You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டாவோஸ்: மலை கிராமத்தில் கூடும் உலகப் பணக்காரர்களும் தலைவர்களும்
- எழுதியவர், எமிலி யங்
- பதவி, பிபிசி
உலகின் பெரும் பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள், தற்போதைய முக்கியப் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவை குறித்து விவாதிக்க சுவிட்சர்லாந்தில் உள்ள மலை கிராமம் ஒன்றை நோக்கிச் செல்லும் நேரம் இது.
வோர்ல்டு எகனாமிக் ஃபோரம் (World Economic Forum) எனப்படும் உலகப் பொருளாதார மாநாடு 1970களில் ஒரு சிறு அளவிலான சந்திப்பாகத் தொடங்கப்பட்டது. இப்போது அதில் 3000 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்கின்றனர். அவர்களில் சுமார் 900 பேர் பெரு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள். எழுபதுக்கும் மேலான நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.
உலகப் பொருளாதார மாநாடு, அது நடைபெறும் டாவோஸ் கிராமத்தின் பெயரைக்கொண்டு இப்போது டாவோஸ் மாநாடு என்றே அழைக்கப்படுகிறது.
யாரெல்லாம் இந்த ஆண்டின் முக்கியப் புள்ளிகள்?
இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கலந்துகொள்கிறார். சுமார் இரண்டு தசாப்தங்களில் பதவியில் இருக்கும்போது அமெரிக்க அதிபர் ஒருவர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் ஆகியோரிடம் இருந்து ஊடக வெளிச்சத்தை அவர் திருப்பக்கூடும்.
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, ஜிம்பாப்வே புதிய அதிபர் எமர்சன் மனங்காக்வா ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். பிரபல நடிகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களும் இதில் பங்குகொள்கின்றனர்.
என்ன விவாதிக்கப்படுகிறது?
"பிளவுபட்டுள்ள உலகில் பகிர்ந்தளிக்கும் இயல்புடைய எதிர்காலத்தை உருவாகுவதே" இந்த மாநாட்டின் இந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ மையப்பொருளாக உள்ளது.
சமீபத்தில் #MeToo இயக்கம் வலுப்பெற்றுள்ள சூழலில், பாலியல் தொந்தரவு மற்றும் பாலின சமத்துவம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்த உலகின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம், உலகமயமாக்கல், பல்வேறு நாட்டின் தலைவர்களும் கொண்டுள்ள வேறுபட்ட பார்வைகள் ஆகியன இதில் அதிக அளவில் விவாதிக்கப்படவுள்ளது.
என்ன நிகழும்?
இந்த மாநாட்டில் எண்ணற்ற சந்திப்புகள் நிகழும். அந்த சந்திப்புகளின் ரகசியத் தன்மையும் வேறுபடும். சில கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஆனால், சில கூட்டங்களில் அதற்கென பிரத்யேக 'பேட்ஜ்' வழங்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
சில தனிப்பட்ட தலைவர்களுக்கு இடையேயான கூட்டங்கள் நடந்ததென்றே யாருக்கும் தெரியாது.
இந்த மாநாட்டில் நிறைய கொண்டாட்டங்களும் இருக்கும். அந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்கள் அதற்காக செலவு செய்யத் தேவை இல்லை. உணவுகளையும், மதுபானங்களையும் ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அவர்களது வாடிக்கையாளர்கள் சந்தித்து நட்பு உண்டாக்கிக்கொள்ளவும் உதவுகின்றன.
உடனடித் தீர்வுகள் கிடைக்குமா?
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே சிறந்த யோசனைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்துவதே. எல்லா பிரச்சனைகளும் அந்த இடத்திலேயே தீர்த்து வைக்கப்படுவதுபோல இங்கு காட்டிக்கொள்ளப்படாது.
இதற்குச் சிறந்த உதாரணம், 1980களில் மோதலில் இருந்த துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் போரில் ஈடுபடாததே.
டாவோஸ் மாநாட்டில் கிரேக்கப் பிரதமர் ஆண்ட்ரியாஸ் பாப்பன்ரேயோவைச் சந்தித்ததே, அவர் மீதான நம்பிக்கை உருவாகக் காரணம் என்று துருக்கி பிரதமர் துர்கூட் ஊசால் பின்னர் கூறியிருந்தார்.
கடந்த 2011இல் பொருளாதார வல்லுநர்கள் லார்டு ஸ்டெர்ன் மற்றும் ஜோசஃப் ஸ்டிக்லிட்ஸ் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலின்போதுதான் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கு மாற்றாக பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளுக்கானா புதிய வளர்ச்சி வங்கி முன்மொழியப்பட்டது.
அதில் பங்கேற்க விரும்புகிறீர்களா?
நீங்கள் ஒரு நிறுவனத்தின் அதிகாரியோ, தேசத்தின் தலைவரோ அல்ல. ஆனால், பில் கேட்ஸ் கூட வியக்கும் அளவுக்கு உங்களிடம் ஒரு யோசனை உள்ளது. அப்படியானால், டாவோஸ் மாநாட்டில் கலந்துகொள்வது எப்படி? அதற்கு நீங்கள் உங்கள் சமூக நிறுவனம் அல்லது அரசு சாரா நிறுவனம் மூலம் 27,000 சுவிஸ் பிராங்குகள் (சுமார் 50 லட்சம் ரூபாய்) செலுத்துவதுடன், உறுப்பினர் கட்டணம் மற்றும் ஓர் ஆடம்பர விடுதியில் தங்குவதற்கான செலவு ஆகியவற்றை செலுத்த வேண்டும்.
டாவோஸ் மாநாட்டில் தங்கள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதற்காக, ஒரு முதலீட்டு நிறுவனம் ஐந்து லட்சம் பிரிட்டன் பவுண்டுகளை (சுமார் 4.5 கோடி ரூபாய்) செலவிடுகிறது.
உங்களிடம் அவ்வளவு பணம் இல்லாவிட்டால், சிலர் செல்வதைத் போல படப்பிடிப்பு வாகனங்களில் ஒளிந்துகொண்டு உள்ளே செல்லலாம்.
அங்கு வாடிக்கையாளர்களுக்காக நீங்கள் உலகெங்கும் சுற்றித் திரிவதைத் தவிர்த்து ஒரே இடத்தில சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். உங்களை போலவே கனவுகள் மீது நம்பிக்கையுள்ளவர்களை சந்திக்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்