You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் கர்நாடக தேர்தலில் போட்டி
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து தமிழ்: 883 கோடீஸ்வரர்கள் கர்நாடக தேர்தலில் போட்டி
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் போட்டியிடுவதாகத் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களில் 645 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 254 பேர் மீது மோசமான கிரிமினல் வழக்குகளும், 391 பேர் மீது சாதாரண கிரிமினல் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
223 பாஜக வேட்பாளர்களில் 208 வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களாக உள்ளனர். அதேபோல 220 காங்கிரஸ் வேட்பாளர்களில் 207 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 199 மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களில் 154 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 1,090 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 199 பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர் என தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தினகரன்: செலவை குறைக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடல்
வராக்கடன் பிரச்னையால் வங்கிகள் சிக்கித் தவிப்பதால் வருவாய் இழப்பு மட்டுமின்றி நிர்வாக செலவுகளை சமாளிக்கவும் வங்கிகள் போராட வேண்டியதிருக்கிறது. நிர்வாக செலவுகளை குறைப்பதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஏடிஎம்கள் எண்ணிக்கையை வங்கிகள் குறைத்து வருகின்றன.
இதன்படி கடந்த ஆண்டு மே முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏடிஎம்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் 1,10,116 ஆக இருந்து ஏடிஎம் எண்ணிக்கையானது 1,07,630 ஆக குறைந்துள்ளது. அதாவது 2486 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன என்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி 1,122 ஏடிஎம்களை மூடியுள்ளதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர்: மணல் கொள்ளையை தடுத்த காவலர் அடித்துக்கொலை
நெல்லை அருகே ஆற்றில் மணல் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த காவலர் ஜெகதீஷ் துரை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நம்பியாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு பரப்பாடி அருகே பாண்டிச்சேரி கிராமத்தில் நம்பியாற்றில் டிராக்டரில் மணல் அள்ளுவதாக விஜய நாராயணம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது.
இதில் சாதாரண உடையில் சென்ற தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் துறை நடுக்காட்டுக்குள் மணல் கடத்தல் கும்பலை பிடித்துள்ளார். அந்த கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ஜெகதீஷ் உயிரிழந்தார் என்றும் இதையடுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதாகவும் நேற்று பிரதே பரிசோதனை நடக்கவில்லை என்றும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி : சமூகத்தைபிளவுபடுத்த முயற்சிக்கிறார் மோதி - மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ''கர்நாடக மக்களுக்காக வருத்தப்படுகிறேன். இப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடி சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். இது கர்நாடகத்துக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் நல்லதல்ல.ஒரு பிரதமர் மிகவும் தரம் தாழ்ந்து , பிரதமராக பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.
மோதி ஆட்சியில் வங்கிக்கடன் மோசடிகள் அதிகரித்துள்ளன. கடந்த 2013 செப்டம்பரில் 28,416 கோடி என்ற அளவில் இருந்த வங்கிக்கடன் மோசடியானது 2017 செப்டம்பரில் ரூ 1.11 லட்சம் கோடி என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. மோதி அரசின் தவறான பொருளாதார நிர்வாகமானது பொதுத்துறை வங்கிகள் மீதான பொதுமக்கள் நம்பிக்கையை மெதுவாக அழித்து வருகிறது'' மன்மோகன் சிங் பேசியதாக தினமணி (டெல்லி பதிப்பு) செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்