தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் - ஏன்...எங்கே?
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை பிபிசி நேயர்களுக்காக 'உலகப் பார்வை' பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
பெட்டிக்குள் பத்து வயது சிறுவன்

பட மூலாதாரம், AFP
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்கு ஒரு சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்ட பத்து வயது சிறுவனின் தந்தை சிறை தண்டனையிலிருந்து தப்பினார். பையனை பெட்டிக்குள் வைத்து ஸ்பெயினுக்கு அழைத்துவந்த குற்றத்திற்காக அலி அவட்டாரா என்ற அந்த தந்தைக்கு எப்படியாவது சிறை தண்டனை வாங்கி தந்துவிட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விரும்பினர். ஆனால், சிறு அபராதம் மட்டும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தன் பையன் பெட்டிக்குள் இருப்பது அந்த தந்தைக்கு தெரிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை குறிப்பிட்டு தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

துப்பாக்கி தடை

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மாற்றியமைக்கப்படா துப்பாக்கி வகையான பம்ப்ஸ்டாக் இயந்திர துப்பாக்கிக்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஃப்ளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்த ரக துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க மக்கள் ஆயுதக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி உள்ளூர் நேரப்படி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், தம் அரசுக்கு பள்ளிகளின் பாதுகாப்புதான் அதிமுக்கியமானது என்றார்.

250 பேர் பலி

பட மூலாதாரம், EPA
சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, 100 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்பட்டுவந்த சூழ்நிலையில், இந்த எண்ணிக்கை 250 வரை உயர்ந்துள்ளது. 2013 ஆண்டிலிருந்து அந்த பகுதியில் நடந்த மிகமோசமான தாக்குதல் இது என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள். இந்தத் தாக்குதலில் 50 குழந்தைகள் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலப்பகுதியை மூடிய புழுதி புயல்

பட மூலாதாரம், Queensland Police
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்த் பகுதியில் வீசிய புழுதி புயல் ஒன்று, அந்த நிலப்பகுதி முழுவதையும் தூசியால் மூடியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளித்தது. உள்ளூர் நேரப்படி, தென் மேற்கு குயின்ஸ்லாந்தில் செவ்வாய்க்கிழமை வீசிய இந்த புழுதி புயல், மரங்களை சாய்த்து, சிறு சேதம் உண்டாக்கியது. ஆஸ்திரேலியா வானிலை மைய அதிகாரி ஹாரி, இந்த புழுதி புயலானது, மணிக்கு 96 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருக்கலாம் என்றார்.

போதிய ஆயுதம் இல்லை

பட மூலாதாரம், AFP
ஜெர்மனி ராணுவத்தில் ஆயுதம் மற்றும் ஆட்கள் பற்றாகுறை நிலவுவதும், இது அவர்கள் எதிரிகளை எதிர்கொள்வதற்கு தடையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. பெரிய விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் அவர்களிடம் இல்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிக்கையை பிரசுரித்த நாடாளுமன்ற ஆணையர் பீட்டர், "ராணுவத்தின் எதிர்கொள்ளும் திறன் கடந்த சில ஆண்டுகளாக மேம்படவில்லை. மாறாக, மோசமடைந்து இருக்கிறது." என்றார்.

அமைதி மாநாடு

பட மூலாதாரம், AFP
பாலத்தீன அதிபர் மஹமூத் அப்பாஸ் இஸ்ரேல் - பாலத்தீன பிரச்சனைக்கு தீர்வுகாண, ஓர் அமைதி உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில், அவர் ஆற்றிய ஓர் அரிதான உரையில், தாங்கொண்ணா துயரத்தை தம் மக்கள் அனுபவிப்பதாக அவர் கூறினார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












