You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளியுறவுச் செயலரின் வட கொரிய பயணத்தை டிரம்ப் ரத்து செய்ய சொன்னது ஏன்?
அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பாம்பேயோ, முன்னரே திட்டமிட்டிருந்த வட கொரிய பயணத்தை அதிபர் டிரம்ப் கைவிடுமாறு கூறியதால் அவர் வட கொரியாவுக்கு செல்லமாட்டார் என்று தெரிகிறது.
கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் இல்லை என்று டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.
அதே போல், அமெரிக்காவுடனான வணிக ரீதியான உறவுகள் சரியில்லாத காரணத்தால், சீனாவும் வட கொரியாவுக்கு போதுமான அழுத்தத்தை தரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் டிரம்ப்-கிம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு பேசிய டிரம்ப், இனி வட கொரியா ஓர் அணுஆயுத அச்சுறுத்தலாக இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்ற வட கொரியா தவறிவிட்டதாக பல செய்திகள் வெளிவந்தன.
பெயர்வெளியிடாத அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டில் வடகொரியா புதிய பேலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கிவருவதாக தெரிகிறது என கூறியுள்ளது சமீபத்திய எச்சரிக்கையாகும்.
வடகொரியா தொடர்ந்து தனது அணுசக்தி திட்டங்களை தொடர்வதாக ஐநாவின் அணுசக்தி நிறுவனமும் தெரிவித்திருந்தது.
டிரம்ப் கூறியது என்ன?
''இந்த சமயத்தில் வடகொரியாவுக்குச் செல்லவேண்டாம் என பாதுகாப்பு துறை செயலர் மைக் பாம்பேயோவுக்கு நான் சொல்லியிருக்கிறேன். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க எடுத்துக்கொண்ட உறுதிமொழியை செயல்படுத்த நாம் போதுமான முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என உணர்கிறேன்'' என ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
''சீனாவுடனான அமெரிக்காவின் கடினமான வர்த்தக நிலைப்பாடு காரணமாக கொரியாவை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்கும் நடைமுறைக்கு சீனா உதவவில்லை என நான் நினைக்கிறேன்'' என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
''பாம்பேயோ வடகொரியா பயணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்.சீனாவுடனான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்கியதும் பாம்பேயோ வருங்காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்யக்கூடும். இதற்கிடையில் என்னுடைய கனிவான அன்பையும் மரியாதையும் வடகொரிய தலைவர் கிம்முக்கு அனுப்ப விரும்புகிறேன். அவரை விரைவில் சந்திக்க எதிர்நோக்கியிருக்கிறேன். '' என மற்றொரு சமீபத்திய ட்வீட்டில் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
வடகொரியா - டிரம்ப் இடையிலான உறவானது ஜூன் மாத சந்திப்புக்கு பிறகு ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறது. ஜூலையில் பாம்பேயோ வடகொரியாவுக்கு சென்றபோது, ''அவர் தாதா போல நிபந்தனை வைக்கிறார்'' என வடகொரியா கண்டித்தது.
வடகொரியாவின் அணு ஆயுத செயல்பாடுகள் முடிவுக்கு வந்தால்தான் பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து ஆலோசிக்க முடியும் என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்பு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :