ஆப்கானிஸ்தான்: காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Reuters
நாட்டை விட்டு தானே வெளியேறிவெளிநாட்டில் வசித்து வந்த ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் அப்துல் ரஷீத் டோஸ்டும், அந்நாட்டு தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்துக்கு வந்திறங்கிய சிறிது நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அப்துல் ரஷீத் விமான நிலையத்தை கடந்து சென்ற சிறிது நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உஸ்பெக் இனக்குழுவை சேர்ந்தவரும், முன்னாள் படைத்தளபதியுமான அப்துல் ரஷீத்தை அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துருக்கியில் வசித்த இவர், அரசியலில் தனது போட்டியாளரை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்யுமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுக்கிறார்.

பட மூலாதாரம், AFP
விமான நிலையத்தின் வெளியேறும் வாயிலை நோக்கி வந்த தற்கொலை வெடிகுண்டுதாரி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததாக காபூல் நகர போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர். அப்துல் ரஷீத்தின் பாதுகாப்பு வாகனங்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேறியவுடன் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக மற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களிலேயே அப்துல் ரஷீத் தனது அலுவலகத்தில் ஆதரவாளர்களை சந்திக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












