பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை: புகைப்பட அஞ்சல் அட்டைகள் கூறும் இனவாத கதைகள்

    • எழுதியவர், மஹிமா அ ஜெயின்
    • பதவி, லண்டன்

20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிரிட்டீஷ் இந்தியாவில் இருந்து ஐரோப்பா சென்ற புகைப்பட அஞ்சலட்டைகள், இந்தியாவில் இருந்த தங்கள் உறவினர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஐரோப்பியர்களுக்கு உதவியது.

இந்த புகைப்பட அஞ்சலட்டைகள் அந்தக் காலத்தில் இன்ஸ்டாகிராம் போல செயல்பட்டது என்று கூறலாம்.

லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த கண்காட்சி ஒன்றில் 300-க்கும் மேற்பட்ட புகைப்பட அஞ்சல் அட்டைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் 1900 முதல் 1930கள் வரை இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட தபால் அட்டைகள் ஆகும்.

"காலனியாதிக்க நினைவுகளில் தோய்வதற்கு இவை பயன்படவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. அதற்கு மாறான எண்ணமே எங்களுக்கு. காலனியாதிக்க காலம் தொடர்பாக பல ஆதாரங்களை இவை வழங்குகின்றன. இதன் மூலம் அந்தக் காலத்தை மக்கள் விமர்சனத்துடன் அணுக வழி வகுக்கிறது," என்கிறார் இந்த கண்காட்சியின் இணை பொறுப்பாளரான ஸ்டீஃபன் புட்னம் ஹூக்ஸ்.

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள தபால் அட்டைகள் மிக பிரபலமான வழியாக இருந்தது. 1902 முதல் 1910ஆம் ஆண்டு வரை பிரிட்டன் அஞ்சல் அமைப்பு மூலம் 6 பில்லியன் தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன என்கிறார்கள் கண்காட்சி நடத்தியவர்கள்.

புகைப்படங்கள் என்பது விலை உயர்ந்த ஒன்றாக இருந்தது. ஆனால், புகைப்பட தபால் அட்டைகள் குறைந்த விலையில் அதிகம் தயாரிக்கப்பட்டன.

சென்னை (அப்போது மெட்ராஸ்) மற்றும் பெங்களூர் நகரங்களின் புகைப்படங்கள் மட்டுமே இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இந்த புகைப்படங்கள், அக்காலத்து இந்திய மக்கள், இனப் பாகுபாடு, நகரமயமாதல் மற்றும் பிரிட்டன் ஆட்சியில் மக்களின் தினசரி வாழ்க்கை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கின்றன.

மேலே உள்ள புகைப்படம், அந்தக்காலத்தில் செயல்பட்ட சென்னை மாநகர தபால் நிலையம்.

நிறைய தபால் அட்டைகளை ஒன்றாக வைத்து பார்க்கும்போது, காலனி ஆட்சியில் இந்தியா எப்படி இருந்தது என்பதை நம்மால் நினைத்து பார்க்க முடிகிறது.

கட்டடக்கலை, தெருக்கள், ஐரோப்பியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு இடையேயான உறவு என அனைத்தையும் இந்த படங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

தெருக்கள் மற்றும் கட்டடங்களின் புகைப்படங்கள் உள்ள தபால் அட்டைகள் மிகவும் பிரபலமாகும். இந்திய நகரங்களை பிரிட்டன் ஆட்சியில் அவர்கள் எப்படி வடிவமைத்தார்கள் என்பதை அவை நமக்கு தெரிவிக்கின்றன.

1900களில் 'மாஸ்டர்ஸ்' என்ற பெயரில் வெளிவந்த தபால் அட்டை தொடர், சென்னையை அடிப்படையாக கொண்ட பதிப்பாளரால் வெளியிடப்பட்டது.

பிரிட்டன் ஆட்சியில் இந்தியாவில், முதலாளி - வேலைக்காரர் இடையேயான உறவை வெளிப்படுத்தி தபால் அட்டைகள் வெளிவந்தன. முதலாளி இல்லாத போது, வேலையாள் என்ன செய்வார் என்பது குறித்து நகைச்சுவையான படமும் இருந்தது.

