You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் - கிம் சந்திப்பு: சண்டை முதல் சமரசம் வரை
- எழுதியவர், ஜோயல் கண்டர்
- பதவி, பிபிசி
கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று கூறிய வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன், அவரை 'வழிக்கு கொண்டுவரப்' போவதாகவும் கூறினார்.
அதற்கு பதிலடியாக கிம், 'வெறி பிடித்தவர்' என்றும் 'பைத்தியக்காரர்' என்று கூறியதுடன், 'இதுவரை இல்லாத அளவுக்கு கிம் சோதனைக்கு உள்ளாவார்' என்றும் எச்சரித்தார். பின்னர் தங்கள் இருவரில் யாரிடம் அணு ஆயுத பொத்தான் உள்ளது என்று போட்டிபோட்டுக்கொண்டனர்.
அந்த சம்பவங்கள் நடந்து தற்போது ஆறு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், டிரம்ப் மற்றும் கிம் நேரில் சந்தித்துக்கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
தான் வட கொரிய தலைவரை சந்திக்கவுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் மூலம் டிரம்ப் அறிவித்ததன்மூலம் இந்த உலகையே வியப்படையச் செய்தார்.
இது அமெரிக்க அதிபரின் குறிப்பிடத்தகுந்த சூதாட்டம். வெளியுறவு விவகாரங்களை கவனத்துடன் கையாள்வது மற்றும் மென்மையைக் கடைபிடிப்பது ஆகிய கலைகள் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு இயல்பாகவே வரவில்லை. ஆனால், அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான சந்திப்பு ஒன்றை அவர்கள் நிகழ்த்தப் போகின்றனர்.
வட கொரிய அதிபரை நேரில் சந்திக்கும் முதல் அமெரிக்க அதிபர் ஆகப்போகிறார் டிரம்ப்.
கணிக்க முடியாத தலைவர்கள்
கணிக்க முடியாத குணாதிசியங்களைக் கொண்டிருக்கும் இந்த இரு தலைவர்களும் சந்திக்கும் முன், இரு தரப்புக்கும் இந்த சந்திப்புக்கான முன்னேற்பாடுகளை செய்வது சவாலாக இருக்கும்.
வட கொரியா உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் முயற்சிகளைத் தொடங்கும்போது, அமெரிக்க வெளியுறவுத் துறையின் முக்கிய பொறுப்புகள் காலியாக இருந்தன.
இந்த சந்திப்புக்கான முயற்சிகள் அவசரமாகவும் ஏடாகூடமாகவும் நடந்தன. தென் கொரிய மூத்த அதிகாரி சங் உய்-யாங் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தபோது, அவரை அழைத்து கிம் குறித்து விசாரித்தார் டிரம்ப்.
"கிம் உங்களை சந்திக்க விரும்புகிறார்," என்று சங் கூறியதும் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்ட டிரம்ப், அதை உடனடியாக ஊடகங்களிடம் தெரிவிக்கவும் சொன்னார்.
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் வழக்கம்போல மாட்டிக்கொண்டவர் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன்தான். "நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டியுள்ளது," என்று சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் கூறியிருந்தார்.
டிரம்ப்க்கு முன்பு பதவியில் இருந்த அதிபர்கள் வடகொரியா செல்வதை தவிர்த்தே வந்தனர். பில் கிளிண்டன் 2000இல் அங்கு செல்ல பரிசீலித்தார். ஆனால், நீண்டகால இலக்குகளில் அவர் கவனம் செலுத்தினார்.
'போதிய தகவல்கள் தெரியாத டிரம்ப்'
"வடகொரியா பற்றிய போதிய தகவல்களை தெரிந்து கொள்ளாமல் டிரம்ப் சந்திப்புக்குத் தயாராகிறார்," என்று தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் கிறிஸ்டோபர் ஹில்.
ஆனால், அவரசர கதியில் செயல்படும் டிரம்பின் பாணி இந்த விவகாரத்தில் பலனளிக்கலாம் என்கிறார் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஸ்டீபன் ஹேட்லி.
டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் இரு தரப்பிலும் ஏற்கனவே நல்ல பலன் அளித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
சீனா, இரு கொரிய நாடுகளுக்கு இடையே உள்ள ராணுவமயப்படுத்தாத பகுதி அல்லது சர்வதேச கடல் எல்லையில் இருக்கும் ஒரு இடம் ஆகியவற்றில் எங்கேனும் அவர்கள் சந்திக்கலாம். 1989இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் மிக்கேல் கார்பசேவை மால்டா அருகே, சோவியத்துக்கு சொந்தமான ஒரு கப்பலில் சந்தித்தார்.
சந்திப்புக்கான இடைத்தைவிடவும் முக்கியமான வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கு இந்த சந்திப்பின்போதான கோரிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதே.
'விவரம் அறிந்த வடகொரியர்கள்'
விரிவான தரவுகளை விரும்பாமல் சுருக்கான வகையிலேயே எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் பழக்கம் உடைய டிரம்ப்க்கு இந்த சந்திப்புக்கு தயாராவது சற்று கடினமானதுதான்.
அவர் முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபடாவிட்டால் அவருக்கு சிக்கல் உண்டாகும். அமெரிக்கா பற்றிய விவரங்களை விரிவாக அறிந்து வைத்துள்ள வடகொரியர்களை அவர் எதிர்கொள்ளப்போகிறார்.
அவர்கள் இந்த சந்திப்பின்போது எதுவும் பேசப்போவதில்லை. ஆனால், அணைத்து விவரங்களையும் அவர்கள் கிம் ஜாங்-உன்னிடம் அவர்கள் விளக்கி இருப்பார்கள்.
1961இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி வியன்னாவில் சோவியத் அதிபர் நிகிதா குருசேவை சந்தித்தைப் போலவோ, 1972இல் அதிபர் ரிச்சர்டு நிக்சன் சீனாவுக்கு மேற்கொண்ட பயணம் போலவோ டிரம்ப்-கிம் சந்திப்பு இருக்காது.
அவர்கள் சந்திப்பின் ஒவ்வொரு நொடியும் நேரலையில் ஒளிபரப்பாகும். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் செய்தியாகும். அவர்கள் உடலசைவுகள் தீவிரமாக பகுப்பாய்வு செய்யப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்