ஆஸ்திரேலியா: பதவி போட்டியால் வெளியேற்றப்படும் டர்ன்புல்; பிரதமராகிறார் ஸ்காட் மோரிசன்

பட மூலாதாரம், AFP
கட்சிக்குள் தலைவர்களிடையே நடந்த தலைமைக்கான போட்டியில் வீழ்ந்த ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் அடுத்த பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவியேற்கிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் பொருளாளரான மோரிசனுக்கும், அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரான பீட்டர் டுட்டனுக்கும் இடையே நிலவிய கடும் போட்டியில் மோரிசன் 45-40 வாக்குகள் கணக்கில் வெற்றிபெற்றார்.
மால்கம் டர்ன்புல் புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
கடந்த ஒரு தசாப்தகாலத்தில் கட்சிக்குள் நிலவிய பிரச்சனையால் பதவியிலிருந்து விலக்கப்படும் நான்காவது ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த பெரிய தேசத்தின் தலைவராக இருப்பதற்கான பெரிய பாக்கியமாக இருந்தது. நான் ஆஸ்திரேலியாவையும், மக்களையும் நேசிக்கிறேன்" என்று மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.
"நமது நாட்டில் பல்வேறு விடயங்களை எண்ணி நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைய வேண்டும்."
புதிய தலைமையை தேர்ந்தெடுத்ததன் மூலம் முடங்கியுள்ள மால்கம்மின் அரசாங்கம், முறைப்படி ராஜினாமா செய்யவேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன.
கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பாலான நாளடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பதை நடத்தக்கோரி அளித்த கடிதத்தை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு மால்கம் ஒப்புக்கொண்டார்.
குழப்பங்கள் நிறைந்த வாரம்
இந்த வாக்கெடுப்பு முடிவின் மூலம் கடந்த ஒரு வார காலமாக ஆஸ்திரேலிய அரசியலில் நிலவி வந்த மிகப் பெரிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த டர்ன்புல்லின் பலத்தை நிரூபிக்கும் சவாலில் டுட்டன் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள மோரிசனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக வெள்ளிக்கிழமையன்று டுட்டன் கூறினார்..
இந்த வாக்கெடுப்புக்கு பிறகு இதுகுறித்து மோரிசன், டர்ன்புல் மற்றும் பிஷப் ஆகிய எவரும் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஒரு தசாப்தகாலத்தில் மட்டும் உள்கட்சி பூசலால் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்பு நடவடிக்கைகளில் மூன்று பிரதமர்கள் பதவியை இழந்தனர்.
சமீபத்திய ஆண்டுகளில் ஒரு ஆஸ்திரேலிய பிரதமர் கூடமுழு மூன்றாண்டுகாலம் பதவியில் நீடிக்கவில்லை.
யார் இந்த ஸ்காட் மோரிசன்?
அடிப்படையில் பழமைவாத கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஸ்காட் மோரிசன், டோனி அபாட்டின் ஆட்சிக்காலத்தில் குடிவரவு அமைச்சராக பதவியேற்றவுடன், தேசிய அளவில் முக்கியத்துவத்தை பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
"படகுகளை நிறுத்துங்கள்" என்னும் ஆஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கையை செயல்படுத்தியதன் மூலம் தனது நற்பெயரை உருவாக்கிக்கொண்டார்.
இவரது சர்ச்சைக்குரிய தஞ்சம் கோருவோர் கொள்கைகள், கடல் மார்க்கமாக வரும் அகதிகள் தடுப்பு மையங்கள் குறித்த நடவடிக்கைகள் விமர்சனங்களை உண்டாக்கின.
தற்போதைய ஐம்பது வயதாகும் ஸ்காட் மோரிசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட ஒரே பாலினத்தவர்களின் திருமணம் குறித்த மசோதாவை இவர் எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












