You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஊழல் குற்றச்சாட்டில் கைதான செளதி கோடீஸ்வரர்கள் விடுதலை: பின்னணி என்ன?
உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான இளவரசர் அல்வலீத் பின் தலால் இரண்டு மாத சிறை தண்டனைக்குப்பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் முன்வைத்த நிதி தீர்வை அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஓர் அதிகாரி தெரிவித்தார்.
ஏன்.. எப்போது?
செளதியில், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் புதிதாக உழல் தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஊழல் குற்றச்சாட்டில் ராஜ குடும்பத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்களையும், அரசியல்வாதிகளையும் மற்றும் வளமான தொழில் அதிபர்களையும் கைது செய்தது.
அவர்கள் அனைவரும் ரியாத்தின் சொகுசு விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டனர்.
அப்படி கைது செய்யப்பட்டவர்களில் அல்வலீதும் ஒருவர்.
ட்விட்டர்... ஆப்பிள்
விடுதலை அடைவதற்கு முன் அல்வலீத் அளித்த பேட்டி ஒன்றில், செளதியின் பட்டத்து இளவரசருக்கு தன் ஆதரவை அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அல்வலீத் 45 வது இடத்தில் இருந்தார். அவரது சொத்துமதிப்பு 17 பில்லியன் டாலர்கள். அல்வலீதுக்கு உலகம் முழுவதும் சொத்துகள் உள்ளன. ட்விட்டர் மற்றும் ஆப்பிளின் பெரும் பங்குகளை அவர் வைத்துள்ளார்.
அரசியல் நடவடிக்கை
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பட்டத்து இளவரசர் வேண்டுமென்றே தன் எதிரிகளை பழிவாங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால், ஊழல் தடுப்பு நடவடிக்கைப்பின் பேசிய செளதியின் அட்டர்னி ஜெனரல், கடந்த காலங்களில் ஏறத்தாழ 100 பில்லியன் டாலர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறினார்.
பலர் விடுதலை
அல்வலீத் மட்டும் அல்லாமல், அவருடன் கைதான பல பெரும்புள்ளிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். எம்பிசி தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் வலீத் அல் இப்ராஹிம், அரச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் கலீத் அல் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதே நேரம், இன்னும் ஓர் உடன்படிக்கை எட்டாததை அடுத்து பலர் அந்த சொகுசு விடுதியில் உள்ளனர்.
வரும் காதலர் தினத்தன்று அந்த சொகுசு விடுதி மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், விடுதியில் உள்ளவர்கள் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று நம்பப்படுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்