You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - பாலஸ்தீன சிக்கலில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா முயலுமா ?
- எழுதியவர், ஜுபைர் அஹமத்
- பதவி, பிபிசி இந்தியா
வெளியுறவு கொள்கைகளில் இந்தியா மணப்பெண்ணாக நடந்துக் கொள்வதற்கு பதிலாக பல்வேறு சமயங்களில் அது மணப்பெண் தோழியாகதான் நடந்துக் கொண்டுள்ளது. பல சமயங்களில் அது நாணமுள்ள மனைவியாக நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த உலகின் சக்தி கொண்ட நாடாக வேண்டும் என்று இந்தியா குறிக்கோள் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த லட்சியங்களுக்கு வலுவூட்டும், அந்த லட்சியங்களை நிஜமாக்கும் கொள்கைகள் எதுவும் இந்தியாவிடம் இல்லை.
பிரதமராக 2014 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து நரேந்திர மோதி உலகின் நான்கு முனைகளுக்கும் பயணம் செய்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதை உயர்ந்துள்ளது. ஆனால், அவரின் பயண வேகத்திற்கு ஏற்றபடி அவருடைய வெளியுறவு கொள்கையில் வேகமில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இருதரப்பு வாதத்திலும், பிராந்தியவாதத்திலும் கவனம் செலுத்துவதாக ஏறத்தாழ அனைத்து வல்லுநர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்திர இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று இந்தியா முயற்சிக்கிறது. சர்வதேச சக்திகளான, அமெரிக்காவும், பிரிட்டனும் இந்தியாவின் லட்சியத்தை நனவாக்க முயற்சித்தன. தனக்கு உரிய இடமென்று இந்தியா நம்பும் அந்த இடத்தை அதனால் அடைய முடியவில்லை.
தன்னை சர்வதேச சக்தியாக நிறுவிக் கொள்ள இப்போது இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையேயான சிக்கல்களில் இத்தனைநாள் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வந்தது. அந்த இடத்தை இந்தியாவால் பிடிக்க முடியும் என்று பல நிபுணர்கள் நம்புகிறார்கள். ஏனெனில், பல பாலத்தீனியர்கள் அமெரிக்காவின் போக்கு குறித்து அதிருப்தி கொண்டு இருந்தனர். அமெரிக்கா இஸ்ரேல் சார்பாக நடந்துக் கொள்வதாக பல பாலத்தீனியர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், இந்தியாவின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. 1967ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளைக் கொண்டு, இரு அரசு கொள்கைக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. இஸ்ரேலும் இதை நன்கு அறியும். ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா தனக்கு சாதகமாக நடந்துக் கொள்ளாது என்பதை இஸ்ரேல் நன்கு அறியும்.
அதே நேரம், இந்தியா இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பதை பாலத்தீனியர்களும் அறிவார்கள். இந்தியா தனது தேசப் பாதுகாப்புத் திறன் விஷயத்தில் இஸ்ரேலை அதிகம் சார்ந்து இருப்பதை பாலத்தீனியர்கள் நன்கு அறிவார்கள்.
இந்த இரண்டு நாடுகளுடனும் வெளிப்படையாக நடந்துக் கொள்வதால் இந்தியா நற்பெயரை சம்பாதித்துள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் மற்றும் வடக்கு கரை ரமல்லா ஆகிய மூன்று அரபு நாடுகளுக்கு (பிப்ரவரி 9 -12) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரமல்லாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் இவர்தான். இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமரும் இவர்தான்.
நமது பழைய உறவுகளை ஆழப்படுத்திக் கொள்ளவதற்குதான் பிரதமர் இந்த பாலத்தீன பயணத்தை மேற்கொள்வதாக வெளியுறவுதுறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கு முன்பாக இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட பாலத்தீன பயணம்தான் வரலாற்றில் கொண்டாடப்பட்டது. ஆனால், பிரதமர் மோதி பாலத்தீனத்திற்கு செல்லப் போவது, பாலத்தீனியர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
பாலத்தீனம் மற்றும் இஸ்ரேலின் நம்பத் தகுந்த நண்பனாக மட்டும் இந்தியா இல்லை, அந்த இரண்டு நாடுகள் மத்தியிலும் பிரபலமான ஒரு நாடாகவும் இந்தியா உள்ளது. பாலத்தீனர்கள் மத்தியில் அமெரிக்கா நம்பிக்கையை இழந்துள்ள இந்த சூழ்நிலை, சண்டையிட்டுக்கொள்ளும் இந்த இரு தேசங்கள் இடையே அமைதிக்காக மத்தியஸ்தம் செய்யும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது.
இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமா? பழைய தரவுகளைப் பார்க்கும் போது, 'இல்லை' என்பதுதான் விடையாக இருக்கிறது.
ஜவஹர்லால் பல்கலைக்கழத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் ஏ.கே.ராமகிருஷ்ணன், இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நம்புகிறார். "இதுவொரு நல்ல வாய்ப்பு. அதனை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு சந்தேகமும் வேண்டாம்"
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஷெசான்க், இந்தியா முயற்சி செய்யலாம். ஆனால், அமெரிக்கா தோற்கும் இடத்தை இந்தியாவால் பிடிக்க முடியும் என்று தான் நம்பவில்லை என்கிறார். அவர், "இந்த விஷயம் சிக்கலானது. பழயதும்கூட. அமெரிக்கா தோற்ற விஷயத்தில் இந்தியா எப்படி வெல்லும் என்று தெரியவில்லை. ஆனால், முயற்சித்துப் பார்க்கலாம்." என்கிறார்.
ஆனால், பெரும்பாலான வெளியுறவுத் துறை கொள்கை நிபுணர்கள், முதலில் இந்தியா பெரிதாக சிந்திக்க வேண்டும் என்கின்றனர்.
இஸ்ரேல் பாலத்தீனத்திற்கு இடையேயான பிரச்சனைகளில் இந்தியா அமைதிக்காக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று விரும்பும் ராமகிருஷ்ணன், இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை வடிவமைப்பவர்கள் அதற்கான தந்திரங்களை வடிவமைக்க வேண்டும். அமைதி மத்தியஸ்தம் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய காரியம் இது என்கிறார்.
இந்தியா மற்ற சர்வதேச சக்திகளுடன் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்கிறார் ஷெசான்க். "இந்தியா யாரிடமும் கலந்தாலோசிக்காமல், இந்த முயற்சியில் இறங்கினால், தன் பலத்தை மீறி செயல்படுவதற்கு ஒப்பாகும். இந்தியா இப்படியான முயற்சியில் இறங்குமானால், அதற்கு முன், வட மேற்கு தேசங்களையும், ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஐந்து நாடுகளையும் கலந்தாலோசிக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவின் பங்கு முக்கியமான ஒன்றாக கருதப்படும்."
தன்னை உலகத் தலைவராக முன்னிறுத்திக் கொள்வதற்கான பொறுப்பு இந்தியாவிடம்தான் உள்ளது. அதிக சிக்கல்கள் நிறைந்து இருந்தாலும் கூட, இஸ்ரேல் - பாலத்தீன பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதைவிட பெரிய களம் எதுவும் இந்தியாவுக்கு வாய்க்காது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்