குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோட்டை சேந்தவர் திவ்யா. இவரும் இவரது கணவருடன் குரங்கணி மலையேற்றத்திற்கு சென்றுள்ளார்.

காட்டுத் தீயில் சிக்கி இறந்த விவேக்கின் உடல் நேற்று (திங்கள்கிழமை) மீட்கப்பட்ட சூழ்நிலையில் இன்று அவரது மனைவி திவ்யா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

நவம்பரில் திருமணம்

துபாயில் பணிபுரியும் விவேக்கிற்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதிதான், திவ்யாவுடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடித்து துபாய் சென்ற அவர், விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு மார்ச் 1 ஆம் தேதி வந்துள்ளார்.

வாழ்வின் அனைத்து முக்கிய தருணங்கள் குறித்தும் சமூக ஊடகத்தில் எழுதி இருக்கும் விவேக், இந்தப் பயிற்சிக்காக திட்டமிட்டது முதல் தேனிக்கு சென்றது வரை இந்த மலையேற்றம் குறித்த அனைத்து விஷயங்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இவர்கள் திருமணம் நடைப்பெற்று அண்மையில் நூறு நாள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாகதான் இவர்கள் இந்த மலையேற்றத்திற்கு சென்றுள்ளார்கள்.

காட்சி பொருள் அல்ல

தீ காயம் அடைந்தவர்களை பார்க்க யாரும் வராதீர்கள் என்கிறார் தீ காயம் அடைந்த அனுவித்யாவின் சகோதரர் ஜனார்த்தனன்.

அனுவித்யா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஜனார்த்தனன், "யார் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. தொடந்து பலர் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இங்குள்ள யாரும் காட்சி பொருள் அல்ல. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது." என்கிறார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :