டிரம்ப் - கிம் சந்திப்பு: என்ன சொல்கிறார்கள் தென்கொரிய தமிழர்கள்?

சிங்கப்பூரில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அவர்களின் சந்திப்பானது உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

டிரம்ப் - கிம் சந்திப்பு

இந்த உச்சி மாநாட்டைப் பற்றி உலகத்தில் வாழும் பல்வேறு அரசியல் வல்லுநர்கள் பல்வேறு கருத்துக்கள் விமர்சனங்கள் தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர். இருந்தபோதிலும் பல ஆண்டுகளாகப் போர் பதற்றம், வட கொரிய அணு ஆயுத மிரட்டல்களை அருகில் இருந்து அனுபவித்த தென் கொரியத் தமிழர்கள் இந்த வரலாற்றுச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறார்கள் எனக் களத்தில் கருத்துகள் கேட்கப்பட்டன.

இதுபற்றி தமிழகத்தை சேர்ந்தவரும் தற்பொழுது தென்கொரியாவில் சிஜோங் பல்கலைக்கழத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவருமான முனைவர் ஆரோக்கியராஜ் கூறுகையில், "நான் வடகொரியாவின் அணு ஆயுத சோதனை, போர் அச்சுறுத்தல், இரு நாட்டுத் தலைவர்களின் எதிர் கருத்து என அனைத்தையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். பல வருடங்களாக இந்தப் பிரச்சனையானது தென்கொரியாவில் வாழும் எங்களை மட்டுமில்லாமல் மற்ற பக்கத்துக்கு நாடுகளான ஜப்பான், சீனா போன்ற நாடுகளையும் பதற்றமடைய செய்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பானது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. சொல்லப்போனால் மனிதத்தை அழிக்கும் அணு ஆயுதத்தைக் கைவிட்டு அன்பு எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். இது உண்மையில் வரவேற்கத்தக்கது."

ஆரோக்கியராஜ்
படக்குறிப்பு, ஆரோக்கியராஜ்

"இது உலக அமைதிக்கு வழி வகுக்கும். இருந்த போதிலும் ஏன் வட கொரிய அதிபரிடம் இந்த திடீர் மாற்றம் என்பது உண்மையில் ஒரு மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. தென் கொரியாவிலிருந்து அவருடைய செயல்களை பார்க்கையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீதான கோபத்தை என்னால் உணர முடிந்தது. அப்படிப்பட்டவர் எந்தக் காரணத்தினால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. எது என்னவோ இந்த உலகம் எந்த பாதிப்பும், போரும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம் அதுபோலவே இனி கொரிய தீபகற்பம் இருக்க வேண்டும் என்பது என் ஆசை' என்றார்.

தென்கொரியாவில் குடும்பத்துடன் வசிக்கும் சைலஜா சரவணன் கூறுகையில் "நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக கொரியாவில் இருந்துவருகிறேன். வட கொரிய பிரச்சனையை எத்தனையோ நேரங்களில் கடந்துவந்துள்ளேன். எனினும் அவ்வளவாக அச்சப்பட்டதில்லை. இருந்தபோதிலும் தற்பொழுது நடந்து முடிந்துள்ள வடகொரிய-அமெரிக்கா உச்சி மாநாடு உண்மையில் எங்களுக்கும் கொரிய பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய அமைதியைக் கொண்டுவந்துள்ளது. சிங்கப்பூரில் நடந்து முடிந்த வடகொரிய-அமெரிக்கா தலைவர்கள் சந்திப்பாகட்டும், சமீபத்தில் நடந்து முடிந்த வட-தென் கொரிய தலைவர்கள் சந்திப்பாகட்டும் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியையும் ஒரு வித நம்பிக்கையையும் தந்துள்ளன."

டிரம்ப் - கிம் சந்திப்பு

"இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பிற்குப் பிறகு பேசிய அமெரிக்கா அதிபர் டிரம்ப் செய்தியாளர்களின் பெரும்பான்மையான கேள்விக்கும் உறுதியாகப் பதில் அளிக்கவில்லை. தென் கொரிய ஊடகங்களும் கையெழுத்திடப்பட்ட ஆவணங்களைப் பற்றி அதிகமாகப் பேசவில்லை. எப்படியாயினும் அனைத்தும் நிறைவு பெற்று கொரிய தீபகற்பத்தில் அமைதி உறுதியாகும் என நம்புகிறேன் " என்றார்.

  • டிரம்ப் - கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன?தென் கொரியாவில் சியோல் தேசிய பல்கலைக்கழத்தில் பணிபுரியும் ஹரிபாலன் கூறுகையில், நான் தென்கொரியாவில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சிப்பணியில் இருக்கிறேன். வடகொரியா-அமெரிக்கா-தென்கொரியா ஆகிய நாடுகளின் போர் குறித்த நகர்வுகளை நன்கு கவனித்துள்ளேன். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பானது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நிகழ்வு சாத்தியமானதற்கு உண்மையில் தென் கொரிய அதிபர் முன் ஜெ இன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்."
ஹரிபாலன்

"காரணம் கடந்த மாதம் நடந்த வட-தென் கொரிய தலைவர்கள் சந்திப்பே இன்று சிங்கப்பூர் சந்திப்பை சாத்தியமாக்கியுள்ளது. இந்தச் சந்திப்பிலும் தென் கொரிய அதிபர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். வட கொரியா தன் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சமாளிக்க மட்டுமே இந்த முடிவை எடுத்ததாகக் கருதுகிறேன். இந்தச் சந்திப்பின் மூலம் வட கொரியா மீதான பொருளாதார தடை நீங்கி தென்கொரியாவைப் போல் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.

மேலும் இதுகுறித்து தென்கொரியாவில் முதுகலை பயிலும் பாலாஜி கூறுகையில், "முதலில் நடந்துமுடிந்த அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியை நானும் மற்ற தென் கொரிய நண்பர்களும் ஒரு நல்ல முன்னெடுப்பாகவே பார்க்கிறோம். ஏற்கனவே நடந்து முடிந்த வட-தென் கொரிய தலைவர்கள் சந்திப்பின்போது என் சக கொரிய நண்பர்கள் ஆனந்தமடைந்ததை காண முடிந்தது. காரணம் இரண்டு கொரியாவில் இருப்பவர்களும் அண்ணன் தம்பியை போன்றவர்கள். அதிலும் நடந்து முடிந்த வடகொரிய-அமெரிக்கத் தலைவர்கள் சந்திப்பும் பிரிந்த உறவுகள் இணைய வழிவகுக்கும்."

டிரம்ப் - கிம்

"இந்தச் சந்திப்பானது எனக்கு மட்டுமில்லாது மூன்றாம் உலகப்போர் வருமோ என்று இருந்த அனைவருக்கும் ஒரு நிம்மதியைத் தந்துள்ளது. இனி அதுபோன்ற எந்த அச்சமும் படத்தேவையில்லை என்பதைத்தான் இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்துகிறது. இனி கொரியாவில் எந்த ஒரு பதற்றமும் இல்லாத சூழல் நிலவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :