You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆங்கிலேயரை எதிர்த்து ஆங்கிலேயரே நடத்திய இந்தியாவின் முதல் பத்திரிகை
பிரிட்டிஷாரின் இந்திய காலனியாதிக்கத்தை விளக்கும் இந்தியாவின் முதல் செய்தித்தாள் 1780ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வெறும் செய்திகளை மட்டுமல்லாமல் சர்வாதிகாரிகள் எப்படி செயலாற்றுகிறார்கள், சார்பற்ற பத்திரிக்கையின் செயல்பாடு எப்படி நிறுத்தப்படும் போன்ற விடயங்களை தெரிந்துக்கொள்ளலாம் என்று பத்திரிகையாளரும், வாலாற்றாசிரியருமான ஆண்ட்ரு ஓட்டிஸ் கூறுகிறார்.
இந்தியாவின் முதல் செய்தித்தாளான பெங்கால் கெசட், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற துணிச்சல்மிக்க ஆங்கிலேயரால் அன்றைய இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்களை பற்றி எழுதும் பத்திரிக்கையாக 1780ஆம் ஆண்டு உருவெடுத்தது. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை, ஊழல், லஞ்சம், விதிமீறிய நடவடிக்கைளை அந்த பத்திரிக்கை வெளியுலகிற்கு கொண்டுவந்தது. உச்சபட்சமாக அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டியது.
ஹேஸ்டிங்ஸும், மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் சட்டவிரோதமாக படைகளை பயன்படுத்தியதாகவும், பிரதிநிதித்துவம் இல்லாமல் மக்களுக்கு வரி விதித்ததாகவும், பேச்சுரிமையை நசுக்கியதாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் பல பத்திரிகைகள் தவிர்த்த ஐரோப்பிய மற்றும் இந்திய ஏழைகளின் வாழ்க்கை குறித்தும் பெங்கால் கெசட் செய்தி வெளியிட்டிருந்தது.
குறிப்பாக குறைந்த வருமானத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காக போரிட்டு உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினரை பற்றியும் இது செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவின் மிகப் பெரிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் தங்களது சொந்த ராணுவத்தின் மூலமே கட்டுப்படுத்தி வந்தாலும், 1857இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய இராணுவ வீரர்கள் கிளர்ச்சி செய்த பின்னர் அது கலைக்கப்பட்டது.
மேலும், ஹேஸ்டிங்ஸ் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை இந்த பத்திரிகை சுமத்தியது. காலம் செல்லச்செல்ல குற்றச்சாட்டுகளின் அளவை சமாளிக்க முடியாமல் போனதால், உயர் பொறுப்பிலுள்ளவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை மதிப்பிழைக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஹிக்கியின் பெங்கால் கெசட் பத்திரிகையின் குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் வகையில் போட்டி பத்திரிக்கை ஒன்றை தொடங்குவதற்கு கிழக்கிழத்திய கம்பெனி நிதியளித்தது. மேலும், அதை ஆணவம் பிடித்த பத்திரிகை என்றும், அதன் பத்திரிகையாளர்கள் "இரக்கமற்ற துரோகிகள்" என்றும் ஹேஸ்டிங்சால் வருணிக்கப்பட்டனர்.
மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்படும் அரசாங்கத்தை "மக்கள் இனி மதிக்க வேண்டிய அவசியமில்லை" என்று அந்த பத்திரிகையில் பெயர் குறிப்பிடாத ஒருவர் எழுதியதால், கிழக்கிந்திய கம்பெனி பெங்கால் கெசட் பத்திரிகையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்தனர்.
தனது மதிப்பை குலைக்கும் விதமாக செயல்பட்டதாக ஹிக்கியின் மீது ஹேஸ்டிங்ஸ் தொடர்ந்து அவதூறு வழக்குகளை தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் முடிவில் ஹிக்கி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும், அவர் சுமார் ஒன்பது மாதங்களுக்கு சிறையில் இருந்தபடியே பத்திரிகையை நடத்தினார். அதன் பிறகு இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த சிறப்பு உத்தரவின் பேரில் பெங்கால் கெசட் பத்திரிகையின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இருந்தபோதிலும், ஹிக்கியின் பத்திரிகையில் வெளியான அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளை முதலாக கொண்டு கிழக்கிந்திய கம்பெனியின் மீது பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணையை தொடங்கினர்.
