You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதை
துங்கபத்ரா நதிக்கரையில் மெளனமாக உறங்கி கொண்டிருக்கிறது ஒரு பேரரசு. ஒரு காலத்தில் குதிரைகளின் குளம்பு சத்தம், மலைகள் எங்கும் எதிரொலித்த ஒரு அரசு, இப்போது ஆழ்ந்த அமைதியில் இருக்கிறது. ஹம்பி - ஒரு காலத்தில் விஜயநகர பேரரசின் முன்னாள் தலைநகரம். கோட்டை, சந்தை, எண்ணற்ற கோயில்கள் என எப்போதும் உயிர்ப்புடன் இருந்த நகரம் இப்போது அதன் சுவடுகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கிறது.
பாகுபலி திரைப்படமும் ஹம்பியும்
பாகுபலி திரைப்படம் பார்த்து வியந்திருப்போம்தானே? வரைகலை துணை கொண்டு உருவாக்கப்பட்ட அந்த நகரம், அதன் கோட்டைகள், நீளமான மதில்கள், வணிக கூடங்கள், கோயில்கள் என அந்த திரைப்படம் நமக்கொரு அலாதி அனுபவத்தை தந்தது தானே? நம் கண் முன்னால் ஒரு மெய்நகர் உலகம் விரிந்ததுதானே? அந்த அனுபவத்தை நிஜத்தில் தருகிறது கர்நாடகா மாநிலத்த்ல இருக்கும் ஹம்பி.
விஜயநகர பேரரசின் தலைநகராக இருந்த ஹம்பி 26 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து இருக்கிறது. அந்த நகரத்திற்குள் நுழைந்ததுமே ஏதோவொரு பண்டைய நகரத்திற்குள் நுழைந்துவிட்ட உணர்வு கிடைக்கிறது.
ஹம்பியின் பேரழகை ஒரே ஒரு காட்சியில் தரிசிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் அங்குள்ள மண்டகா மலைக்கு ஏறுங்கள். முழு நிலப்பரப்பின் தரிசனம் நமக்கு அங்கிருந்து கிடைக்கும். அதுவும் சூரியன் உதிக்கும் நேரத்தில் அந்த சிறு மலையேறினால் மஞ்சள் பூசிய ஒளி ஒருவிதமான உணர்வை நமக்குள் கடத்தும். மலையேறுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது கற்படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அங்கிருந்து இறங்கி சிறிது நேரம் பயணித்தால் துங்கபத்ரா நதியினை காணலாம். இரு கரைகளை தொட்டு எதையோ அடைந்துவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் பயணிக்கும் இந்த நதியில்தான் ஹம்பியில் அமைந்துள்ள கோயில்களின் யானைகள் தினமும் நீராடுகின்றன.
ஆயிரக்கணக்கான கோயில்கள்
எங்களை அழைத்து சென்ற வழிகாட்டி இப்போது ஹம்பியில் மட்டும் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாக கூறினார்.
சிவன் மற்றும் கிருஷ்ணர் கோயில் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. நாடெங்கிலும் இருந்து பக்தர்கள், உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் தினம் தினம் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த நகரத்திற்குள் நுழையும் இடத்தில் இருக்கும் பழங்கால சுங்கசாவடி, அக்கால வணிக நடைமுறைகளை நமக்கு உணர்த்துகிறது.
950 மீட்டர் நீளமுடைய சந்தை, 30 சதுர மீட்டர் அளவுடைய ராணிகளின் குளியலறை, பிரம்மாண்ட அரண்மனையின் எச்சம் என அந்த நகரம் பார்க்க பார்கக வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது.
வரலாற்றின் மீது பெருங்காதல் கொண்டவர்களுக்கான மிகச் சரியான சுற்றுலா தளம் `ஹம்பி'. அந்த நகரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் எச்சங்களும், மிச்சங்களும் ஒரு வீழ்ந்த பேரரசின் கதையை நம்மிடம் மெளனமாக சொல்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :