You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு
ஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும். ஆனால், ஆறு மாத காலத்தில் இந்த இடத்தைத் தானாக பிரான்ஸிடம் ஸ்பெயின் ஒப்படைக்கும். 350 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த நடைமுறை குறித்து கிறிஸ் போக்மென் விளக்குகிறார்.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இடையே இயற்கையான எல்லையாக பீடாசோ நதி உள்ளது. இரண்டு நாடுகளைப் பிரித்து இந்த நதி பாய்ந்தோடுகிறது.
இந்த நதியில் இருந்து பார்த்தால், பிரான்ஸ் பக்கம் தொழில்துறை கிடங்குகளும், ஸ்பெயின் பக்கம் குடியிருப்புகளும் தெரியும்.
பீடாசோ நதியின் நடுவே, ஃபிஸான் என்ற தீவு அமைதியாகவும், மரங்களால் சூழப்பட்டும் இருக்கிறது. 1659ல் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக ஒரு பழைய நினைவுச்சின்னமும் இங்கு உள்ளது. ஆனால், இந்த தீவை கண்டுபிடிப்பது சுலபமல்ல.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே நடந்த நீண்ட கால போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்த தீவில் தான் 1659-ம் ஆண்டு இரண்டு நாடுகளும் மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது இந்தத் தீவு நடுநிலை மண்டலமாக இருந்தது.
பேச்சுவார்த்தையின் முடிவாக, பைரனீஸ் ஒப்பந்தம் எனும் அமைதி ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், ஒரு அரச திருமணத்துடன் நடந்தது. பிரான்ஸ் மன்னர் லூயிஸ் XIV, ஸ்பெயின் மன்னர் பிலிப் IV-யின் மகளை அப்போது திருமணம் செய்துகொண்டார்.
நடுநிலை மண்டலமாக இருந்த ஃபிஸான் தீவு இரு நாடுகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி 1 முதல் ஜுலை 31 வரை இத்தீவு ஸ்பெயின் அரசின் கீழ் இருக்கும். மீதி காலம் பிரான்ஸ் அரசின் கீழ் இருக்கும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
சான் செபாஸ்டியன் என்ற ஸ்பெயின் நகரத்தின் கடற்படை தளபதி மற்றும் பயோன் என்ற பிரான்ஸ் நகரத்தின் கடற்படை தளபதி இந்த தீவின் ஆளுநர்களாக இருக்கிறார்கள்.
இந்த ஃபிஸான் தீவு, 200மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய தீவு. எப்போதாவது இந்த தீவினை பார்க்க பார்வையாளர்கள் அழைக்கப்படுவார்கள்.
இந்த தீவுக்கு குறைந்த முன்னுரிமையே அளிக்கப்படுகிறது. மணல் அரிப்பு ஏற்படுவதால், கடந்த இரண்டு நூற்றாண்டில் தனது பாதியளவை இத்தீவு இழந்துவிட்டது.
ஆனால், தீவின் பாதுகாக்க பணத்தைச் செலவிட இரண்டு நாடுகளும் விரும்பவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்