You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் சூறாவளி: 5 பேர் பலி
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை சூறையாடி வரும் ஃபுளோரன்ஸ் புயலில் குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
வடக்கு கரோலினா பகுதியில் புயலால் மரம் ஒன்று விழுந்ததில் தாய் மகன் பலியாகினார். தந்தை பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பல மரங்கள் விழுந்து வரும் நிலையில் சாலைகளும் சேதமடைந்துள்ளன. புயலால் சேதமடைந்த விடுதி ஒன்றிலிருந்து டஜன் கணக்கானவர்கள் மீட்கப்பட்டனர்.
புயலின் வேகம் குறைந்துள்ள போதும் பெருமளவில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளியன்று வடக்கு கரோலினாவில், ஒன்றாம் நிலை புயலாக உருவான ஃபுளோரன்ஸ் சூறாவளி, விரிட்ஸ்வில்லி கடற்கரையில் மண்சரிவை ஏற்படுத்தியது.
உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை கூறியுள்ளது.
இந்நிலையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபுளோரன்ஸ் புயலின் வேகம் தற்போது சற்று குறைந்துள்ளது.
தேசிய வானிலை சேவையின் தகவல்படி தற்போது மணிக்கு 110கிமீ வேகத்தில் ஃபுளோரன்ஸ் புயல் வீசி வருகிறது.
ஃபுளோரன்ஸ் சூறாவளியின் வேகம் குறைந்தாலும், அதன் பரப்பு அதிகரித்துள்ளதால் இது உண்டாக்கும் ஆபத்து எதுவும் குறையவில்லை என்று ப்ரோக் லாங் எனும் அவசரகால மேலாண்மை அதிகாரி வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து சூறாவளி தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புதவிப் பணியாளர்கள் வந்துள்ளனர்.
"400மைல் வேகத்தில் வீசும் சூறாவளியில் மொத்த பகுதியும் அடித்து செல்லக்கூடும்" என வெள்ளியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வடக்கு கரோலினாவின் ஆளுநர் தெரிவித்தார்.
வடக்கு கரோலினாவின் சில பகுதியில் 10அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆறுகளின் வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், வெள்ளம் 13 அடி ஆழம் வரை உண்டாகலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக வெப்பமயமாதல் காரணமா?
பருவநிலை மாற்றம் மற்றும் சூறாவளி ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு மிகவும் சிக்கலானது.
கடலில் வெப்பம் அதிகமானால் அது சூறாவளிகளின் பலத்தை அதிகரிக்கும். ஆகவே, வரும் காலங்களில் கடல்நீரின் வெப்பம் அதிகரித்தால் சூறாவளிகளின் வீரியமும் அதிகரிக்கலாம்.
வளி மண்டலத்தின் வெப்பம் அதிகமாக இருக்கும்போது, சூறாவளியால் அதிக மழைப் பொழிவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
சூறாவளி ஏற்படுவது அரிதான நிகழ்வு என்பதால், இவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு பருவநிலை மாற்றதுக்கு உள்ள தொடர்புகளை அறிவது கடினமானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்