You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆண்களை அச்சுறுத்துகிறதா பெண்களின் அரசியல் பிரவேசம்?
- எழுதியவர், நளினி ரத்னராஜா
- பதவி, பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்
(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
வன்முறை என்பது இலங்கைக்கு புதிதல்ல. அதிகாரம் உள்ளவரிடம் தன் உரிமையை பெற்றுகொள்ளவோ, உரிமையை அனுபவிக்க விடாமல் தடுப்பதற்கு அதிகாரம் இல்லாதவர்கள் கையில் எடுக்கும் முறைகளில் வன்முறையும் ஒன்றாகும்.
பிரச்சனைகளை, முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆண்டாண்டு காலமாக கையாளப்படும் ஆயுதம் வன்முறையாகும். இலங்கையின் பல பாகங்களிலும் அதிகளவான பெண்கள் என்றும் இல்லாதவாறு களம் இறங்கி உள்ளனர் என்பது எல்லோரும் அறிந்த விடயம். உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் களம் இறங்கி உள்ள இந்த பெண்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
சாதி, மத, இன, கட்சி, பிரதேச வேறுபாடுகளில்லாமல் அனைத்து பெண்களுக்கும் எதிர்ப்பு காணபடுகிறது. பெண்கள் அரசியலுக்கு வருவதை கண்டு ஆண்கள் மிரண்டு விட்டார்கள். பெண்களின் அரசியல் பிரவேஷம் ஆண்களை அச்சுறுத்துகின்றது. இலங்கை சமூகம் எப்போதும் பெண்களின் அரசியல் பங்களிப்பை ஊக்குவிப்பதாக இல்லை. இலங்கை பெண்மணிதான் உலகின் முதல் ஜானதிபதியும் பிரதம மந்திரியும் என்று மார் தட்டுவதை விட வேறு ஒன்றையும் அரசியலில் பெண்கள் சாதித்து விடவில்லை.
பெண்களுக்கெதிரான வன்முறை பலதளங்களில் பலவகையாக கட்டமைக்கபட்ட முறையில் நடக்கின்றன. இந்த தேர்தல் வன்முறைகள் பெண்களை வித்தியாசமாக பாதிக்கின்றது, வன்முறையின் தன்மையும் வித்தியாசப்படுகிறது.
இளங்கோபுரம் விசுவமடுவை சேர்ந்த மஞ்சுளா பத்மநாதன் என்பவர் பாரதிபுரம் வட்டாரத்தில் போட்டியிட இருந்தார். உடல் வன்முறைக்கு முகம் கொடுத்துள்ளார், சில மணிநேரம் கடத்தி வைக்கபட்டுள்ளார். மகளின் பாதுகாப்புக்கருதி( மிரட்டியதால் ) வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை. சோம சுந்தரம் சந்திரிகா நகரசபை வேட்பாளர். மட்டகளப்பு அரயம்பதி செல்வா நகரை சேர்ந்தவர். இவரின் பெண்ணின் வீடு உடைக்கப்பட்டுள்ளது. மொனராகல வெல்லவாயை சேர்ந்த ஒரு பெண் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் தாக்கப்பட்டு கவலைக்குரிய நிலையில் உள்ளார். இன்னுமொரு பெண்ணின் துணைவனுக்கு தவறாக நடத்தையை குற்றம் சொல்லியதால் துணைவர் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று தடை விதித்துள்ளார் , நாவலப்பிட்டியில் உள்ள பெண் வேட்பாளரை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பபட்டுள்ளது.
முக்கியமான பெண்களின் நடத்தையை கேள்வி கேட்பது, ஆபாசமான வார்த்தை பிரயோகங்கள், ஆபாசமான துண்டுப்பிரசுரங்கள், கேலிப்பேச்சுக்கள் கேவலமாக பெண்ணை சித்தரிப்பது மற்றும் குடும்ப அங்கத்தவரை கடத்துவோம், பிள்ளைகளை கொலை செய்வோம் போன்ற மிரட்டல்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. மற்றும் பெண்ணின் கடந்தகால வாழ்கையை பொது வெளியில் பேசுதல், இதன் மூலம் அவமானத்தை ஏற்படுத்துதல், அவள் சார்ந்த ஆண் துணையை கேள்விக்குள்ளாக்குவது ஏளனம் செய்வது, "நீ ஆணா, பெண்ணை உனக்கு கட்டுபடுத்த தெரியாதா" என்று ஆண்மையை இழித்து கேள்வி கேட்கும்போது சம்பந்தபட்ட ஆண்கள் ஒத்துழைப்பு வழங்குவதிலிருந்து பின்வாங்குவது மட்டுமல்ல வேட்பாளர் பெண்ணை தேர்தலில் இருந்து பின் வாங்குமாறு வற்புறுத்துவதும் நடைபெறுகிறது.
இதில் மதத்தலைவர்களின் கேவலமான பேச்சுக்களையும் கேட்ககூடியதாக உள்ளது. இஸ்லாமிய மதத்தலைவர் ஒருவர் இவ்வாறு அரசியலில் ஈடுபடும் பெண்கள் தம் மதத்துக்கு இழுக்கு என்றும் இவர்களை அரசியலுக்கு அனுமதித்த ஆண்கள் ஆண்களே இல்லை என்றும் கூறி உள்ளார். அது மட்டுமல்ல மார்க்கத்தின்படி இஸ்லாமிய பெண்கள் நிர்வாகம் செய்வதை மார்க்கம் ஏற்று கொள்ளாது எனவும் தனது வீடியோ செய்தி மூலம் வெளியிட்டுள்ளார்.
இனம் சார்ந்த அரசியல்
இங்கே முதலாவதாக ஒன்றை ஞாபகத்தில் வைத்துகொள்ள வேண்டும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எல்லோரும் கட்டுப்படவேண்டும். குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சார்ந்த பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன, அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர், இந்த சிறுபான்மை மதத்தவரின் அரசியல் கட்சி கட்டாயம் 25% இட ஒதுக்கீடை பெண்களுக்கு கொடுத்தே ஆகவேண்டும். பெண்களை தங்கள் கட்சியில் வட்டரமுறையில் குறைந்த பட்சம் 10% வீத பெண்களை வேட்பு மனுவில் அனுமதிக்க வேண்டும் விகிதாசார பட்டியலில் குறைந்த பட்சம் 50% பெண்களை உள்வாங்க வேண்டும்.
இலங்கையில் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இனம் சார்ந்தே இருக்கின்றது முக்கியமாக சிறுபான்மை கட்சிகள். இவ்வாறு இருப்பதனால் வேறு இனத்தை கொண்டவர் சிறுபான்மை கட்சியில் அவ்வினத்தை சாராத பெண் போட்டியிட போக மாட்டாள், போவது மிக்கக்குறைவு. நாட்டின் தேர்தல் சட்டதிட்டங்களை மதிக்காவிட்டால் இஸ்லாமிய கட்சிகள் இருக்கவே முடியாது, இஸ்லாமியர் தமிழர் கட்சியிலும் சிங்கள கட்சியிலும்தான் அங்கத்தவராக இருக்க வேண்டும். இல்லாவிடில் பெண்களை உள்வாங்க வேண்டும் இல்லாவிட்டால் வேட்பு மனு நிராகரிக்கப்படும். நிலைமை இப்படி இருக்கும் போது இந்த மத்ததலைவர் சொல்வது வேடிக்கையான விடயம்.
இரண்டாவது, இலங்கையில் வீட்டுப் பணிப்பெண்களாக அரபு தேசத்துக்கு போவதில் முதலாவது இடத்தில் இருப்பது பெரும்பான்மை இனத்தை சார்ந்த பெண்கள். இரண்டாவது இஸ்லாமிய பெண்கள், அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கிலிருந்து பெருவாரியான இஸ்லாமிய பெண்கள் பணிப்பெண்களாக போகின்றனர் என்று வெளிநாடு வேலைவாய்ப்பு அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆண் துணை இல்லாமல் தூர இடங்களுக்கு பெண்கள் போககூடாது என்று சொல்பவர்கள் எவ்வாறு கடல் கடந்து தம் பெண்களை பணத்துக்காக பணிபெண்ணாக அனுப்ப முடியும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
2009 ஆம் ஆண்டு அரபு நாட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்பவர்களால் இலங்கை பெற்ற அந்நிய செலாவணி 47%, இதில் 89% ஆனவர்கள் பெண்கள், இதைத்தவிர ரப்பர் 8% தேயிலையின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி 14% , ஆடை தொழிலின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி 44%.
ஆக மொத்தத்தில் கிட்டதட்ட நூறு வீதமான அந்நிய செலாவணியை நாட்டுக்கு பெற்று தருபவர்கள் முவ்வின பெண்களாக இருகின்றனர். இந்த அந்நிய செலாவணியை கொண்டுதான் நாட்டின் நிர்வாகமே நடகின்றது, பாராளுமன்றம் மாகாணசபைகள் பிரதேச சபைகள் போன்றவை இந்த பெண்களின் வருமானத்தில் தான் நிர்வகிக்கப்படுகின்றது. அது மட்டுமா, பல வீடுகளில் அடுப்பெரிவதே இவர்களின் வியர்வையில் தான். இலங்கையின் முதுகெலும்பே இலங்கையின் பெண்கள்தான் என்பதை யாரும் மறந்துவிடலாகாது. இந்த அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் துறைகளில் பெண்களின் பங்கு இல்லாவிட்டால் இலங்கை சோமாலியா போன்ற நாடாக எப்போதோ மாறி இருக்கும் என்பதை நாம் மறந்து விடலாகாது.
சிங்கள, தமிழ் பெண்களுக்கு எதிர்ப்பு
இங்கு இஸ்லாமிய மதத்தலைவர் அப்பட்டமாக பெண்கள் அரசியல் உரிமையை மறுக்கும் அதே சமயம் சிங்கள, தமிழ் சமூகமும் பெண்கள் அரசியலுக்கு வருவதை வார்த்தை வன்முறை, உளவியல் வன்முறை, உடல் வன்முறை மிரட்டல் போன்ற முறைகளை பிரயோகிப்பதன் மூலம் தடங்கல்களையும் முட்டுக் கட்டைகளையும் ஏற்படுத்துகின்றனர்.
தங்களின் உடலையும் உணர்வையும் நாட்டுக்காக அர்பணித்து வேலை செய்யும் பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முழுப்பங்களிப்பு செய்யும் பெண்கள் அரசியலுக்கு வருவதை தடை செய்வது எவ்வாறு நியாயம் ஆகும்? பெண்கள் உழைக்கும் பணமும், தாயாக, துணைவியாக, சகோதரியாக, மகளாக, மருமகளாக இறக்கும் வரை செய்யும் சேவை தேவைப்படுகின்றது அனால் தாங்கள் மட்டும்தான் அரசியலில் எஜமானர்களாக இருப்போம் என்று ஆண்கள் சொல்வதை எப்படி ஏற்று கொள்ள முடியும்? .
முளுச்சமூகமும் பெண்ணின் திறமையையும் நுண்ணறிவையும் மதித்து நாட்டை நிர்வாகம் செய்வதற்கும், கொள்கைகள் சட்டங்கள் உருவாக்குவதற்கும் சட்டங்களையும் கொள்கைகயையும் நடைமுறைப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் எல்லா மட்டங்களிலும் பெண்களை முழுமையாக உள்வாங்குகின்றதோ அன்றுதான் இலங்கை பட்டினி இல்லாத உண்மையான மனித பாதுகாப்பினூடான அபிவிருத்தியை அனுபவிக்கும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்