பிரிட்டன்: முன்னாள் ரஷ்ய உளவாளியை கொல்ல நச்சு வேதிப்பொருள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
பிரிட்டன்: முன்னாள் ரஷ்ய உளவாளியை கொல்ல நச்சு வேதிப்பொருள்

பட மூலாதாரம், EPA/ YULIA SKRIPAL/FACEBOOK
பிரிட்டனில் கடந்த ஞாயிறன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவை கொல்ல நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை கூறியுள்ளது.
ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

அர்ஜென்டினா: கடைசி ராணுவ ஆட்சியாளர் மரணம்

பட மூலாதாரம், AFP
மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அர்ஜென்டினாவில் கடைசி ராணுவ ஆட்சியாளரான ஜெனெரல் ரெனால்டோ பிக்னன் தனது 90வது வயதில் உயிரிழந்தார். அவர் ஜூலை 1982 முதல் டிசம்பர் 1983 வரை பதவியில் இருந்தார்.
அரசின் எதிர்ப்பாளர்களின் குழந்தைகளைத் திருடி, ராணுவ ஆட்சியின் ஆதரவாளர்களுக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 56 பேரின் கொலை மற்றும் 34 குழந்தைகளின் திருட்டுக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஜெர்மனி: வலதுசாரிக் குழுவினருக்கு சிறை

பட மூலாதாரம், EPA
தீவிர வலதுசாரி குழு ஒன்றைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட எட்டுப் பேருக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
'ஃபிரீட்டல்' எனும் அக்குழுவினர் மீது, தங்கள் அரசியல் எதிரிகள் மற்றும் தஞ்சம் கோரி வந்த அகதிகள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக கொலை முயற்சி, தீவிரவாதக் குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

சௌதி மனித உரிமைகள் குறித்து பிரிட்டன் பிரதமர் கவலை

பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபியாவின் அரியணைக்கான இளவரசர் முகமது பின் சல்மானிடம் அந்நாட்டில் நிலவும் மனித உரிமைகள் குறித்த கவலைகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வெளிப்படுத்தியுள்ளார்.
ஏமனில் மனிதாபிமான உதவிகள் முழுமையாக சென்று சேரவும், அங்கு அரசியல் தீர்வை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளும்படி சல்மானிடம் தெரீசா மே வலியுறுத்தினார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












