ஆப்கன்: 'சேவ் த சில்ரன்' அலுவலகங்கள் மீது தற்கொலை தாக்குதல். 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் கிழக்கில் அமைந்துள்ள ஜலாலாபாத்தில் உள்ள 'சேவ் த சில்ரன்' சேரிட்டி நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு முன்னால், தாக்குதல்தரிகள் வெடிப்பொருட்களை வெடிக்க செய்துள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடந்த நேரத்தில் சுமார் 50 ஊழியர்கள் அங்கிருந்ததாக நம்பப்படுகிறது.
இந்த தாக்குதலை தங்களுடைய 3 ஆயுதப்படையினர் நடத்தியுள்ளதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தங்களின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் தாங்கள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக 'சேவ் த சில்ரன்' உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு போலீஸ் அதிகாரியும், பொது மக்களில் ஒருவரும் இறந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்கியது.

பட மூலாதாரம், Reuters
அட்டூல்லாஹ் கோகானானி 'சேவ் த சில்ரன்'வளாகத்தின் நுழைவாயிலில் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களை தற்கொலைதாரி வெடிக்க செய்தார் என்று நான்கார்ஹர் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கித்தாரி ஒருவர் பிரதான வாயிலை ராக்கெட் வெடிகுண்டால் தாக்கியதை பார்த்ததாக அந்நேரத்தில் அவ்வளாகத்தின் உள்ளே இருந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் கம்மண்டோ படைவீரர்கள் காவல்துறையினரோடு சேர்ந்து, இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயல்கின்றனர்.
மேல்தளங்களில் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், அந்த கட்டடத்தின் அடித்தளத்தில் இருந்து சுமார் 45 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு பணியாளரிடம் இருந்து வந்த வாட்ஸ்அப் செய்தி என்று ஏஃஎப்ஃபி செய்தி நிறுவனம் வெளியிட்டதில், "இரண்டு தாக்குதல்தரிகளின் குரலை கேட்க முடிகிறது. அவர்கள் எங்களை தேடி கொண்டிருக்கிறார்கள். எங்களுக்காக செபியுங்கள்...பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு தகவல் அளிக்கவும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்பகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களோடு பல்வேறு பிற உதவி நிறுவனங்களின் அலுவலகங்களும் அங்குள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












