டிரம்ப்-கிம் சந்திப்பு நம்பிக்கை: உற்சாகத்தில் ஆசிய பங்குச் சந்தைகள்
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதால், அந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறையக்கூடும் எனும் நம்பிக்கையில் ஆசியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏறுமுகம் கண்டுள்ளன.

பட மூலாதாரம், AFP
டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் இடையேயான சந்திப்பு நடைபெறும் என்ற அறிவிப்பு தொழில்துறையின் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய பங்குச் சந்தைகளின் குறியீடான கோஸ்பி கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 1.5% வளர்ச்சி கண்டுள்ளது.
ஜப்பானின் நிக்கி-225 குறியீடு தொடக்கத்தில் 2.5% வளர்ச்சி கண்டாலும் பின்னர் சிறிய அளவில் சரிந்தது.
ஹாங் காங்-இன் ஹாங் செங் பங்குச் சந்தைக்கு குறியீடு 0.9% வளர்ச்சியும், ஆஸ்திரேலியாவின் ஆல் ஆர்டினேட்ஸ் குறியீடு 0.4% வளர்ச்சியும் கண்டுள்ளது மட்டுமல்லாது சீனாவின் பங்குச் சந்தைகளும் அந்த அறிவிப்புக்குப் பின் சிறிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள முதலீட்டாளர்கள் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நிலவும் பிரச்சனையைக் கண்காணித்து வருகின்றன. எனவே, வரும் மே மாதம் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவது தங்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
இதனிடையே தென்கொரிய நாணயமான தென் கொரிய யுவானின் மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது நிலவும் ஸ்திரமான பொருளாதார சூழ்நிலையால், அதிக லாபம் தர வாய்ப்புள்ள சொத்துகளில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளதால் ஜப்பான் நாணயமான யென் அமெரிக்க டாலருக்கு எதிராக சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மை உடையவர்களாக கருதப்படும் இரு உலகத் தலைவர்களான டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் ஆகியோரால் கொரிய தீபகற்பத்தில் பிரச்சனை உண்டாவதை தொழில் துறையினர் விரும்பவில்லை.
கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால் கொரிய தீபகற்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால், அது அந்த நாடுகள் அனைத்தையும் பாதிக்கும்.
சர்வதேச அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் தொழில் உற்பத்தியின் முக்கிய மையங்களில் ஒன்றாகத் திகழும் அந்தப் பிராந்தியத்தில், தற்போது நிலவுவம் பதற்றமான சூழல் வலுவடைந்தால் அது கிழக்கு ஆசிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைக் கடுமையாக பாதிக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












