்பு படை வீரர்கள் மக்களை மீட்கும் பணியில் உதவினர்.


நிருபருக்கு அனுமதி

பட மூலாதாரம், Reuters
சி.என்.என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டாவுக்கான பத்திரிகையாளர் சான்றினை மீண்டும் வழங்கி உள்ளது வெள்ளை மாளிகை. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வாதிட்டார் ஜிம். இதனை அடுத்து அவரது பத்திரிகையாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சி.என்.என் செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜிம்மை மீண்டும் வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க அனுமதிக்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கூட்டு பாலியல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images
கனடாவில் உள்ள செல்வந்த பள்ளியில் படிக்கும் ஆறு பதின்ம வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் தாக்குதலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒரு காணொளி பரவியதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ஒட்டுமொத்த கனடாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த மாணவர்கள் மைனர்கள் என்பதால் அவர்களின் அடையாளம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அரசரின் உரையில் ஜமால் இல்லை

பட மூலாதாரம், Reuters
செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் செளதிக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசர் சல்மான் அந்நாட்டின் நீதித்துறையை பாராட்டியுள்ளார்.ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து முதல் முறையாக பேசிய அரசர் சல்மான் தனது நாடு நீதியை வழங்குவதிலிருந்து என்றும் தவறியது இல்லை என்று தெரிவித்தார்.இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் கஷோக்ஜி அக்டோபர் 2ஆம் தேதி கொல்லப்பட்டார்.அமெரிக்காவின் சிஐஏ பட்டத்து இளவரசர் சல்மானின் ஆணையின் பேரிலே அந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்று தெரிவித்தது.அனால் இந்த கொலைப்பற்றி தனக்கு ஏதும் தெரியாது என பட்டத்து இளவரசர் சல்மான் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












