ஃப்ளிப்கார்ட் பங்குகளை ரூ.1 லட்சம் கோடிக்கு வாங்கும் வால்மார்ட்
உலகின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் மிகப்பெரிய இணையதள சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை சுமார் 1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) விலையில் வாங்கவுள்ளது.

பட மூலாதாரம், Reuters
இதன் மூலம் வால்மார்ட் உலகின் மிகப்பெரிய இணையதள சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசானுடன் தொழிற்போட்டிக்குத் தயராகிறது.
சுமார் 2,000 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,34,500 கோடி இந்திய ரூபாய்) மதிப்புள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வால்மார்ட் வாங்குகிறது.
இந்தியாவில் சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்க அமேசான் ஏற்கனவே முயற்சி செய்து வந்தது.
அமேசான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கால்பதித்தது முதல் ஃப்ளிப்கார்ட் தொழில் ரீதியான அழுத்தத்துக்கு ஆளாகி வந்தது.
ஏற்கனவே இந்தியாவில் கால்பதிக்க முனைந்து வந்த வால்மார்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகளால், கைவசம் நிறைய பணம் உள்ளது.
2007ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மைக்ரோசாஃப்ட், டென்சென்ட், சாஃப்ட்பேங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளை தொடந்து தக்கவைத்துக்கொள்ளும்.
சந்தை ஆய்வு நிறுவனமான ஃபாரஸ்டரின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் இணையதள விற்பனையின் மதிப்பு சுமார் 2,100 கோடி அமெரிக்க டாலராக (சுமார் 1,41,250 கோடி இந்திய ரூபாய்) இருந்தது.
இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதால் இந்த மதிப்பு இன்னும் அதிகமாகும் என்று கணிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












