ஆண்களை விட பெண்கள் அதிகமாக உறுப்பு தானம் செய்வதற்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், @BBC/Getty
பெரும்பாலும் பெண்கள்தான் சிறுநீரக கொடையாளர்களாக இருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. அமெரிக்க மருத்துவ தரவுகளை ஆய்வு செய்தால் சிறுநீரகம் கொடையளிக்கும் 10 பேரில் 6 பேர் பெண்களாக இருக்கிறார்கள். அதே நேரம் சிறுநீரகத்தை கொடையாக பெறும் 10 பேரில் ஆறு பேர் ஆண்களாக இருக்கிறார்கள்.
ஏறத்தாழ இதே நிலைதான் இந்தியாவிலும் இருக்கிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, சிறுநீரகவியல் துறை 2015 ஆம் ஆண்டு தரவுகளின்படி, சிறுநீரகம் கொடையளிப்பவர்களில் 75 சதவீதம் பேர் பெண்களாகவும், கொடையாக பெறுபவர்களில், 79 சதவீத பேர் ஆண்களாகவும் உள்ளனர் என்கிறது அந்த தரவு.
பெண்கள் அதிகளவில் உறுப்பு தானம்….
குறிப்பாக தற்போது உலகம் முழுவதுமே உடலுறுப்பு செய்யும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே செல்கிறது. அதாவது, ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் அதிக அளவில் உறுப்பு தானமாக கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.
இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், பெண்களிடமிருந்து உடலுறுப்புகளை தானமாக பெறுபவதற்காக காத்துக் கொண்டிருப்பவர்களில், ஆண்களின் எண்ணிக்கை 59% என்பதே!
இன்றைய சூழலில் சிறுநீரகத்தின் தேவை ஆண்களுக்கே அதிகமாக இருக்கிறது. ஆண்களுக்கு சிறுநீரகங்களை தானமாக வழங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, பெண்களுக்கு ஒரு சுமை என்பது ஒருபுறம் இருந்தாலும், இதனால் உடல்நல ரீதியாக ஆண்களும் வேறுவிதங்களில் பாதிக்கப்படுகின்றனர்.
ஏன் இந்த வேறுபாடு?
இதற்கு சமூக காரணிகள்தான் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கனடா நாட்டு மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பெத்தனிஃபோஸ்டர். "சமூக எதிர்பார்ப்புதான் பெண்களை எப்போதும் கொடுக்கும் இடத்தில் வைத்திருக்கிறது" என்கிறார்.
"அன்றாட வீட்டு பணிகளை கவனித்துக் கொள்வதுடன், வீட்டு உறுப்பினர்களை கவனித்துக் கொள்வது பெண்களின் கடமையாக பார்க்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.
எகிப்து மற்றும் மெக்ஸிகோவில் மேற்கொள்ளப்பட்ட இது குறித்தான ஆய்விலும் பெண்கள்தான் அதிகளவில் கொடையாளிகளாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு ஏதேனும் நேரும் போது, அந்த வீட்டு பெண்கள்தான் உறுப்புகளை தானமாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறகிறது. ஒரு சமயம் அது தாயாக இருக்கலாம், வேறு சில சமயம் அது மனைவியாக இருக்கலாம்.
இது தொடர்பாக சிறுநீரகம் கொடையளித்த பெண்களை சந்தித்து உரையாடினர் மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளையன் க்ளோவர்.
எந்த அச்சமும் இல்லை
அவர் சந்தித்த பெண்கள் அனைவரும் தங்கள் சம்பந்தத்துடனேயே சிறுநீரகத்தை கொடையளிப்பதாக கூறி இருக்கிறார்கள்.
பிரசவம் தொடர்பான மருத்துவ நிகழ்வை தாங்கள் அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் எதிர் கொள்வதால், தங்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எதிர்கொள்வதில் எந்த அச்சமும் இல்லை என்று அவர்கள் கூறியதாக பதிவு செய்கிறார் கிளையன்.
பெண்களுக்கு உணர்வு ரீதியானவர்கள்
ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் உறுப்பு தானம் தர முன்வருவதற்கான காரணங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடுவதாக இருந்தாலும் சில அடிப்படை காரணங்களை பார்க்கலாம்.
பெண்கள், குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டவர்கள், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை முழு முதல் காரணமாக சொல்லலாம். அடுத்தது, பெண்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு சிறுநீரக செயலிழப்புக்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது அவசியமாகிறது. பெண்கள், தங்கள் கணவருக்கு சிறுநீரக தானம் கொடுப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

பட மூலாதாரம், BBC/Getty
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வின்படி, 631 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளில் 22% பெண்களும் 8% ஆண்களும் தங்கள் வாழ்க்கைத் துணைகளுக்கு சிறுநீரக தானம் வழங்கியிருக்கின்றனர்.
பெண்கள் கணவருக்காக மட்டுமல்ல, தங்கள் குழந்தைகள், சகோதர-சகோதரிகள், பெற்றோர் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும் உறுப்பு தானம் வழங்குவதில் முன்னணியில் இருக்கின்றனர்.
இதன் பின் பொருளாதார காரணங்களும் இருப்பதை மறுக்கமுடியாது. நோய் என்பது பணக்காரன், ஏழை என்று பேதம் பார்ப்பதில்லை. பொதுவாகவே உலகின் எல்லா நாடுகளிலும் வீட்டு வருமானத்தில் பெரும் பங்களிப்பவர் ஆண் என்பதில் பெருமளவில் மாற்றம் இருப்பதில்லை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகளை சமாளிப்பதோடு, அறுவை சிகிச்சை செய்துக் கொள்பவர் சில மாதங்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் பொருளாதார இழப்பு இரு மடங்காகிறது.
எனவே தானே உறுப்பு தானமாக கொடுத்தால் பொருளாதார இழப்பு குறைவாக இருக்கும் என்பது பெண்களின் பொதுவான மனநிலையாக இருக்கிறது.
இந்த நிலையில் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை அரசே ஈடு செய்யும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும், உறுப்பு தானம் வழங்குவது பெண்களை ஊக்குவிக்கிறது என்று சொன்னாலும், அது சுமையாகவும் மாறுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
எது எப்படியிருந்தாலும், பெண்கள் உறுப்பு தானம் செய்வதற்கான காரணம் பொருளாதாரம் என்ற வாதத்தை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை.
தமிழகத்தில் இதே நிலையா?
பொதுவாகவே பிறரை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதும், வீட்டை பராமரிப்பதும் பெண்கள் என்பதால், வீட்டில் ஏற்படும் நன்மை தீமைக்கு காரணம் பெண்களே என்ற சமூக அழுத்தத்தை பெண்கள் எதிர்கொள்கின்றனர். இந்த சமூக அழுத்தம் தான், உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, தேவை என்றால் உறுப்பு தானம் கொடுப்பது பெண்ணின் கடமை என்ற மனப்போகிற்கு காரணமாகிறது.

பட மூலாதாரம், Getty Images
உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்திலும் இதே நிலையா என்பது குறித்து மூத்த மருத்துவரும் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான அமலோற்பவநாதனிடம் கேட்டோம்.
பொதுவாக பெண்கள்தான் அதிகமாக உறுப்புதானம் செய்கிறார்கள் என்ற இந்த ஆய்வை ஒப்புக்கொண்ட அமலோர்பவனாநாதன் அது சமூக காரணங்களால்தானே தவிரே மருத்துவக் காரணங்கள் ஏதும் இல்லை என்கிறார்.
குறிப்பாக உயிருடன் இருக்கும்போது செய்யும் உறுப்பு தானங்களில் அதாவது சிறுநீரக தானம் போன்றவற்றில் பெண்களே அதிகமாக தானம் செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார் அவர்.
உடல் உறுப்பு தானத்தை பொறுத்த வரையில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் அதற்கு ஹித்தேந்திரன் நிகழ்வு, அதன்பிறகு அப்போதைய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு, வெளிப்படையான நடைமுறைகள், சிறப்பாக செயல்படுத்தப்பட்ட விதிமுறைகள் ஆகியவை காரணம் என்றும் கூறுகிறார் அமலோற்பவனாநாதன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












