இதயமாற்று சிகிச்சைக்காக இந்தியாவிடம் உதவி கோரும் பாகிஸ்தான் ஹாக்கி வீரர்

இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக இந்தியா வருவதற்கு, இந்திய அரசு விசா வழங்க வேண்டுமென்று பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

49 வயதான மன்சூர் அஹ்மத்தின் இதயத்திலுள்ள பேஸ்மேக்கரில் (செயற்கை இதயமுடுக்கி) ஏற்பட்டுள்ள பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து யூடியூபில் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார் மன்சூர். அதில் "எனக்கு இன்றைக்கு இதயம் வேண்டும். அதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவி எனக்கு தேவை" என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே சுமூக உறவு நிலவவில்லை என்றாலும், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மருத்துவ விசா வேண்டி விண்ணப்பிக்கலாம்.

"நான் இளைஞனாக ஹாக்கி விளையாடியபோது பல இந்திய ரசிகர்களின் இதயங்களை உடைத்தேன்" என்று விளையாட்டு செய்திகள் தொலைக்காட்சியான ஸ்போர்ட்ஸ் டாக்கிடம் மன்சூர் கூறியுள்ளார்.

அதன் பிறகு, தனக்கு கூடிய விரைவில் விசா வழங்க வேண்டுமென்று இந்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடமும் கோரிக்கை விடுத்துள்ளார் அவர்.

பாகிஸ்தானில் ஹாக்கி ஜாம்பவானாக மன்சூர் அஹ்மத் கருதப்படுகிறார். பாகிஸ்தான் தேசிய ஹாக்கி அணியின் கோல் கீப்பராகவும், அணியை தலைமையேற்றும் செயல்பட்ட அவர் 300க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் பங்குபெற்றுள்ளார்.

1992ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 1994ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கமும் வென்ற பாகிஸ்தான் அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

தான் பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற இந்தியாவிற்கு திரும்ப வரவிரும்புவதாக மன்சூர் கூறியுள்ளார். மேலும், தான் எதிர்த்து விளையாடிய இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் தன்ராஜ் பிள்ளையை சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: