வடகொரியா: ஐ.நா. தடைகளை மீறி சிங்கப்பூர் நிறுவனங்கள் சட்டவிரோத வர்த்தகம்

    • எழுதியவர், கரிஷ்மா வாஸ்வனி
    • பதவி, பிபிசி ஆசிய வர்த்தக செய்தியாளர்

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளையும் மீறி சிங்கப்பூரைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் விலையுயர்ந்த மதுபானம் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வடகொரியாவுக்கு விற்பனை செய்துள்ளதாக பொது வெளியில் கசிந்துள்ள ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கை இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள சிங்கப்பூர் அரசு, இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அணு ஆயுத சோதனைகளில் தொடர்ச்சியாக வடகொரியா ஈடுபட்டு வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இந்த ஆண்டு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், வடகொரியா மீது ஐ.நா விதித்துள்ள தடைகள் எதுவும் இதுவரை தளர்த்தப்படவில்லை.

கசிந்துள்ள அறிக்கையில் இருப்பது என்ன?

ஐ.நா தடைகளை மீறி ஜூலை 2017 வரை ஓ.சி.என் மற்றும் டி-ஸ்பெசலிஸ்ட் ஆகிய சிங்கப்பூர் நிறுவனங்கள் வடகொரியாவுக்கு தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன. எனினும், அதை அந்த இரு நிறுவனங்களும் மறுத்துள்ளன.

அந்த இரு நிறுவனங்களும் வடகொரியாவின் தியோடங் கடன் வங்கி எனும் வங்கியில் வைத்துள்ள கணக்கில் இருந்து சிங்கப்பூரில் உள்ள டி-ஸ்பெசலிஸ்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு 2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், இரண்டு மில்லியன் டாலருக்கும் (சுமார் 13 கோடி இந்திய ரூபாய்) அளவுக்குப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

அந்தப் பணம் வடகொரியாவில் இருந்து வரவில்லை என்றும் 2102க்கு முன்பு செய்யப்பட்ட விற்பனை ஒன்றுக்கு ஹாங் காங்கில் இருந்து வந்ததாகவும் டி-ஸ்பெசலிஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

மேற்கண்ட இரு சிங்கப்பூர் நிறுவனங்களும், அமெரிக்காவால் தனது பொருளாதாரத் தடை பட்டியலில் 2017இல் இணைக்கப்பட்ட வடகொரியாவைச் சேர்ந்த ரூக்கியாங் வர்த்தக வங்கியுடன் 'நீண்ட காலமாக , நெருங்கிய வர்த்தகத் தொடர்பு ' கொண்டுள்ளதாக அந்த ஐ.நா அறிக்கை கூறுகிறது.

சிங்கப்பூர் - வடகொரியா வர்த்தக உறவுகள் எப்படி?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வடகொரியா உடன் வர்த்தகம் செய்ய, தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் முழுமையாகத் தடை விதித்தது. அதற்கு முன்பு வரை, கட்டுப்பாடுகளுடன் சில வகை வர்த்தகங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

இந்த முறைகேடான வர்த்தகத்திற்கான பரிமாற்றங்களுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த சில வங்கிகளும் உடந்தையாக இருந்துள்ளன. இது குறித்து, அவர்களின் தரப்பை அறிய இரு வங்கிகளை பிபிசி அணுகியபோது, தங்கள் நாட்டில் உள்ள ரகசியங்களைக் காப்பதற்கான சட்டங்கள் எந்தத் தகவல்களையும் வெளியிடத் தங்களை அனுமதிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஐ,நாவுடன் இந்த விசாரணையில் மிகுந்த இணக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கண்காணிப்பு அமைப்பான 'மானிட்டரி அத்தாரிட்டி ஆஃப் சிங்கப்பூர்' தரப்பில் பிபிசியிடம் கூறப்பட்டது.

"கண்டுபிடிப்பது கடினம்"

ஐ.நா வல்லுநர் குழுவின் முன்னாள் உறுப்பினரான வில்லியம் நியூகாம்ப், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வடகொரியா பயன்படுத்திக் கொள்கிறது என்று கூறுகிறார்.

"அவர்கள் ஒரு நாட்டில் ஒரு போலி நிறுவனத்தைத் தொடங்குவார்கள். பின்பு வேறு நாட்டில் இன்னொரு நிறுவனத்தைத் தொடங்குவார்கள். இந்த இரு இடங்களும் அல்லாத ஒரு இடத்தில் வங்கி தொடங்கப்படும். வர்த்தகம் வேறு ஒரு இடத்தில செய்யப்படும்," என்று அவர் கூறினார்.

இத்தகைய வர்த்தகக் கட்டமைப்பில் பல்வேறு நாட்டின் சட்டங்கள் உள்ளடங்கியுள்ளதால், அவற்றை கண்டுபிடிப்பது கடினமாகிறது என்கிறார் வில்லியம் நியூகாம்ப்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :