You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாளம்: விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் சொல்வது என்ன?
நேபாளத்தில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்ட விமான விபத்திலிருந்து தப்பி பிழைத்தவர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் அந்த விமானம் கீழ் நோக்கி விழுந்த மோசமான தருணங்களை பற்றி கூறுகிறார்கள்.
நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவிலுள்ள திரிபுவன் விமான நிலையத்தில் 71 பயணிகள் மற்றும் ஊழியர்களை கொண்ட விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது.
விமானம் விபத்திற்குள்ளானபோது பெரும் சத்தம் கேட்டதாகவும், விமானம் கடுமையாக குலுங்கியபோது உள்ளேயிருந்தவர்களின் அழுகுரலும், கூச்சலும் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விமானத்தின் இடிபாடுகளிலிருந்து தரவு பதிவு கருவி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.
நேபாளத்தில் முதல் முறையாக விமானம் அறிமுகப்படுத்தப்பட்ட 1949 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 70க்கும் மேற்பட்ட விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் நடைபெற்றுள்ளது.
மோசமான வானிலை, போதிய அனுபவமற்ற பைலட்டுகள் மற்றும் பராமரிப்பின்மை ஆகியவற்றின் காரணமாகவே பெரும்பாலான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.
விமானத்தின் ஜன்னலை உடைத்து தப்பித்த ஒரு பயணி, தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான விமானம் கடுமையான அதிர்வினை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
'ஒரு உரத்த சத்தம்'
பாம்பார்டியர் டாஸ் 8 கியூ400 என்ற 17 வருட பழைய விமானமான அது வங்கதேச தலைநகரான டாக்காவிலிருந்து, காத்மண்டு நகருக்கு யூஎஸ்-பங்களா என்ற வங்கதேச நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
விபத்தில் சிக்கி தப்பித்தவர்களில் ஒருவரான கேஷவ் பாண்டே என்பவர், "நான் அவசர வழி கதவுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். பாதுகாவலர்கள் வந்து கதவை திறந்து வெளியே அழைத்து சென்றுவிட்டனர். அதன் பிறகு நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது, நான் மயக்கநிலைக்கு சென்றுவிட்டேன்."
"விமானத்தின் வெளிப்புறத்தில் பெரியளவில் தீப்பிடித்ததால், எங்களது இருக்கையின் வழியாக புகை வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து வெடிப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு தீ உடனடியாக அணைக்கப்பட்டவுடன் நாங்கள் மீட்கப்பட்டோம்" என்று விபத்தில் சிக்கிய மற்றோடு பயணியான வங்கதேசத்தை சேர்ந்த 29 வயது ஆசிரியரான ஷெரின் அஹ்மத் பிபிசியிடம் கூறினார்.
விபத்திலிருந்து தப்பிய 22 பேரில் 11 பேர் நேபாளத்தையும், 11 பேர் வங்கதேசத்தையும் சேர்ந்தவர்களாவர்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான விவரம் அறியப்படவில்லை. விமான நிறுவனம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டையும், விமான நிலையமோ விமானம் தவறான திசையில் தரையிறங்கியதாகவும் குற்றஞ்சாட்டுகின்றன.
விமான ஓடுதளத்தின் தெற்கு பகுதியில் இருந்து தரையிறங்க இந்த விமானம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விமானம் வடக்கு பகுதியில் இருந்து தரையிறங்கியது'' என்று நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் பொது மேலாளர் சஞ்சீவ் கௌதம் தெரிவித்ததாக காத்மாண்டு போஸ்ட் பத்திரிக்கை கூறியுள்ளது.
''அசாதாரண முறையில் நடந்த இந்த விமான தரையிறக்கம் குறித்த காரணங்களை இன்னமும் நாங்கள் முழுவதுமாக அறிந்துகொள்ளவில்லை'' என்று அவர் மேலும் கூறினார்.
ஆபத்தான விமான நிலையம்
"இதற்கு முன்னர் நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்துக்களுக்கு தெளிவற்ற தகவல் தொடர்புகள் காரணமாக இருந்திருக்கின்றன" என்று விமான போக்குவரத்து வல்லுனரான கிரெக் வால்ட்ரான் பிபிசியிடம் கூறினார்.
உலகளவில் விமான போக்குவரத்தில் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக நேபாளம் பார்க்கப்படுகிறது. மலைப்பாங்கான நிலப்பரப்பு மட்டுமல்லாது, அங்கு அடிக்கடி மாறும் வானிலையும் விபத்துக்களுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
"விமானம் பறந்துகொண்டிருந்த பரப்புக்கு அருகில் அப்போது இடி மற்றும் மின்னல் ஏற்பட்டதாக வளிமண்டலவியல் தரவுகள் தெரிவிக்கிறது" என்று வால்ட்ரான் கூறுகிறார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் விமானம் விபத்துக்குள்ளானதில் 167 பேர் பலியானதே இதற்கு முன்பு நடைபெற்ற மோசமான விபத்தாக கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்