சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அனந்த் பிரகாஷ்
- பதவி, பிபிசி
அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவின் பல இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை சனிக்கிழமை காலையில் நடத்தின.
கடந்த வாரம் அரசுப் படைகள் சிரியாவில் நடத்திய ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கை இது.
சர்வதேச சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டு இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிரியா அரசு குற்றம் சாட்டுகிறது. இந்தத் தாக்குதல்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவும், இரானும் அமெரிக்க கூட்டணிப்படைகளின் தாக்குதலுக்கு எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று காட்டமாக எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்தால் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் சிரியா விவகாரத்தில் எதிரும் புதிருமாக கச்சைக் கட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா, இரான், சிரியா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால், மறுபுறமோ, ஜெர்மனி, இஸ்ரேல், கனடா, துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை வரவேற்கின்றன.
ஆனால், உலகளவில் அதிகரித்துள்ள இந்த பதற்றமான சூழ்நிலை பற்றி இதுவரை இந்தியாவின் அரசு எந்தவித கருத்தும் சொல்லாமல் மெளனமாக இருக்கிறது.
இரு தரப்புடனும் இந்தியாவுக்கு நெருக்கமான உறவுகள் இருந்தாலும், தற்போதைய கொந்தளிக்கும் சூழலில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
மத்திய கிழக்கு விவகாரங்களில் பரிச்சயம் கொண்ட கமர் ஆஹாவின் கருத்துகள் இவை:
"இரு தரப்புகளுக்கும் இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரித்தால், இந்தியாவின் நிலைமை மேலும் சிக்கலாகும். ஒருபுறம், இந்தியாவின் கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என்றால், அதன் எதிரணியில் இருக்கும் ரஷ்யாவுடனான நமது தொடர்போ மிகவும் தொன்மையானது. ரஷ்யா இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்துள்ளது. ஆனால் மாறிவரும் உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டால், மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவதே நல்லது. இந்தியா போரை விரும்பவில்லை என்பதை உறுதியாக கூறலாம். ஐ.நாவின் வழிகாட்டுதல்களின்படி நடக்கவேண்டும் என்று அது கூறும்."
மேலும் சில விஷயங்களையும் கமர் ஆஹா கோடிட்டு காட்டுகிறார், "இந்தியா எப்போதுமே போரை விரும்பியதில்லை, ஏனெனில் போர் மூண்டால் அது எண்ணெய் விலையை உச்சத்துக்கு கொண்டு செல்லும், அதன் விளைவாக இந்திய பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல, இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது."
இதைத்தவிர மற்றொரு முக்கியமான விஷயம் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் என்கிறார் கமர் ஆஹா. "மத்திய கிழக்கு நாடுகளில் 85 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் வர்த்தகமும் அதிகம். எனவே இந்த சிக்கலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே இந்தியா விரும்பும்."

பட மூலாதாரம், Getty Images
இந்த மெளனத்திலிருந்து இந்தியாவுக்கு என்ன நன்மை?
இராக் மீது தாக்குதல் நடத்தும்போது அமெரிக்கா ஐ.நாவின் அனுமதியை பெறவில்லை. அந்த சமயத்திலும் அமெரிக்காவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ இந்தியா எந்த கருத்தையும் கூறவில்லை.
ஆனால், சரித்திரத்தை இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், ஜவஹர்லால் நேரு காலத்தில், கொள்கை ரீதியாக இந்தியா தனது கருத்தை முன்வைத்திருப்பதை காணமுடிகிறது.
பாதுகாப்பு நிபுணர் சுஷாந்த் சரீன் இதுபற்றி விளக்கமாக கூறுகிறார். "கடந்த 20 ஆண்டுகளில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை ஆக்கப்பூர்வமாக மாற்ற இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏனெனில் அமெரிக்காவுடன் நட்பை வளர்த்துக் கொண்ட பிறகும்கூட இந்தியா ரஷ்யாவை விட்டு விலக முடியாது. இதற்கு காரணம் ரஷ்யா, இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவுகிறது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் சிறப்பு விமானங்களை ரஷ்யா வழங்குவதைப் போல அமெரிக்கா கொடுப்பதில்லை. "

பட மூலாதாரம், Getty Images
" 70 சதவிகித இந்திய ராணுவ தளவாடங்கள் தற்போதும் ரஷ்யாவில் இருந்தே வாங்கப்படுவது இந்தியாவுக்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் அது ராணுவ உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் கொள்முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்குமா? அதிலும் குறிப்பாக மோடி அரசின் கொள்கைகளின்படி அதுவும் சாத்தியம் என்று சொல்ல முடியாது" என்கிறார் பாதுகாப்பு நிபுணர் சுஷாந்த் சரீன்.
மோதி அரசின் வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு என்ன?
இந்திய வெளியுறவுக் கொள்கையின் வரலாற்றைப் பார்த்தால், இந்தியா பலவீனமான நாடுகளுக்கு ஆதரவாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.
பல இந்திய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் பாலத்தீன தினத்தை கொண்டாடுவதன் மூலம் பாலத்தீன பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்படுகிறது.
ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் சோஹராப் இதுபற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவிடுகிறார்:
"இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இந்த பிராந்தியத்தின் எந்தவொரு அரசியல் பிரச்சினையுடனும் எந்தவித தொடர்பும் தேவையில்லை, வர்த்தக உறவுகளை மேம்படுத்தினால் போதும் என்று இந்தியா கருதுகிறது. அதனால்தான் இந்தியா எந்தவொரு பிரச்சினையிலும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில்லை".
"எந்தவொரு நாட்டின் அரசும், வெளிநாட்டு சக்திகளால் மாற்றப்படக்கூடாது என்ற கொள்கையை கொண்ட இந்தியாவின் முன் மற்றொரு மாபெரும் கேள்வி தொக்கி நிற்கிறது. ஒரு நாட்டை ஆளும் அரசால் அதன் மக்களையோ, அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது என்றால், அந்த சூழ்நிலையில் இந்தியாவின் இந்த கொள்கையும், கோட்பாடுகள் பொருந்துமா?"

பட மூலாதாரம், Getty Images
"இந்தியா வலுவான நாடாக இல்லாமல் இருந்த காலகட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளான ஆஃப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவராக இருந்தது. அதன் விளைவாக, இந்த நாடுகள் இந்தியாவுக்கு அரசியல் ஆதரவு கொடுத்துவந்தன. ஆனால் இப்பொழுது இந்தியா ஒரு வல்லரசாக மாறிவிட்டது."
இருந்தாலும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிபுணர் சுஷாந்த் சரீனின் கருத்துப்படி, இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்ட தீவிர மாற்றம் தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாக கூறுவது சரியானதல்ல.
இந்தியா தனது நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறும் சரீன், ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்திலும் இந்தியா இதுபோன்ற பல நடைமுறை முடிவுகளை எடுத்த பல சம்பவங்கள் உள்ளது என்கிறார்.
பிரச்சனையின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு இந்தியா முன்னேறிச் செல்கிறது; ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்களின்படி அனைத்து சர்வதேச சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்று இந்தியா கருதுவுதாக கமர் ஆஹா கூறுகிறார்.
பிற செய்திகள்:
- பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டத்தால் அதிர்ந்த சென்னை!
- சர்ச்சை ஆகும் இம்ரான்கானின் 'சிவன்' அவதாரம்
- அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களை காத்தது எப்படி? தமிழ் ஆசிரியையின் சிறப்பு பேட்டி
- ஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்: விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள் உருக்கம்!
- சீனா: பெற்றோர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