அந்த விசாரணையில் இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பிரிட்டனுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது.
ஹிக்கியின் பெங்கால் கெசட்டை தொடர்ந்து பிரித்தானிய பத்திரிகைகள் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை மையமாக கொண்டு ஊழலுக்கெதிரான பொது மக்களின் அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்தியாவின் முதல் பத்திரிகையை நசுக்கியது போன்றே, இன்றைய சர்வாதிகார தலைவர்கள் பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்க முயல்கின்றனர். அதாவது, தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பத்திரிகைகளில் தங்களை பற்றி செய்திகள் உண்மையல்ல என்று மக்களை நம்ப வைக்கவும் முயற்சிக்கின்றனர்.
சர்வாதிகாரிகளாக இருக்க விரும்பும் அரசியல்வாதிகள் புதியவர்கள் அல்ல. ஆனால் இப்போது அவர்கள் ஏன் ஆபத்தானவர்கள்?
குடிமக்களுக்கு இடையே பிளவுகளை விதைக்க புதிய நவீன கால வழிகளான பேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அதன் மூலம் "வடிகட்டிய பொய்களை" குறிப்பிட்ட சிலர் மூலம் பரப்பி அவற்றை மற்றவர்களும் நம்பும் வகையில் செயல்படுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், தற்காலத்தில் அரசியவாதிகள் சமூக ஊடங்கங்கள் மூலமாக மக்களை நேரடியாக அடைவது சாத்தியமாகியுள்ளதால், அவர்கள் பத்திரிகைகளின் குற்றச்சாட்டுகளை தொடக்க நிலையிலேயே நசுக்க முற்படுகின்றனர்.
உதாரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பதிவுகளின் மூலம் அடிக்கடி பத்திரிகைகள், தொலைக்காட்சிகளை "போலிச் செய்திகள்" என்றும் "மக்களின் எதிரிகள்" என்றும் குறிப்பிட்டு வருவதை கூறலாம்.
ஹேஸ்டிங்ஸ் போன்ற சர்வாதிகாரிகள் வந்து போய்விட்டனர். ஆனால் அவர்கள் இந்தியாவின் அடிமைப்படுத்தலுக்கு மேடை அமைத்துள்ளனர். அவர்கள் பிரித்தானிய ஆட்சியை செயல்படுத்துவதற்கான அரசியல் அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம், வெறும் நூற்றுக்கணக்கானோரை கொண்ட கிழக்கிந்திய கம்பெனி இந்திய துணைக்கண்டத்தையே சில நூறாண்டுகளுக்கு ஆட்சி செய்தது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தை செலுத்தியதற்கு அவர்கள் வாளை பயன்படுத்தியதைவிட, எழுதும் பேனாக்களை கட்டுப்படுத்தியதே முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால், இன்றோ ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி பத்திரிகை சுதந்திரத்தையும், அதன் மீதான மதிப்பையும் கெடுப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.
அன்று ஹேஸ்டிங்ஸுக்கும் ஹிக்கிக்கும் இடையே நடந்த சண்டைக்கும் இன்று நாம் தினசரி சந்தித்து வரும் பிரச்சனையும் வெவ்வேறானது அல்ல. அந்த சண்டைக்காக பயன்படுத்தப்படும் கருவிகள் மட்டுமே காலத்திற்கேற்றாற்போல் மாற்றமடைந்துள்ளது.
ஆண்ட்ரு ஓட்டிஸ் ஹிக்கிஸ் பெங்கால் கெசட்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் இந்தியாஸ் பிரஸ்ட் நியூஸ்பேப்பர் (Hicky's Bengal Gazette: The Untold Story of India's First Newspaper) என்ற புத்தகத்தின் ஆசிரியராவார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :