You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - பாலத்தீன கலவரம்: விசாரணைக்கு ஐநா வலியுறுத்தல்
நேற்று (வெள்ளிக்கிழமை) காசா - இஸ்ரேல் எல்லைப்பகுதியில் பாலத்தீனர்கள் நடத்திய பேரணியின்போது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பேர் பலியான சம்பவத்தை பாலத்தீனர்கள் தேசிய துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டானியோ கட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, தங்களது ஆறு வாரகால போராட்டத்தை துவக்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர்.
"திரும்புவதற்கான மாபெரும் பேரணி" என்றழைக்கப்படும் இந்த பேரணிக்காக இஸ்ரேலின் எல்லைப்பகுதிக்கு அருகில் பாலத்தீனர்கள் ஆறு முகாம்களை அமைத்தார்கள்.
இஸ்ரேலில் உள்ள தங்களின் வீடுகளுக்கு அகதிகள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
கலவரத்தை அடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
"பாலத்தீன மக்களுக்கான பாதுகாப்பு தேவையை" ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் பாலத்தீன பிரதமர் முஹமத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்."கலவரத்தில் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள்தான் முழு பொறுப்பு" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்திற்கான காரணம் என்ன?
கடந்த 1976 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவப் படைகள் பாலத்தீனர்களின் நிலத்தை பறிமுதல் செய்தபோது நடத்திய தாக்குதலில் ஆறு பாலத்தீனிய போராட்டக்காரர்கள் உயிரிழந்த தினம் மார்ச் 30 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த பேரணி நடைபெற்றது.
கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது நடந்த மோதலில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்த நிகழ்வை குறிக்கும் நக்பா (பெரும் ஆபத்து) தினம் கடைபிடிக்கப்படும் மே மாதம் 15 ஆம் தேதி இந்த போராட்டம் நிறைவு பெறும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பாலத்தீனர்கள் இஸ்ரேல் திரும்புவதற்கான தங்கள் உரிமையை நீண்டகாலமாக கோரி வருகின்றனர். ஆனால், காசா மற்றும் மேற்குக் கரை நகரத்தில் இருக்கும் எதிர்கால பாலத்தீன மாகாணத்தில் மக்கள் குடியேற வேண்டும் என்று இஸ்ரேல் கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்