"கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் சல்மானுக்கும் தொடர்பில்லை" - சௌதி

இளவரசர் சல்மான்

பட மூலாதாரம், Reuters

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

"கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை" - சௌதி அரேபியா

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொல்வதற்கு தங்களது உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரே உத்தரவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்றும் சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் செயல்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்ட கஷோக்ஜியை மீண்டும் சௌதிக்கு அழைத்து வருவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக அந்த அதிகாரி நியமிக்கப்பட்டதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி கஷோக்ஜிக்கு மரணம் விளைவிக்கும் ஊசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கஷோக்ஜி மரணம் தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Presentational grey line

போயிங் நிறுவனம் மீது வழக்கு பதிவு

போயிங் நிறுவனம் மீது வழக்கு பதிவு

பட மூலாதாரம், Reuters

இந்தோனீசியா அருகே கடந்த மாதம் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு போயிங் நிறுவனத்தின் விமான வடிவமைப்பே காரணமென்று கூறி அந்த விபத்தில் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் தனது புதிய 737 மாக்ஸ் விமானத்தின் அமைப்பில் புதியதாக சேர்த்துள்ள "எதிர்பாராத விதமாக முன்னோக்கி விழும்" சிறப்பம்சம் குறித்து சரிவர விமானிகளுக்கும், விமான நிறுவனத்துக்கும் தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி அந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி 189 பேருடன் பறந்துகொண்டிருந்தபோது இந்தோனீசியா அருகே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

Presentational grey line

நிதி திரட்டலில் மோசடி

நிதி திரட்டலில் மோசடி

பட மூலாதாரம், GOFUNDME

அமெரிக்காவில் வீடற்ற ஒருவருக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான டாலர்கள் நிதி திரட்டியவர்கள் மீது மோசடி, கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ராணுவ வீரரொருவர் வீடற்ற நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறி கேத் மெக்லூர் மற்றும் மார்க் டி'அமிகோ ஆகியோர் ஆரம்பித்த நிதி திரட்டல் அந்நாட்டில் வைரலாக பேசப்பட்டதுடன், சுமார் 4,00,000 டாலர்கள் நிதியும் திரட்டப்பட்டது.

இந்நிலையில், தன்னை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டலில் கிடைத்த பணத்தில் நியாயமான பங்கு தனக்கு வழக்குப்படவில்லை என்று கூறி போப்பிட் என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த போப்பிட் உள்பட மூவரும் சேர்ந்தே திட்டமிட்டு இந்த நிதி திரட்டலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Presentational grey line

பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப்படுமா?

பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப்படுமா?

பட மூலாதாரம், AFP

பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக எழுந்துள்ள கருத்தை மறுத்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், பிரிட்டனில் நிலவும் அரசியல் சூழல் இந்த ஒப்பந்தம் ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வரைவு ஒப்பந்தம் தற்போது தயாராகி விட்டநிலையில் இது குறித்து மறு பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சே இல்லை என ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல் கூறியுள்ளார்.

இதனிடையே, பிரெக்ஸிட் தொடர்பான பிரிட்டனின் நிலையில்லாத்தன்மையால் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போகும் சாத்தியமும் வரக்கூடும் வேண்டும், அதற்கேற்ப தயாராக வேண்டும் எனவும் என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :