You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாக்குதல்களுக்கு நடுவில்: ஒரு பாகிஸ்தான் பெண் அதிகாரியின் அனுபவம்
- எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரீ
- பதவி, பிபிசி
ஒரு அதிகாலைப் பொழுதில் பலோசிஸ்தான் மாகாணத்தின் முதல் பெண் கள உதவி ஆணையர் பதூல் அசாதியை சந்திக்க நான் சென்றபோது, நாங்கள் தங்கியிருந்த அந்த மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் உள்ள அந்த விடுதி அறையில் இருந்த தொலைக்காட்சி ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியைக் காட்டியது.
அந்த நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான சர்யாப் சாலையில் காவல் துறையினர் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு காவல் அதிகாரிகள் கடுமையாக காயமடைந்தனர். குவெட்டாவில் சமீபத்திய ஆண்டுகளில் வன்முறைச் சம்பவங்கள் புதிதல்ல.
இந்தச் சம்பவத்தைக் கேட்டவுடன் என் மனதில் எச்சரிக்கை மணி ஒலித்தது. எனினும், நன்கு திட்டமிடப்பட்ட, நான் பலமுறை கேள்விப்பட்டுள்ள இந்த தீரப் பெண்ணைச் சந்திப்பதற்கான வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை.
நாங்கள் அவரைப் பார்க்கச் சென்றதும் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார் அசாதி. குவெட்டாவின் ஷியா ஹசாரா இனக்குழுவைச் சேர்ந்த பதூல் அசாதி, அவரது முகம் மட்டுமே வெளியில் தெரியும்படி, தலையை வெள்ளை நிறத் துணியால் மூடியிருந்தார்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஹசாரா பழங்குடியினர், ஆப்கானிஸ்தானில் தங்கள் மீதான அடக்குமுறைகளில் இருந்து தப்பிக்க பலோசிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.
அவர்களின் மத்திய ஆசிய முக அமைப்பு அவர்களைத் தனித்துக் காட்டும். அதனாலேயே அவர்கள் பிறரின் எளிய தாக்குதல் இலக்காக உள்ளனர்.
சமைத்துக்கொண்டே என்னிடம் உரையாடிய அசாதி, "குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் பெண்களால் சாதிக்க முடியாது. அந்த வகையில் நான் நற்பேறுபெற்றவள்," என்றார்.
உள்ளூர் கல்லூரிகளில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அசாதி, திருமணத்துக்குப் பிறகு, அவரது கணவரின் வலியுறுத்தலின்பேரில் பாகிஸ்தான் குடிமைப் பணிகளுக்கான தேர்வை எழுதினார். அவரது கணவரும் சென்ட்ரல் சுப்பீரியர் சர்வீசஸ் (Central Superior Services) எனும் அந்தத் தேர்வில் வெற்றிபெற்று ஏற்கனவே அரசுப் பணியில் இருந்தார்.
"அந்தத் தேர்வு குறித்து முன்பு எனக்கு எதுவும் தெரியாது. நான் ஒரு முறையாவது அதை எழுத முயல வேண்டும் என்று என் கணவர் விரும்பினார். பின்பு நான் அவற்றில் வெற்றிகரமாகத் தேறினேன்," என்கிறார் அசாதி.
"பெண்கள் களப்பணியில் ஆண்கள் அளவுக்கு சிறப்பாகச் செயல்பட மாட்டார்கள் என்று கருதப்படுகிறது. அந்த எண்ணத்தை உடைக்க நான் நிறையவே உழைக்க வேண்டியிருந்தது," என்று தனது சவால்களை அவர் விவரித்தார்.
அரசாங்கத்தின் திட்டங்களை குவெட்டா நகரில் அமல்படுத்துவதே பதூல் அசாதியின் முக்கியப் பணி. சந்தைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல் உள்ளிட்ட பொறுப்புகள் அவரது பணியின் ஒரு அங்கம்.
பணியில் ஈடுபடும்போது பல சூழ்நிலைகள் தம்மை கோபமுறச் செய்வதாக அவர் கூறுகிறார். "ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கப்படுவதைவிட, பொதுப் பெட்டிகளிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
இதற்காக தங்கள் சிந்தனைகளையும் பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
"என் பணிகளை செய்யும்போது பல ஆண்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் நான் ஒருபோதும் அவர்களை பார்த்து பயந்ததோ, ஒதுங்கியதோ இல்லை," என்கிறார் பதூல் அசாதி.
குவெட்டா நகரில் பணியாற்றுவதில் அவருக்கு சவால்கள் இல்லாமல் இல்லை. அவரது பணிகள் பெரும்பாலும் திறந்த வெளியிலேயே இருப்பதால், ஷியா ஹசாரா இனக்குழுவைச் சேர்ந்தவரான அசாதி எளிதில் தாக்கப்படுவதற்கான வாய்ப்புண்டு.
"பலோசிஸ்தானில் பெண்களுக்கு அதிக மரியாதை உண்டு. அதை நான் பணியாற்றும்போது பயன்படுத்திக்கொள்கிறேன். நான் ஒரு பெண் என்பதால் பெரும்பாலும் என்னிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.
குவெட்டா நகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றான மெசான் சௌக்கில் பதூல் அசாதி சில ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றிருந்தபோது நானும் அவருடன் சென்றிருந்தேன்.
காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், நகரின் பிற பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் இவருடன் காவலுக்கு காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் அசாதியிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர் சோதனைகளைத் தொடர ஆயத்தமானார்.
பல ஆண்கள் அவரைச் சூழ்ந்திருந்தபோதும் அவர் கவலையின்றி தன் பணிகளை செய்தார். பலோசிஸ்தானைவிடவும் பாதுகாப்பான மற்றும் முன்னேறிய மாகாணம் பஞ்சாப்.
பஞ்சாப் மாகாணத்தில் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதிலும், அவர் பழமைவாதமும் பழங்குடியினர் மக்கள்தொகையும் நிரம்பிய பின்தங்கிய மாநிலமான பலோசிஸ்தானில் பணியாற்ற அவர் தெரிவு செய்தார்.
"உங்கள் நோக்கமே உங்கள் பணியில் கணக்கிடப்படும் . உங்கள் நோக்கமே நாங்கள் செய்வது அனைத்தையும் பிரதிபலிக்கும். மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்," என்று கூறிய அவர், "அரசு அலுவலகம் என்பது ஒரு மக்களுக்கான நிறுவனம்," என்று முடித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்