மூன்று அமெரிக்கக் கைதிகளை விடுவித்த வடகொரியா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வடகொரியச் சிறையில் இருந்த மூன்று அமெரிக்க குடிமக்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தமது டிவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். வட கொரியா சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ அந்த விடுவிக்கப்பட்ட மூவருடன் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். கிம் ஜாங்-உன்னுடன் நிகழ்ந்தது நல்ல சந்திப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சந்திப்புக்கான இடமும் நேரமும் குறிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் ஆண்டுரூஸ் விமானப் படைத் தளத்தில் வந்து சேரும்போது தாம் நேரில் சென்று அவர்களை வரவேற்க இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளில் ஒருவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். மற்ற இருவரும் ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் என்றும், மனித உரிமை மீறல் என்றும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன.

டிரம்ப் - கிம் சந்திப்புக்கான தயாரிப்புகளில் இந்தக் கைதிகளின் நிலைமை என்பது முக்கியப் பேசுபொருளாக இருந்தது. இம்மாதத் தொடக்கத்தில் அவர்கள் சிறையில் இருந்து வடகொரியத் தலைநகர் பியாங்கயாங்கில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இதன் மூலம் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது.

யார் அந்த மூவர்?

  • கிம் ஹேக் சாங்: விரோதச் செயல்களில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் 2017 மே மாதம் கைது செய்யப்பட்டார் இவர். முன்னதாக தம்மை கிறிஸ்துவ மிஷனரி என்று கூறிக்கொண்ட இவர், பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பகல்கலைக் கழகத்தில் ஒரு பரிசோதனைப் பண்ணை தொடங்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.
  • டோனி கிம்: கிம் சேங்-டக் என்றும் அறியப்படும் இவரும் பியாங்யாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்தவரே. உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2017ம் ஆண்டு ஏபரல் மாதத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் வட கொரியாவில் மனிதாபிமானப் பணிகளை செய்துவந்ததாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • கிம் டாங்-சுல்: 60 வயதுக்கு மேற்பட்ட மத போதகரான இவர் 2015ல் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவருக்கு 10 ஆண்டுகள் கடும் ஊழியத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: