ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டிரம்ப்-ரஷ்யா: அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஃஎப்பிஐ மீது குற்றச்சாட்டு

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

டொனால்ட் டிரம்பின் அதிபர் தேர்தல் பரப்புரை விசாரணைகளில் அமெரிக்க பெடரல் புலனாய்வு அமைப்பு (ஃஎப்பிஐ) அதனுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டும் மெமோவை அமெரிக்க காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் உதவியாளரிடம் உளவு பார்க்க ஆதாரமற்ற சான்றுகளை ஃஎப்பிஐ பயன்படுத்தியதாக குடியரசு கட்சியினரால் எழுதப்பட்ட இந்த மெமோ கூறுகிறது.

இந்த மெமோ வெளியிட்டுள்ளதை கண்டித்திருக்கும் ஃஎப்பிஐ, முக்கியமான உண்மைகள் விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரபல இஸ்லாமிய ஆய்வாளர் விசாரணை

தாரிக்

பட மூலாதாரம், AFP

பிரபல இஸ்லாமிய ஆய்வாளர் தாரிக் ரமாடான் மீதான இரண்டு பாலியல் வல்லுறவு வழக்கில், கிரிமினல் விசாரணை நடத்துவதற்கு பிரான்ஸிலுள்ள நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் காவல்துறையால் விசாரிக்கப்பட்ட 55 வயதான தாரிக், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தவறுகள் செய்துள்ளதை மறுத்திருக்கும் தாரிக், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தன்னை குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் தீவிர இஸ்லாமியவாதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் தாரிக், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த குற்றச்சாட்டுக்கள் எழுந்த பின்னர் விடுப்பு எடுத்துள்ளார்.

குவாத்தமாலாவில் பெரும் அளவிலான மாயா நாகரிக வலையமைப்பு கண்டுபிடிப்பு

மயா நகரங்கள்

பட மூலாதாரம், WILD BLUE MEDIA/CHANNEL 4

குவாத்தமாலாவில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாயா நாகரிக எச்சங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது, தொல்பொருள் ஆய்வில் மைல்கல் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

காடுகளுக்கு அடியிலுள்ள இடங்களை லேசர் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்ததில், வீடுகள், இடங்கள், உயர்ந்த நெடுஞ்சாலைகள் மற்றும் தற்காப்பு அரண்கள் அங்கிருப்பது வெளிப்பட்டுள்ளன.

மாயா நகரங்கள் என்று ஏற்கெனவே அறியப்படும் அருகிலுள்ள நிலப்பரப்பில் மில்லியன்களுக்கு அதிகமான மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று முந்தைய ஆய்வு தெரிவித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: