You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மைக்கேல் சூறாவளி: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - பேரழிவை சந்தித்த அமெரிக்கா
அமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கூறப்படும் மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி புதன்கிழமை பகலில் கரையை கடந்தது.
மரமொன்று விழுந்ததில் ஒருவர் இறந்துள்ளதாக புளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியான மைக்கேல் மேலும் நகர்ந்து அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் விரைவாக தீவிரமடைந்துள்ள சூறாவளி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சூறாவளியின் பாதிப்பால் பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
செவ்வாய்க்கிழமையன்று இரண்டாம் நிலை சூறாவளியாக வகைப்படுத்தப்பட்ட மைக்கேல், புதன்கிழமை காலையில் மணிக்கு 155 மைல்கள் வேகத்தை எட்டியது.
புளோரிடா மாகாண ஆளுநரான ரிக் ஸ்காட் ''நம்ப முடியாத அளவு பேரழிவு'' உண்டாகக்கூடும் என்று எச்சரித்திருந்தார். மேலும் கடந்த 100 ஆண்டுகளில் இதுவே மிக மோசமான புயலாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெரும் சேதத்தை உருவாக்கியுள்ள மைக்கேல் சூறாவளியால் ஏறக்குறைய 3 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களிலும் ஏரளாமான மரங்கள் சாலைகளில் தொடர்ச்சியாக விழுந்துவருவதால் மின்சார இணைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.
புளோரிடா, அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் பெரும்பாலான கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த வாரம் மூடப்பட்டு உள்ளன.
முன்னதாக, புளோரிடாவில் வசித்துவந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த எச்சரிக்கைகளை தாண்டியும் குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க பெருநிலப்பரப்பில் கரையை கடந்த சூறாவளிகளில் மூன்றாவது சக்திவாய்ந்த சூறாவளியாக மைக்கேல் அமைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ்செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மிஸிஸிப்பி மாகாணத்தில் 1969-ஆம் ஆண்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கேமில் சூறாவளி மற்றும் புளோரிடாவில் 1935-ஆம் ஆண்டில் கரையை கடந்த லேபர் டே சூறாவளி ஆகியவை அமெரிக்க பெருநிலப்பரப்பில் பாதிப்பை ஏற்படுத்திய சக்திவாய்ந்த சூறாவளிகளாக கருதப்படுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :