எதிர்க்கட்சியாக செயல்படும் ஆளும் கட்சி: பாகிஸ்தானின் அதிகாரம் யாரிடம் உள்ளது?

    • எழுதியவர், உஸதுல்லா கான்
    • பதவி, மூத்த பத்திரிகையாளர்

ஜனநாயக மாளிகை என்பது ஆட்சி செய்யும் தரப்பும் அதன் எதிர்த் தரப்பும் தூண்களாக தாங்கி நிற்கும் அமைப்பு. ஆனால் பாகிஸ்தானின் இன்றைய சூழ்நிலையில் இந்த இரண்டு தூண்களும் எதிரெதிர் தரப்பில் உள்ளதா என்பது சந்தேகமாக இருக்கிறது.

பாகிஸ்தானில், ஆட்சியில் இருக்கும் முஸ்லிம் லீக் (நவாஸ்) பிரிவு ஆளும் கட்சி என்று சுலபமாக கூறிவிடலாம். ஆனால் எதிர்க்கட்சியாகவும் செயல்படுவது அதே கட்சிதானோ என்றும் சந்தேகம் எழுகிறது.

'நான் நாட்டின் பிரதமரக இருந்தாலும், எனக்கு பிரதமர் நவாஸ் ஷரீஃப் தான்' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாசி போகும் இடங்களில் எல்லாம் பேசுகிறார்.

பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி கடந்த வாரம் பேசியபோது, அடுத்த தேர்தலை நடத்தப்போவது தேர்தல் ஆணையம் அல்ல, வேற்று கிரக வாசிகள் (ஏலியன்ஸ்) என்று கூறினார்.

இந்த கருத்தைச் சொன்னது எதிர்க்கட்சித் தலைவர் என்றால், ஆட்சியாளர்களை குறைகூறும் முயற்சி என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதைச் சொல்வது நாட்டின் பிரதமர் என்பதால் பாகிஸ்தான் அரசின் அபத்தத்தை காட்டுவதாக கருதலாம்.

உளவுத்துறை அமைப்புகளின் தலைவரும் பிரதமரே...

சில உளவுத்துறை அமைப்புகளை நோக்கி பிரதமர் கை காட்டமுடியாது. ஏனெனில் உளவுத்துறை அமைப்புகளின் தலைவராக இருப்பதும் அவரே. பிரதமர் ஆவணங்களில் மட்டுமே, அதாவது பெயரளவு பிரதமராக இருந்தாலும்கூட புலனாய்வு அமைப்புகளை சுட்டிக்காட்டி தப்பித்துக் கொள்ளமுடியாது.

மற்றொரு புறம், ஊழல் செய்ததாக கண்டறியப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை பதவிநீக்கம் செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஷெரீஃப் மற்றும் அவருடைய குடும்பத்தின் சொத்துக்களை ஒருபுறம் அரசு பறிமுதல் செய்கிறது.

இந்த பறிமுதல் தொடர்பாக பிரதமர் அப்பாசி என்ன சொல்கிறார்? தேசிய பொறுப்புடைமை அமைப்பு (NAB, National Accountability Bureau) யாரோ ஒருவரின் சமிக்ஞையின்படி செயல்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் குற்றம் சாட்டுகிறார்.

பிரதமர் அப்பாஸியின் கட்சி

பிரதமர் அப்சாசியின் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி உறுப்பினரான ஷாஹ்பாஸ் ஷெரிஃப் வெளியிட்ட கருத்துக்களோ, மேலும் சுவாரஸ்யமானது.

தங்கள் கட்சி, ஆட்சிக்கு வந்தால், கராச்சி நகரை, நியூயார்க்கைப்போல மாற்றுவோம் என்று அவர் கூறினார். நாடு முழுமைக்கும், நவீன நெடுஞ்சாலைகளை அமைப்போம் என்று உறுதியளித்தார்.

சிந்து, பலோசிஸ்தான் மற்றும் கைபர் பாக்தூங்வா ஆகியவை பஞ்சாப் மாகணத்திற்கு நிகரான வளர்ச்சி அடையும் என்கிறார் அவர்.

ஒன்பது ஆண்டுகால ஆட்சி...

நீங்கள் எதிர்க் கட்சி இல்லை, அரசு உங்களுடையது, சிந்து மாகாணத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தை நடத்தி வருவது உங்கள் கட்சிதான் என்பதை சற்றே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாய்ப்பு கிடைத்தால், சிந்து மாகாணத்தை மேம்படுத்துவோம் என்று முழங்கும் அவருடைய கட்சிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை மறந்துவிட்டாரோ?

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் பாதிப்பு மூளையையும் தடுமாற வைக்கும். சகோதரே, கொஞ்சம் உட்காருங்கள் என்று சொல்லி ஷாஹ்பாஜ் ஷரீஃப்பை உட்கார வைத்து அவர் தலையில் ஒரு வாளி குளிர் நீரை ஊற்றி, நனவுலகிற்கு வாருங்கள் என்று கூறவேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: