"வெள்ள சேதத்திற்கு தமிழக அரசுதான் காரணம்" - கேரளா சாடல்
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி - "வெள்ள சேதத்திற்கு தமிழக அரசுதான் காரணம்" - கேரள அரசு குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Atul Loke
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திடீரென்று அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதத்திற்கு ஒரு காரணம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு என்று கேரள அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
நீர் வரத்து அதிகமானதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை.
கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி அணையில் இருந்தும் நீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்துக்கு கேரள அரசு உள்ளானது. இதன் காரணமாக கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதம் உண்டாகியுள்ளது என முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய வழக்கில் நேற்று பிராமண பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசு கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தி டைம்ஸ் ஆப் இந்தியா - "ஆசிய விளையாட்டு போட்டிகள்: கபடியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி"

பட மூலாதாரம், EPA
கடந்த 18-ஆம் தேதி இந்தோனீசியாவில் தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்பான செய்தியை 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
55 தங்கம் உள்ளிட்ட 116 பதக்கங்களை பெற்று சீனா பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 25 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 86 பதக்கங்களை பெற்ற ஜப்பான் இரண்டாம் இடத்திலும், தென் கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளன என அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதுவரை இந்தியா 18 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்கள் உள்ளடங்கும்.
வியாழக்கிழமை நடந்த ஆண்கள் கபடி அரையிறுதி போட்டியில் 18-27 என்ற புள்ளிகணக்கில் இரான் அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்விடைந்துள்ளது என அந்த நாளிதழ் செய்தி குறிப்பிட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெறாதது இதுவே முதல்முறை என அந்த செய்தி விவரிக்கிறது.
இதனிடையே, இந்திய பெண்கள் கபடி அணி இறுதி போட்டியில் இன்று இரானை சந்திக்கவுள்ளது.

தி இந்து (தமிழ்) - "ஒவ்வொரு பைசாவும் ஏழைகளைச் சென்றடையும்' - பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images
என்னுடைய அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. மத்திய அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் ஏழை மக்களைச் சென்றடையும். 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் சொந்த வீடு கிடைக்கும் என்று பிரதமர் மோதி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்ததாக தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
என்னுடைய அரசில் ஏழைகளுக்காக டெல்லியில் இருந்து ஒரு காசு செலவு செய்யப்பட்டால் கூட அந்த ஒரு காசும் முழுமையாக, 100 சதவீதம் ஏழைகளுக்குச் சென்று சேரும். என்னுடைய அரசில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை.
2022-ம் ஆண்டுக்குள் இந்த நாடு 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் போது, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பது எனது கனவாகும் என்று என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக தி இந்து (தமிழ்) செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - "ஒரே தேசம், ஒரே தேர்தல் சாத்தியமில்லை" - தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம், VikramRaghuvanshi
மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவ் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தாண்டின் இறுதியில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற வேண்டிய மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படவுள்ளதாக பரவிய தகவலை ராவ் மறுத்துள்ளார்.
அதுபோன்று ஒரே சமயத்தில் தேர்தலை மேற்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், இதற்கு குறைந்தபட்சம் ஓராண்டாவது ஆகுமென்றும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












