You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மியான்மர் விசாரிக்கப்படுமா?
2016 முதல் 2017 ஆம் ஆண்டில் ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு ஏறத்தாழ ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ளவும், வன்முறையிலிருந்து தப்பிக்கவும் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.
வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்கின்றன சர்வதேச உதவி அமைப்புகள். இவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கூறுகின்றன அந்த அமைப்புகள்.
அவர்களை கட்டாயமாக திருப்பி அனுப்புவது தொடர்பாக உதவி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அவர்களாகவே விரும்பி மியான்மருக்கு நாடு திரும்ப வேண்டும் என்றும், நாடு திரும்புபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் கூறியுள்ளது.
ரோஹிஞ்சா மக்கள் மீதான மியான்மரின் நடவடிக்கைகளை தெளிவான இன சுத்திகரிப்பு என்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது, ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியான்மர் நாட்டை, ஐ.நா. பாதுகாப்புக் குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மியான்மர் பாதுகாப்புப் படைகளின் செயலால் ஏழு லட்சம் ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்ற ஒரு வருடத்திற்கு பிறகு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மியான்மர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டதில்லை என்றபோதிலும், வங்கதேசம் அந்த நீதிமன்றத்தில் உறுப்பினர் என்பதால், இந்த விவகாரத்தை அது விசாரிக்கமுடியும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்