அதே போல 'மெட்ராஸ் ஹன்ட்' என்ற தொடரை ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.

இதில் பல பெண்கள் ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் பேன் பார்ப்பது போன்ற படங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்தத் தொடரானது மிகவும் வெற்றி பெற்று, நல்ல விற்பனையும் ஆனது. மேலும், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் அச்சிடப்பட்டது.

இனம், பாலினம், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் இந்தியர்கள் எப்படி பார்க்கப்பட்டார்கள் என்றும் இந்த தபால் அட்டை படங்கள் பிரதிபலித்தன.

ஐரோப்பியர்களுக்கு இந்தியர்கள் செய்யும் சிறு சிறு வேலைகளும், இந்த தபால் அட்டைகளில் இடம் பெற்றிருந்தன.

மேலுள்ள படம் The Morning Tub என்ற பெயரில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியானது. குளிக்கும் போது ஐரோப்பியர்களுக்கு இந்தியர்கள் தண்ணீர் ஊற்றி உதவி செய்தது இந்த படம் மூலம் தெரிய வருகிறது.

"அனைத்து தபால் அட்டைகளிலும் இந்தியர்கள் வேலை செய்யும் படம் இருந்தது. மெட்ராஸ் மற்றும் பெங்களூரில் இருந்த ஐரோப்பியர்கள் அவ்வளவாக இடம் பெறவில்லை. இந்தியர்கள் ஐரோப்பியர்களுக்கு வேலை செய்யும் பட்சத்தில் மட்டும் அவர்கள் படத்தில் இருந்தார்கள்."

சில ஐரோப்பியர்களுக்கு வேலையாட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததில்லை. எனினும், பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் அவர்கள் வாழ்ந்த உயர் வாழ்க்கைக்கு இப்படங்கள் ஆதாரமாகின்றன.

ஒரு சில படங்களில் ஒருவர் செய்யும் வேலைகளில் இருந்து அவர்கள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக சலவைக்காரர்கள். இவர்கள் பல்வேறு வீடுகளுக்கு துணிகள் துவைத்துக் கொடுத்தனர்.

கோயில்கள் மற்றும் உள்ளூர் விழாக்களும் சில தபால் அட்டைகளில் பிரபலமாக இடம் பெற்றிருந்தன.

மேலுள்ள தபால் அட்டை, பெங்களூரில் இந்து பக்தர்கள், மரத் தேர் இழுப்பதை காண்பிக்கிறது.

உண்மையான புகைப்படம் தனியே எடுக்கப்பட்டு, பின்னர் அது வெறும் தபால் அட்டையில் அச்சிடப்பட்டது. 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என தேதி குறிப்பிட்டுள்ள இந்த அட்டையில் "ஜக்கர்னாட் தேரின் இன்னொரு பக்கம் இது. இதன் அடியில் உள்ளூர் மக்கள் விழுகிறார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது.

ஆனால், இத்தகைய கடிதங்கள் இந்து திருவிழாக்கள் குறித்த தவறான புரிதலைக் காட்டுவதாக இந்தக் கடிதங்களின் பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

இந்த அட்டையுடன் கண்காட்சியில் வைக்கப்பட்ட குறிப்பில், "உண்மையில் பக்தர்கள் தேரின் கீழ் விழுவதில்லை. இந்து மதத்தை வெறித்தனமான, கண்மூடித்தனமான பக்தி செலுத்தும் மதமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டன் விளைவாக இத்தகைய குறிப்பு எழுதப்பட்டதாக" குறிப்பிடப்பட்டிருந்தது.

"காலனியாதிக்க நீக்கம் என்பது ஒரே நேரத்தில் அனைவருக்கும் நடந்துவிடாது. இது ஒரு தொடர் நடவடிக்கை. ஒவ்வொருவரும் தமக்குள் செய்துகொள்ளவேண்டியது. இந்தக் கண்காட்சியின் உதவியுடன் மக்கள் அதைச் செய்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்" என்று டாக்டர் ஹூக்ஸ் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :