You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதர்கள் - யானைகள்: நாம் சுவைக்கும் அஸ்ஸாம் தேநீருக்கு பின்னால் இருக்கும் துயர் மிகு கதை
- எழுதியவர், நவீன் சிங் கட்கா
- பதவி, சூழலியல் செய்தியாளர், பிபிசி உலக சேவை, அஸ்ஸாம்
காடுகளை ஆக்கிரமித்து உலக புகழ்பெற்ற `அஸ்ஸாம் டீ`- ஐ பயிரிடுவதுதான் மனிதர்கள் - யானைகள் மோதலுக்கு காரணம் என்கிறார்கள் அஸ்ஸாம் மக்களும் அதிகாரிகளும்.
சிறிய அளவில் தேநீர் செடிகளை பயிரிடுபவர்கள், காடுகளை ஆக்கிரமித்து பயிரிடுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், பிபிசியிடம் பேசிய உள்ளூர் மக்கள், பெரிய எஸ்டேட்களும் காடுகளை ஆக்கிரமித்து இருப்பதாக கூறுகிறார்கள்.
டீ நிறுவனங்கள் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ளன. காடுகள் மீது தாங்கள் அக்கறை கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வானது, அஸ்ஸாம் காடுகள் அழிவதற்கு டீ தோட்டங்களும் காரணம் என்கிறது.
அஸ்ஸாம் காடுகளின் பரப்பளவு குறைவதற்கு, காடுகள் ஆக்கிரமிக்கப்படுவது, உயிரியல் அழுத்தம், டீ தோட்டங்கள் மற்றும் சாகுபடி பரப்பை மாற்றிக் கொண்டே இருப்பதுதான் காரணம் என்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம் 2015 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை.
மரணங்கள்:
அஸ்ஸாம் மாநிலத்தில், 2006 -2016 ஆகிய காலக்கட்டத்தில் மட்டும் 800 பேர் காட்டு யானைகளால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது அரசாங்கத்தின் தரவுகள்.
கடந்த ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட இன்னொரு புள்ளிவிபரமானது, ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒருவர் காட்டு யானை அல்லது புலியை எதிர்கொள்வதால் மரணிக்கிறார் என்கிறது.
அஸ்ஸாமுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கத்தில், 2014 - 2015 இடைப்பட்ட காலக்கட்டத்தில் காட்டு யானை தாக்குதலால் 54 பேர் இறந்திருக்கிறார்கள்.
தெற்கு அஸ்ஸாமின், செஸ்ஸா டீ தோட்ட கிராமத்தைச் சேர்ந்த மரியம் கெர்கெட்டாவின் மகள் காட்டு யானை தாக்கியதில் இறந்துவிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மரியத்தின் 26 வயது மகள் போபிடா கெர்கெட்டாவும் அவளது தோழியும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது யானையை எதிர்கொள்ள நேரிட்டது. இதன்காரணமாக, போபிடா வாகனத்திலிருந்து குதித்ததார்.
கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் மரியம் சொல்கிறார், "வாகனத்தை சாதுர்யமாக ஓட்டி என் மகளின் தோழி தப்பித்துவிட்டார். ஆனால், என் மகளால்தான் தப்ப முடியவில்லை. சாலையின் இருபக்கமும் டீ எஸ்டேட்டின் வேலிகள் இருந்ததுதான் இதற்கு காரணம்."
மேலும் அவர், "இந்தப் பகுதியில் நாங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறோம். ஆனால், யானை - மனித மோதலால், இப்போது இங்கு வசிப்பது அபாயகரமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு ஏதாவது ஒரு தீர்வை கொண்டுவர வேண்டும்." என்கிறார்.
யானைகளும் அபாயத்தில்:
மனிதர்கள் மட்டும் அல்ல, யானைகளும் அதிக அளவில் இறந்துள்ளன.
இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு கணக்கின்படி, 2012 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 100 யானைகளும், 2013-14 காலக்கட்டத்தில் 72 யானைகளும் இறந்துள்ளன.
ஒரு வன பாதுகாப்பு அமைப்பு 2001 - 2014 காலக்கட்டத்தில் மட்டும், 225 யானைகள் இறந்துள்ளன என்கிறது. இதற்கு காரணம், வேட்டையாடுதல், அதிக வேகத்தில் வரும் தொடர்வண்டிகள், விஷம், மின்சார வேலிகள் என்கிறது.
ஆசிய யானைகளில் 60 சதவிகிதம் இந்தியப்பரப்பில் வசிக்கின்றன.
அஸ்ஸாமுக்கு அடுத்தப்படியாக கர்நாடகாதான் அதிக அளவிலான யானைகளின் இருப்பிடமாக உள்ளது. அதாவது அந்த மாநிலத்தில் 5700 யானைகள் உள்ளன.
வடக் கிழக்கு மாநிலங்களில் யானைகள் ஆக்ரோஷமாக நடந்துக் கொள்கின்றன. இதற்கு காரணம், அதன் வாழ்விடம் சுருங்குவது மற்றும் அதன் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
உரல்குடி மாநிலத்தில் உள்ள காப்புகாடுகளின் வனகாப்பாளர் மனஷ் ஷர்மா சொல்கிறார், "காப்புகாடுகளையும், கிராமத்தையும் பிரிக்கும் இப்பகுதியும் முன்பு காடாகவே இருந்தது. இங்கு அதிகளவில் யானைகள் வசித்தன. அதற்கு தேவையான உணவு, தண்ணீர் அனைத்தும் இங்கு கிடைத்தன."என்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களின் எல்லையோரத்தில் இருந்த வனபகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காப்புகாடுகள் எல்லைவரை வந்துவிட்டனர் என்கிறார் அந்த வனக் காப்பாளர்.
யானைகள் தேநீர் செடிகளின் இலைகளை உண்ணுவதில்லை. இதன்காரணமாக, உணவு தேவைக்காக அவை கிராமங்களுக்குள் வருகிறது; மனிதர்கள் யானைகள் மோதல் ஏற்படுகிறது.
வனக்காப்பாளர் ஷர்மா, சிறிய அளவில் டீ பயிரிடுபவர்கள்தான் காடுகளை ஆக்கிரமிக்கிறார்கள் என்கிறார்.
சட்டவிரோதமாக காடுகளில் டீ பயிரிட்ட சிறிய விவசாயிகளிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்கிறார்கள் பெயர் குறிப்பிட விரும்பாத அஸ்ஸாம் மாநிலத்தின் வருவாய்த் துறை அதிகாரிகள்.
சிறு விவசாயிகளா அல்லது பெரும் நிறுவனங்களா?
அஸ்ஸாம் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் மட்டும் அரசிடம் பதிவு பெற்ற 56,000 சிறிய பரப்பில் டீ பயிரிடும் விவசாயிகள் இருக்கிறார்கள்.
இதே அளவு எண்ணிக்கையில் அரசிடம் பதிவு செய்யாத விவசாயிகளும் உள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
சிறிய அளவில் பயிரிடும் பல விவசாயிகள், தங்கள் உற்பத்தியை பெரு நிறுவனத்திடம் விற்பனை செய்கிறார்கள்.
டீ பயிரடப்படும் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பெரும் நிறுவனங்களை நோக்கி சில கேள்விகளை எழுப்புகிறார்கள்.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, பெரு நிறுவனங்களுக்கு நிலம் அளிக்கப்பட்டப் போதிலும், ஏன் பெரும் நிறுவனங்களில் நிலங்கள் இன்னும் அளக்கப்படாமல் இருக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார் அஸ்ஸாம் மாநிலத்தின் போடோலாண்ட் பகுதியைச் சேர்ந்த டிபென் போரோ.
அவர் சொல்கிறார், "எங்கள் அவதானிப்பின் படி, 30 முதல் 40 சதவிகித ஆக்கிரமிப்புகளை செய்திருப்பவர்கள் பெரும் டீ நிறுவனங்கள்தான். நாங்கள் உள்ளூர் அதிகாரிகளிடம், அவர்களின் நிலங்களை அளக்கும்படி அழுத்தம் தருகிறோம்." என்கிறார்.
இவர் இது தொடர்பாக தகவலறியும் உரிமை சட்டத்தையும் நாட இருக்கிறார்.
பெரும் டீ உற்பத்தி நிறுவனங்கள் உறுப்பினராக இருக்கும் இந்தியன் டீ சங்கம், இந்த குற்றாச்சாட்டினை மறுக்கிறது.
நாங்கள் காடுகளை ஆக்கிரமித்து, மரங்களை வெட்டி, டீ பயிரிட்டு அதனை நிர்வாணமாக்கவில்லை என்கிறார் அந்த சங்கத்தின் செயலாளர் சந்தீப் கோஷ்.
"காடுகள் வளமாக இருக்கும் பகுதியில்தான் டீ பயிரிட முடியும். காடுகளை அழிக்கிறோமென்றால், அந்தப் பகுதியில் டீ பயிரிட முடியாது. எங்கள் நலனுக்காகவாவது எங்களுக்கு வன வளம் தேவை. நாங்கள் எப்படி காடுகளை அழிப்போம்?" என்கிறார்.
மக்கள் தொகை பெருக்கத்தாலும், காடுகளின் பரப்பளவு குறைவதாலும், இனி மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழமுடியுமா என்று அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்