பிரெட் கவானா: டிரம்ப் பரிந்துரைத்த நீதிபதி மீதான எஃப்.பி.ஐ. விசாரணை அறிக்கை தாக்கல்

பட மூலாதாரம், REUTERS
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ள பிரெட் கவனா மீது சுமத்தப்பட்ட பாலியல் முறைகேடு மீதான எப்.பி.ஐ விசாரணை அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் முடிவுகள் பொது வெளியில் தெரிவிக்கப்படமாட்டாது. எனினும், அந்த அறிக்கையை செனட் உறுப்பினர்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
கவனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளும் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோரிடையே கடுமையான கருத்து மோதல் உருவாகியுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டை கவனா கடுமையாக மறுத்திருந்தார்.
என்ன குற்றச்சாட்டு?
கடந்த வாரம் பேராசிரியை கிறிஸ்டைன் பிளேஸி ஃபோர்டு, 1980களில் பதின்வயதில் இருந்தபோது கவனா மற்றும் இன்னொரு ஆண் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக செனட் நீதித்துறைக் குழு முன்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.
குடிபோதையில் இருந்த கவனா படுக்கையில் தம்மைத் தள்ளி, தமது ஆடைகளை களைய முற்பட்டதாகவும்,தான் கத்தியபோது கையை வைத்து தமது வாயை அடைத்ததாகவும் கிறிஸ்டைன் பிளேஸி ஃபோர்டு கூறியிருந்தார்.
ஏல் பல்கலைக்கழகத்தில் 1980களில் மாணவர்களிடையே நிகழ்ந்த மது அருந்தும் விளையாட்டு ஒன்றின்போது கவனா ஆடைகளை அவிழ்த்துக் காட்டியதாக தியோப்ரா ராமிரெஸ் எனும் இன்னொரு பெண்ணும் குற்றம்சாட்டியிருந்தார்.

பட மூலாதாரம், Pool / getty
கிறிஸ்டைன் பிளேஸி ஃபோர்டு வாக்குமூலம் அளித்த பின்னும் கவனாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதற்கு செனட் குழு ஒப்புதல் அளித்தது. எனினும் அவர் நியமனத்துக்கு செனட் சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளிக்கும் வாக்கெடுப்பு நிகழும் முன்பு எஃப்.பி.ஐ முழு விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியது.
வீடுகளில் நடந்த கொண்டாட்டங்களின்போது பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து கவனா பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஜூலி ஸ்வட்னிக் எனும் மூன்றாவது பெண் அளித்த புகாரை எப்.பி.ஐ விசாரிக்கவில்லை. இந்தப் புகாரை கவனா ஒரு 'நகைச்சுவை' என்று கூறியிருந்தார்.
நியமனத்துக்கு என்ன முக்கியத்துவம்?
தற்போது 53 வயதாகும் நீதிபதி கவனா உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்டால் பழமைவாதிகளுக்கு, கொள்கை ரீதியில் ஆதரவாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளும் ஆயுள் காலத்துக்கும் அந்தப் பதவியில் நீடிப்பார்கள். வாக்குரிமை, கருக்கலைப்பு உரிமை, துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை உள்ளிட்ட அமெரிக்காவின் பொது விவகாரங்களில் அவர்களின் தீர்ப்பே இறுதியானது.
அறிக்கையின் விவரங்கள்
விசாரணை அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளிப்டையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இதன் ரகசியம் தொடர்ந்து காக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெள்ளை மாளிகையின் கீழ்த்தளத்தில் இருக்கும் பாதுகாப்பான அறை ஒன்றில் இந்த அறிக்கை பாதுகாத்து வைக்கப்படும் என்று ஏ.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த விசாரணை அறிக்கையின் நகல்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. செனட் குழுவின் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தனித் தனியாக இந்த அறிக்கையைப் படிப்பார்கள்.

பட மூலாதாரம், Getty Images
கவனா மீது குற்றம் சாட்டிய தியோப்ரா ராமிரெஸ் என்பவரிடம் ஞாயிறன்று இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். எனினும் முதல் முறை குற்றம் சாட்டிய பிளேஸி ஃபோர்டிடம் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய சாட்சியங்கள் விசாரிக்கப்படவில்லை என ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகை ஒப்புதல் பெறவில்லை
கவனா மற்றும் பிளேஸி ஃபோர்டு ஆகியோரை விசாரிக்க வெள்ளை மாளிகையிடம் எப்.பி.ஐ ஒப்புதல் பெறவில்லை என சில செய்திகள் தெரிவிக்கின்றன.
செனட் குழு முன்பு அவர்கள் அளித்த வாக்குமூலமே போதுமானது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கருதுகின்றனர்.
கவனா நியமனம் என்னாகும்?
செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு 51-49 என்ற அளவில் பெரும்பான்மை உள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மட்டும் எதிராக வாக்களித்தால், துணை அதிபர் மைக் பென்ஸ் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கை அளிக்கும் உரிமை பெறுவார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பிளேஸி ஃபோர்டை எள்ளி நகையாடி டிரம்ப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மூன்று குடியரசு கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதும் உற்று நோக்கப்படுகிறது.
ஜனநாயக கட்சியின் இரு உறுப்பினர்களும் தங்கள் நிலையை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
அதிபர் டிரம்ப் தொடர்ந்து கவனாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் நான்கு கோடி வழிபடுவோரைக் கொண்டுள்ள அமெரிக்க கிறிஸ்டியன் தேவலாயங்கள் கவனா பரிந்துரைக்கப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
கவனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்று 1,000க்கும் மேலான பேராசிரியர்கள் செனட் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












