You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு
உலகப்பார்வை : கடந்த சில மணிநேரங்களில் உலகில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்த செய்திகளின் தொகுப்பு
பாலத்தீனர்களுக்கான 200 மில்லியன் டாலர் உதவி - அமெரிக்கா ரத்து
மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலத்தீனர்களுக்கான 200 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான உதவியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
டிரம்பின் வழிகாட்டலின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பணமானது வேறு எங்கேனும் அதிக முன்னுரிமை தேவைப்படும் திட்டங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளதாக கூறியுள்ளார்.
டிரம்பின் நிர்வாகம் ''அரசியல் ஆயுதமாக ஒரு மலிவான அச்சுறுத்தலை பயன்படுத்துவதாக'' ஒரு மூத்த பாலத்தீன அதிகாரியான ஹனான் அஷ்ராவி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக டிரம்ப் அறிவித்ததில் இருந்து அமெரிக்காவின் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பாலத்தீன தலைமை நிராகரித்து வருகிறது.
இனி சிகிச்சை எடுக்கப்போவதில்லை - மெக்கைன் புது முடிவு
கடுமையான மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் வேட்பாளரும், குடியரசு கட்சியின் செனட்டருமான ஜான் மெக்கைன், இனி சிகிச்சை எடுத்துக்கொள்ளப்போவதில்லை என முடிவு செய்துள்ளார்.
1987-ல் இருந்து அரிஸோனா மாகாண பிரதிநிதியாக அவர் பணியாற்றிவந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னதாக, அவர் கடுமையாக உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
வியாட்நாம் போரின் போது பல வருடங்களை சிறையில் கழித்த முன்னாள் ராணுவ வீரான மெக்கைன் அடுத்த வாரம் 82 வயதை எட்டவிருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தவர்களுக்கு அவரின் குடும்பம் ஒரு அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளது.
முன்னதாக 2008-ல் அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவிடம் மெக்கைன் தோற்றார்.
ஒரே நாளில் ஆயிரம் பேரை கைது செய்த பிரேசில் காவல்துறை
பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களின் ஈடுபவர்களை கைது செய்யும் நோக்கத்துடன் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை கைது செய்துள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளார்.
இதில் 275 பேர் சந்தேக கொலை குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் போலீசார் நடத்திய இந்த ரெய்டில் ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பங்கெடுத்தனர். பிரேசிலில் வன்முறை குற்றங்கள் அதிகரித்ததால் அதிகாரிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
மைக் பாம்பியோவின் வட கொரிய பயணம் ரத்து
அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பாம்பியோ முன்னரே திட்டமிட்டிருந்த வட கொரிய பயணத்தை அதிபர் டிரம்ப் கைவிடுமாறு கூறியதால் அவர் வட கொரியாவுக்கு செல்லமாட்டார் என்று தெரிகிறது.
கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் இல்லை என்று டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.
அதே போல், அமெரிக்காவுடனான வணிக ரீதியான உறவுகள் சரியில்லாத காரணத்தால், சீனாவும் வட கொரியாவுக்கு போதுமான அழுத்தத்தை தரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்பு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :