இமயமலை: பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின் உடல்கள் மீட்பு

பட மூலாதாரம், EPA
நேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மலையேற்றக் குழுவினரும், நேபாளைத்தை சேர்ந்த நான்கு வழிகாட்டிகளும் சுமார் 23,600 அடி உயரத்திலுள்ள குர்ஜா சிகரத்திலுள்ள முகாமில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த இரண்டாண்டுகளில் நேபாளத்தில் நடந்த மோசமான மலையேறும் விபத்தாக இது கருதப்படுகிறது.
பனிப்புயலின் தீவிரம் குறைந்த பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்த மலையேறும் வீரர்களின் உடல்களை மீட்கும் பணி தொடங்கியிருந்தது.
"பனிப்புயல் வீசியபோது இமயமலையின் உச்சியிலிருந்து பனிப்பாறைகள் அவர்களின் கூடாரத்தைச் சேதப்படுத்தியதால் அங்கிருந்தவர்கள் உயிரிழந்தனர்" என்று ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய மீட்புதவியாளரான சுராஜ் தெரிவித்துள்ளார்.
"வழக்கத்தை விட அதிகமான உயரத்தில் கூடாரத்தை அமைத்தது உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருக்குமென்று கருதுகிறோம். ஆனால், முழு விசாரணையை நடத்திய பிறகே மற்ற விடயங்கள் குறித்து கூற இயலும்" என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், AFP
கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்த மலை ஏற்றத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், மலையேறிகளுடன் தொடர்ந்து 24 மணிநேரத்துக்கும் மேல் எவ்வித தகவல் தொடர்பும் இல்லாததால் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
பனிப்புயலினால் உயிரிழந்த ஒன்பது பேர்களின் உடல்களும் மீட்கப்பட்டு நேபாளத்தின் போக்ஹாரா விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அந்நாட்டின் தலைநகரான காத்மண்டுவிற்கு ஹெலிஃகாப்டர் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.
நேபாளைத்தை சேர்ந்த நான்கு வழிகாட்டிகளின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், EPA
மேலும், உயிரிழந்த ஐந்து தென் கொரிய மலையேறிகளின் உடல்கள் வரும் புதன்கிழமைக்குள் சோல் நகருக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுவதாக தென் கொரிய அதிகாரிகள் யோன்ஹப் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
ஆக்சிஜன் உதவி இல்லாமலேயே உலகின் அதிக உயரமான முதல் 14 மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்த தென்கொரியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் கிம் சாங்-ஹோவும் உயிரிழந்தவர்களில் ஒருவராவார்.
நேபாளத்தில் அமைத்துள்ள உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 8000க்கும் அதிகமானவர்கள் ஏறியுள்ளனர். ஆனால், இதுவரை குர்ஜா சிகரத்தை அடைந்தவர்கள் வெறும் 30 பேர் மட்டுமே.

பட மூலாதாரம், EPA
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












