உலகப் பார்வை: பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி

பட மூலாதாரம், SINDH POLICE
பாகிஸ்தானில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த 28 வயதாகும் பாடகி சமீரா சிந்து சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் உள்ள பாடகர்கள் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். சமீரா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
சமீரா எழுந்து நின்று பாடாததால் அவர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் தான் தவறுதலாக துப்பாக்கி விசையை அழுத்திவிட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள நபர் கூறியுள்ளார்.

பதவி விலகிய நோபல் இலக்கியப் பரிசின் தேர்வுக் குழு தலைவர்

பட மூலாதாரம், EPA
இலக்கியத்துக்கான நோபல் பரிசை வழங்கும் 'ஸ்வீடிஷ் அகாடமியின்' உறுப்பினர் ஒருவரின் கணவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் அத்துமீறல் சம்பவத்தை முறையாக விசாரிக்கவில்லை எனும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அதன் தலைவர் சாரா டேனியஸ் பதவி விலகியுள்ளார்.
இது ஏற்கனவே நோபல் பரிசை பெரிதும் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த நவம்பரில் அக்குழுவின் உறுப்பினர் கேத்தரீனா ஃபிரோஸ்டென்சன் என்பவற்றின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் ,மீது 18 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.

சர்ச்சைக்குரிய கடலில் சீனா அணிவகுப்பு

பட மூலாதாரம், REUTERS
வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் கடல் பரப்பு உரிமையில் சர்ச்சை நிலவும் தென்சீனக் கடலில் நடைபெற்ற மாபெரும் கப்பற்படை அணிவகுப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்துகொண்டார்.
தைவானுடன் சீனாவைப் பிரிக்கும் நீரிணையில் ஏப்ரல் 18 அன்று சீனா ராணுவப் பயிற்சி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலில் தவறி விழுந்த கப்பல் பயணி

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவின் கோரல் கடலில் சென்ற ஒரு பயணிகள் கப்பலில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்த பெண்ணைத் தேடும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நியூ கலிடோனியாவில் இருந்து மேற்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 4 மணிக்கு அவர் கப்பலில் இருந்து விழுந்தார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












