You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோரிக்கைக்குப் போராட ஜப்பான் பஸ் டிரைவர்கள் கையாண்ட விநோத வழி
ஜப்பானின் ஒகாயாமா நகரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இந்த போராட்டம்வழக்கமானமுறையில்நடக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்து பணிபுரிகிறார்கள், பயணிகளை வழக்கம்போல் ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்குகிறார்கள்.
ஆனால், பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை மட்டும் அவர்கள் செய்வதில்லை. ஒரு போட்டி நிறுவனத்திடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொள்வதன் காரணமாக அவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து பணிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வாக்குறுதிகளை அளிக்க வலியுறுத்தி போராடுகின்றனர்.
இது போன்ற போராட்டம் ஏற்கனவே சிக்கலில் இருக்கும் பேருந்து நிறுவனத்தின் நிதியாதாரத்தை மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால் இந்த இலவச சவாரி அந்நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள உறவைப் பேணுவதற்கும், அதன் மூலம் சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்கவும் உதவுமென்று ஜப்பானிய செய்தித் தளங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், கடந்த காலங்களில் நடந்த சில விசித்திரமான போராட்டங்களை பார்ப்போம்.
பாலியல் இச்சைகளை ஆயுதமாக பயன்படுத்துதல்
பழங்கால கிரேக்க நகரங்களான ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டாவுக்கிடையே நடந்த போரின்போது, ஏதென்ஸை சேர்ந்த பெண்கள் தங்களுடைய கணவர்கள் போரை முடித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தும்வரை அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.
இவ்விதமான போராட்டத்துக்கான சமீபத்திய உதாரணம் லைபீரியாவில் நடந்தது. அங்கு நடந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 2003ஆம் இவ்விதமான போராட்டத்தை முன்னின்று நடத்திய லீமா போவி என்பவர் தனது முயற்சியில் வெற்றியடைந்ததுடன் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றார்.
ஓராண்டுகாலம் நடக்காத ஐஸ் ஹாக்கி
ஒரு விளையாட்டு தொடர் முழுமையாக ரத்து செய்யப்படுவதென்பது வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பெரும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது. அந்த சூழ்நிலை கடந்த 2004-2005ஆம் ஆண்டுகளில் வட அமெரிக்க தேசிய ஹாக்கி தொடருக்கும் நேரிட்டது.
போட்டியை நடத்தும் அமைப்புக்கும், வீரர்களின் சங்கத்திற்குமிடையே நடந்த ஊதியம் தொடர்பான பிரச்சனை நீண்டகாலத்திற்கு தொடர்ந்ததால் அந்த ஆண்டு நடப்பதாக இருந்த 1,230 போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.
வேலைநிறுத்தம் செய்த போலீசார்!
முதலாம் உலகப்போருக்கு பிந்தைய பணவீக்கத்தால் சுருங்கிப்போன தங்களின் ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தி அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகர போலீசார் கடந்த 1919ஆம் ஆண்டு பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நகரத்தின் பெரும்பாலான போலீசார் இப்போராட்டத்தில் பங்கேற்றதால், சில நாட்களுக்கு நகரத்தின் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் "போரிலிருந்து தப்பியோடியவர்கள்" என்றும் "லெனின் முகவர்கள்" என்றும் அழைக்கப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், விநோதமாக,போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்பட்டு அவர்களுக்குப் பதிலாக தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு அந்தப் பலன்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்