You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெறுப்புணர்வை பரப்பி நாட்டை பிளவுபடுத்துகிறது பாஜக, ஆர்எஸ்எஸ் - ராகுல் காந்தி
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் குற்றச்சாட்டு
பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தேசத்தை பிளவுபடுத்துகின்றன மேலும் மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புகிறது என காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கடந்த வியாழனன்று வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே உரையாற்றியபோது, சொந்த நாட்டில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வெறுப்புணர்வை பரப்புகிறது. சீனா 24 மணிநேரத்தில் ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது எனில் இந்திய அரசால் 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை வழங்க முடிகிறது என பேசியுள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.
முதல்வர் பழனிசாமிக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை உறவினர்கள், பினாமிகளுக்கு வழங்கி ஆதாயம் அடைந்ததற்காக முதல்வர் பழனிசாமிக்கு எதிரான புகாருக்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை செப்டம்பர் நான்காம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
திமுக அமைப்பு செயலரும், ராஜ்யசபா எம்பியுமான ஆர்.எஸ்.எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவில் முதல்வர் பழனிசாமி வசம், நெடுஞ்சாலை துறை உள்ளது. ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டது. திட்டப் பணிகளை மேற்கொள்ள, 'ராமலிங்கம் அண்ட் கோ' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், முதல்வர் பழனிசாமிக்கு உறவினர்.
திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழி சாலை திட்டம், 'வெங்கடாசலபதி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர், முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி.
மதுரை ரிங் ரோடு,வண்டலுார் - வாலாஜாபாத் ஆறு வழி சாலை, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, முதல்வர் பழனிசாமியின் உறவினர்கள், பினாமிகளுக்கு, ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தப் பணிகளை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் வழங்கியதில், முதல்வர் பழனிசாமி ஆதாயம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நான் அளித்த புகாரை, பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுந்தார்.
நேற்று இம்மனு மீதான விசாரணையில், இப்புகார் மீதான விசாரணை அறிக்கை இரண்டு மாதங்களாகியும் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக பதில் அளிக்க உத்தரவிட்டார் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிமுகவில் போலி, போர்ஜரி உறுப்பினர்கள் இல்லை
அதிமுகவில் எந்தவொரு உறுப்பினரும் போலியும் இல்லை போர்ஜரியும் இல்லை. எங்களை உறுப்பினர்கள் அனைவரும் உண்மையான உறுப்பினர்கள் என தமிழக துணை முதல்வர் ஓ பி எஸ் கூறினார்.
அதிமுகவில் 6 மாதத்தில் ஒரு கோடியே 22 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தது சாதனை படித்திருக்கிறோம். எங்கள் உறுப்பினர் சேர்க்கை முறையான முறையில் நடந்து வருகிறது என அவர் பேட்டியளித்துள்ளார் என தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு : 6-வது நாளில் 7-வது பதக்கம் வென்ற இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. டென்னிஸ் ஆண்கள் இரட்டையரில் தங்கப்பதக்கம், ஒற்றையரில் வெண்கலம், துடுப்பு படகு போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலம், பெண்கள் கபடியில் வெள்ளி, துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் உள்ளிட்டவற்றை இந்தியா வென்றுள்ளது.
துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான 4 பேர் கொண்ட ஸ்கல்ஸ் பிரிவின் இறுதி சுற்றில் சவான் சிங், டட்டு போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி களம் இறங்கியது. படகின் இருபுறமும் துடுப்பை வேகமாக இயக்கிய இவர்கள் 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
இந்தோனேஷியா 2-வது இடமும் (6 நிமிடம் 20.58 வினாடி), தாய்லாந்து 3-வது இடமும் (6 நிமிடம் 22.41 வினாடி) பெற்றது.
பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்பு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :