You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''1% பணக்காரர்களிடம் சிக்கியுள்ள 82% மக்களின் பணம்" - அதிர்ச்சியளிக்கும் அறிக்கை
உலகின் மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள பணக்காரர்களுக்கும் மீதமுள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் இடையேயான இடைவெளி சென்ற ஆண்டும்(2017)அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு பல்வேறு விஷயங்கள் மூலமாக திரட்டப்பட்ட 82 சதவீத பணமானது உலகிலுள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் சென்றுள்ளதாக அந்த அரசு சாரா அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வறுமையின் பிடியிலுள்ளவர்களின் பொருளாதார நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்விக்குள்ளான தங்கள் நிறுவனத்தின் தரவுகள் சமூக அமைப்பின் தோல்வியை காட்டுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு, கொள்கையின் மீது நிறுவனங்கள் செலுத்தும் செல்வாக்கு, தொழிலாளர் உரிமைகள் குறைப்பு மற்றும் இடைவெளியை அதிகரிப்பதற்காக செலவினத்தை குறைத்தல் ஆகியவற்றை இந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆக்ஸ்போம் அமைப்பு இதுபோன்ற அறிக்கைகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், உலகிலுள்ள எட்டு பணக்கார தனிநபர்களிடம் உலகின் ஒட்டுமொத்த ஏழைகளில் பாதியளவினர் வைத்துள்ள சொத்துக்கள்/ வளங்களைவிட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தாண்டுக்கான தரவில் உலகின் பாதியளவு ஏழைகள் வைத்துள்ள சொத்துகள்/ வளங்களை 42 பணக்காரர்கள் கொண்டுள்ளதாக அது கூறியுள்ளது.
மேலும், சென்ற ஆண்டு தான் தெரிவித்த பாதியளவு ஏழைகளுக்கு சமமான பணக்காரர்களின் எண்ணிக்கையை தரவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக 61 என்று மாற்றுவதாகவும், "சமத்துவமின்மை" தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்தமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல"
அடிக்கடி மாற்றப்படும் தரவுகள், இந்த அறிக்கை "தயார் செய்யப்படும்போது கிடைக்கும் சிறந்த தரவுகளை" கொண்டு பதிப்பிக்கப்படுகிறது என்பதை காட்டுவதாக ஆக்ஸ்போம் அமைப்பின் தலைமை செயலதிகாரியான மார்க் கோல்ரிங் தெரிவித்துள்ளார்.
"ஆனால், அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ள விஷயங்களை உற்றுநோக்கும்போது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு சமத்துவமின்மை நிலவுவது தெரியவந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்குபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
வழக்கமாக சமத்துவமின்மை குறித்த விவகாரம் மாநாட்டின் நோக்கத்தில் சிறப்பிடத்தை பெற்றாலும், அதுசார்ந்த "கடுமையான பேச்சுக்கு தெரிவிக்கப்படும் முதல் எதிர்ப்பிலேயே விவாதம் மங்கிப் போகிறது" என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்