ரோமானிய பேரரசை எதிர்கொண்ட அரசி கற்றுத்தரும் 6 பாடங்கள்

மனிதகுல நாகரிகம் தழைத்த மூன்று காலங்களில் இறுதிக்காலமான இரும்புக் காலத்தில், பிரிட்டனில் வாழ்ந்த இனக்குழுவான ஐசினை (Iceni) எனும் குழுவின் அரசியாக விளங்கியவர் பூடிகா.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர், அந்த இனக்குழுவின் மீது ரோமப் பேரரசின் ராணுவம் படையெடுத்தபோது, எதிர்த்து போராடி ரோமப் பேரரசுக்கே சவாலாக விளங்கியவர் பூடிகா.

பூடிகா (Boudica / Boadicea) ஒரே நேரத்தில் ஒரு நாயகத்தன்மை வாய்ந்தவராகவும், சர்சைக்குரியவராகவும் பார்க்கப்படுகிறார்.

பழங்காலத்திலேயே பெண்ணியவாதியாகவும், போர் வீராங்கனையாகவும் திகழ்ந்தவர் என்று சிலர் கூறுகின்றனர். சிலரோ பூடிகாவை ஒரு தீவிரவாதியாகவே பார்க்கின்றனர்.

அவர் மீதான கண்ணோட்டம் எப்படிபட்டதாக இருந்தாலும், அவர் இன்னும் வரலாற்றில் தவிர்க்க இயலாத ஒரு வரலாற்று ஆளுமையாகவே உள்ளார்.

இந்தப் போராளி அரசியிடம் கற்றுக்கொள்ள ஆறு பாடங்கள் உள்ளன.

1. கம்பீரமான தோற்றம்

பூடிகா அளவுக்கு புறத் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் அந்தக் காலகட்டத்தில் இருந்தார்களா என்று தெரியவில்லை. வேல்கம்பு ஒன்றுடன், குதிரை வண்டி மீதி, தளர்வான கூந்தலுடன் இருக்கும் உருவமே பூடிகாவின் பரவலாக அறியப்பட்ட உருவமாக உள்ளது.

அக்கால ரோம வரலாறை பதிவு செய்த கேஷியஸ் டியோ, "பெரிய தங்க ஆரம் ஒன்றை அவர் கழுத்தில் அணிந்திருப்பார். அடர்த்தியான நிறங்களில் அவர் அணியும் ஆடைகள் ஆபரணக் கச்சைகளால் இறுக்கப்பட்டுருக்கும். ஆவேசமான பார்வையுடன், அவர் தோற்றமே ஆக்ரோஷமாக இருக்கும், " என்கிறார்.

2. பலமான அடைமொழி

பிரிட்டனில் பேசப்படும் பிரித்தானிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் 'பூட்' என்றால் 'வெற்றி' என்று பொருள். 'பூடிகா' என்றால் வெற்றியைக் கொண்டுவருபவள் என்று பொருள்.

இந்தப் பெயர் அவருக்கு பிறப்பிலேயே வைக்கப்பட்ட பெயரல்ல என்பது பலரின் கருத்து. அவர் படைக்கு வழிநடத்திய காலகட்டத்தில், இந்தப் பொருள் கொண்ட பெயர் நிச்சயம் அவருக்கு அணிதிரட்ட உதவியாக இருந்திருக்கும்.

3. யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது

பூடிகாவின் கணவர் பிரஸ்டாகஸ் கிழக்கு ஆங்கிலியாவின் ஆட்சியாளர். அவர் ரோமப் பேரரசை அனுசரித்து நடந்துகொண்டதால் அவரது ஆட்சிக்கு சிக்கல் எதுவும் உண்டாகவில்லை. அவர் இறப்புக்கு பிறகு ரோமப் பேரரசு படையெடுக்க நினைத்தது.

பூடிகா ரோமப் பேரரசுக்கு அதிக வரி செலுத்த மறுத்ததால் பொது இடத்தில் அவருக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டு, அவரது மகள்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ஆனால், ரோம மன்னன் ஒன்பதாம் லீஜியனுக்கு எதிராக படை திரட்டி, பிரிட்டனில் ரோமானியர்களின் தலைநகராக இருந்த கால்செஸ்ட்டர் நகரையும் அழித்தார்.

4. பெரிய படையைவிட அதிக பயிற்சி முக்கியம்

லண்டன் மற்றும் செயின்ட் ஆல்பன்ஸ் நகரங்களில் பூடிகாவின் படைகள் வெற்றிபெற்றிருந்தாலும், பூடிக்காவின் படைகள் ரோமப் பேரரசிடம் தோல்வியையே சந்தித்தன. இத்தனைக்கும் பூடிக்காவின் படைகள் எதிரணியைவிட சுமார் 10 மடங்கு அதிகம்.

எனினும் ஒழுக்கமின்மை மற்றும் கட்டுக்கோப்பு இல்லாததால் பூடிக்காவின் படைகள் நன்றாக பயிற்சி அளிக்கப்பட்டு கட்டுக்கோப்பாக இருந்த ரோமப் பேரரசின் படையிடம் தோற்றனர்.

5. கூட்டத்தில் தனித்து இருத்தல்

ரோமப் பேரரசுக்கு எதிராக பூடிகா தாக்குதல் தொடுத்தது தனித்து தெரிந்தது அவர் பெண் என்பதால்தான்.

"ஒரு பெண் தங்களை எதிர்த்து போராடியது ரோம ஆட்சியாளர்களுக்கு ஆத்திரமூட்டியது. அதனால்தான் ரோம ஆட்சிக்கு எதிராக நடந்த பல போராட்டங்களைவிட பூடிகா பற்றி நமக்கு அதிகம் தெரிந்துள்ளது," என்கிறார் வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஜேம்ஸ் வெப்ஸ்டர்.

6. முன்மாதிரியாக இருத்தல்

16ஆம் நூற்றாண்டில் டாஸிடஸ் என்பவர் பூடிகா பற்றி எழுதியதால் அவரைப்பற்றி அறிந்துகொள்ள பலருக்கும் ஆவல் உண்டானது.

ஆண்கள் உலகத்தில் தனித்து நின்று போராடிய பூடிகா, பிற்காலத்தில் வந்த பிரிட்டன் பேரரசியான முதலாம் எலிசபெத்துக்கு பூடிகா ஒரு முன்மாதிரியாக இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :