டிரம்பின் சர்ச்சை கருத்தால் மேலும் ஓர் அமெரிக்க வெளியுறவு அதிகாரி பதவி விலகல்

அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளை பற்றி அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துகளால் விரக்தியடைந்த எஸ்தோனியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார்.

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பற்றி அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகள்தான், பணியில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற முடிவை எடுக்க செய்துள்ளதாக ஜேம்ஸ்.டி.மெல்வில்லி கூறியுள்ளதாக ஃபாரின் பாலிஸி பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

தூதரின் தனிப்பட்ட ஃபேஸ்புக் பதிவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

நேட்டோ கூட்டணிக்கு ஆகும் செலவுகளை, அமெரிக்காவை நியாயமற்ற வகையில் சுமக்க செய்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளை அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களின் மீதான வரியை அவர் சமீபத்தில் அதிகரித்துள்ளார்.

வெளியுறவு துறை அதிகாரியான ஜேம்ஸ் டி மெல்வில்லி பல ஐரோப்பிய நாடுகளில் உயரிய பணிப்பொறுப்பை வகித்துள்ளவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெளியுறவு துறை அதிகாரியான ஜேம்ஸ் டி மெல்வில்லி பல ஐரோப்பிய நாடுகளில் உயரிய பணிப்பொறுப்பை வகித்துள்ளவர்.

சமீபத்திய மாதங்களில் ஏற்கனவே சில அமெரிக்க ராஜீய அதிகாரிகள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே பணியில் இருந்து விலகியுள்ளனர்.

  • அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இனிமேலும் பணிபுரிய முடியாது என்று கூறி பனாமாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் ஃபிரிலி கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார்.
  • ஒரு மாதத்திற்கு முன்னால், மனித உரிமைகளை தனது முன்னுரிமையாக வைத்திருப்பதை அமெரிக்கா கைவிட்டுள்ளது என்பதால், சோமாலியாவுக்கான அமெரிக்க அரசு பணியில் ஈடுபட்டிருந்த எலிசபெத் ஷாக்கெல்ஃபோர்டு நைரோபியில் இருந்த தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்று ஃபாரின் பாலிஸி பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஃபாரின் பாலிஸி பத்திரிகை வெளியிட்ட மெல்வில்லியின் தனிப்பட்ட ஃபேஸ்புக் பதிவு தகவலில், அமெரிக்காவிடம் இருந்து ஆதாயம் அடையவும், நம் சேமிப்பை காலி செய்யவுமே ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கப்பட்டது என்றும் டிரம்ப் கூறியுள்ளதும், வட அமெரிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தைபோல நேட்டோ கூட்டணியும் மோசமானதே என்றும் அதிபர் டிரம்ப் சொல்வதும் உண்மையில் தவறில்லாத கூற்றுகளாக இருக்கலாம். ஆனால், நான் பணியில் இருந்து வெளியேற வேண்டிய நேரமிது என்பதை இவை உறுதி செய்கின்றன" என்று மெல்வில்லி நண்பர்களிடம் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வெளியுறவு துறையில் பணிபுரிய தொடங்கிய மெல்வில்லி, எஸ்தோனியாவுக்கான அமெரிக்க தூதராக 2015ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: